முல்லைத்தீவில் காயமடைந்து கொண்டுவரப் பட்டவர்களில் 60 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்: – திருகோணமலை பொது வைத்தியசாலையில் 46 பேரும் புல்மோட்டை தற்காலிக வைத்தியசாலையில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவில் மோதல்கள் காரணமாக காயமடைந்து கப்பல் மூலம் திருமலைக்கு அழைத்துவரப்பட்டவர்களில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கிழக்கு மாகாண பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜி.ஞானகுணாளன் தெரிவித்தார்..

முல்லைத்தீவிலிருந்து காயமடைந்த நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் இதுவரை 6597 பேர் திருகோணமலைக்கு கப்பல் மூலம் அழைத்துவரப்பட்டிருந்தனர். இவர்களிலேயே சிகிச்சைப் பலனின்றி 60 பேர் உயிரிழந்தனர். திருகோணமலை பொது வைத்தியசாலையில் 46 பேரும் புல்மோட்டை தற்காலிக வைத்தியசாலையில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். இது குறித்து ஞானகுணாளன் மேலும் தெரிவித்ததாவது:.

முல்லைத்தீவில் இருந்து இதுவரை 16 தடவைகள் காயமடைந்தவர்கள் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டனர். திருகோணமலை வைத்தியசாலைக்கு 3635 பேரும் புல்மோட்டைக்கு 2962 பேரும் அழைத்துவரப்பட்டனர். இவர்களில் காயமடைந்தவர்களுக்கு உதவிபுரிவதற்கு வந்தவர்களும் அடங்குவர். திருகோணமலை பொது வைத்தியசாலையில் 10 தடவைகளில் அழைத்துவரப்பட்டோரில் 46 பேர் உயிரிழந்தனர்.

இதேபோல் 14 பேர் புல்மோட்டை வைத்தியசாலையில் மரணமாகினர். 16 தடவையாக அழைத்துவரப்பட்டவர்களில் 5 பேர் சிகிச்சைப் பலனின்றி இவ்வாரம் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 3 பெண்களும் ஒரு குழந்தையும் ஆண்ணொருவரும் அடங்குவர்..

இறுதியாக 164 ஆண்களும் 227 பெண்களும் கப்பல் மூலம் முல்லைத்தீவில் இருந்து அழைத்துவரப்பட்டனர். இவர்களில் 60 பேர் 8 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகளாவர். 8 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் 54 பேரும் இறுதியாக அழைத்து வரப்பட்டவர்களில் அடங்குவார்கள். திருகோணமலை வைத்தியசாலையில் தற்போது 254 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவர்களில் 128 பேர் சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சையை அடுத்து வவுனியா, பதவிய போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

source & Thanks : .seithy.

Leave a Reply

Your email address will not be published.