சத்யம் ஊழியர்கள் 300 பேர் பேங்க் ஆப் அமெரிக்காவில் சேருகிறார்கள்!

மும்பை: நிறுவனர் ராமலிங்க ராஜுவின் மோசடியால் பாதிக்கப்பட்ட சத்யம் நிறுவனத்தில் பணியாற்றிய 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இப்போது பேங்க் ஆப் அமெரிக்காவில் இணைந்துள்ளனர்.

மெர்ரில் லிஞ்ச் வங்கியின் பணி ஒன்றுக்காக நியமிக்கப்பட்ட இந்த ஊழியர்களை அப்படியே பேங்க் ஆப் அமெரிக்கா தங்கள் நிறுவனத்தில் இணைத்துக் கொண்டுள்ளது (நிதி நெருக்கடியில் சிக்கி திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்ட மெர்ரில் லிஞ்சும் பேங்க் ஆப் அமெரிக்காவுடன்தான் இணைக்கப்பட்டுள்ளது!).

இந்த ஊழியர்கள் அனைவரும் நாளை முதல் பேங்க் ஆப் அமெரிக்காவின் பணியாளர்களாக மாறுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் சத்யம் நிறுவனத்தில் பெற்றதை விட 10 சதவிகிதம் அதிக சம்பளம் வழங்குகிறது இந்த வங்கி.

இதுபற்றி கருத்து தெரிவித்த சத்யம் செய்தித் தொடர்பாளர், இந்த செய்தி ஊகத்தின் அடிப்படையிலானது என்றும், இப்போதைக்கு கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் கூறினார்.

சத்யம் நிறுவன பங்குகள் ஏலப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் இந்த மாதிரி செய்திகள் வருவது பங்குகள் விலையைப் பாதிக்கும் என கருதுகிறது சத்யம்.

Source & Thanks : thatstamil.oneindia.

Leave a Reply

Your email address will not be published.