முறுக்கு மீசை வைத்ததற்காக டிஸ்மிஸ் செய்தது சரியே: சுப்ரீம் கோர்ட்

டெல்லி: பணி விதிமுறைகளுக்குப் புறம்பாக முறுக்கு மீசை வைத்திருந்தால் ஏர் இந்தியா நிறுவன அதிகாரியின் வேலையைப் பறித்தது சரியே என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

வீரத்திற்கு அடையாளமாக கூறுவார்கள் மீசையை. ஆனால் ஆசை ஆசையாய் முறுக்கு மீசை வளர்த்த ஒருவர் அந்த மீசையால் வேலையை இழந்து விட்டு நிற்கிறார். மீசையால் வேலை பறிக்கப்பட்டதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்து விட்டது.

ஏர் இந்தியா நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தவர் ஜோய்நாத் விக்டர் டி. கடந்த 2000மாவது ஆண்டு இவர் முறுக்கு மீசை வைத்திருந்ததற்காக பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 55 வயது.

மீசையை சுருக்கிக் கொள்ளுமாறு பலமுறை அவருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டும் அதை ஜோய்நாத் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஜோய்நாத். அங்கு இவரது மனு டிஸ்மிஸ் ஆகி விட்டது.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார் ஜோய்நாத். அந்த மனுவில், எனது இஷ்டப்படி மீசை வளர்க்க எனக்கு உரிமை உண்டு. எனது குடும்பத்தில் எல்லோருமே இப்படித்தான் முறுக்கு மீசை வைத்துள்ளனர்.

எனவே எனது மீசைக்காக பணியிலிருந்து நீக்கியது செல்லாது என உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் ரவீந்திரன் ஆகியோர் கொண்ட் பெஞ்ச் விசாரித்தது.

பின்னர் அவர்கள் அளித்த தீர்ப்பில், மீசை வளர்ப்பது உங்களது குடும்பப் பழக்கம் என்கிறீர்கள். அப்படியானால் அதை குடும்பத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேலையில் சேர்ந்தால் அந்த நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்று தீர்ப்பளித்து ஜோய்நாத்தின் மனுவை டிஸ்மிஸ் செய்து விட்டனர்.

விமான நிறுவன சட்டம் 1937ன் விதிமுறைகளின் கீழ், விமானங்கள் மற்றும் விமான நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், சுத்தமாக ஷேவ் செய்த முகத்துடன்தான் பணியில் இருக்க வேண்டும். சீக்கியர்களுக்கு இதில் விலக்கு உண்டு. மீசை வைத்துக் கொள்வதாக இருந்தால் மேலுதட்டுக்கு கீழே கொஞ்சம் கூட முடி வளர விடக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.