ஐ.எப்.எஸ்: கணவரை இழந்த தமிழக பெண் சாதனை

பேராவூரணி: பட்டுக்கோட்டை மாவட்டம் ஒட்டங்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்த, கணவரை இழந்த உமா என்ற பெண், இந்திய வனப் பணித் தேர்வில் (ஐ.எப்.எஸ்) தேசிய அளவில் 2வது ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார்.

உமாவின் தந்தை தியாகசுந்தர். தாயார் அம்பிகா. கணவரை இழந்தவர் உமா. அவருக்கு தீட்சணா என்ற மகள் உள்ளார்.

உமா ஒட்டங்காடு ஆரம்பள்ளியில் ஆரம்ப கல்வியினை தொடங்கி புனல்வாசல் தனியார் பள்ளியில் உயர்நிலைப்படிப்பையும், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைப்படிப்பையும் முடித்துள்ளார்.

பெரியகுளம் அரசினர் தோட்டக்கலை கல்லூரியில் பி.எஸ்.சி. தோட்டக்கலைப் பட்டம் பெற்றார்.

இந்திய வனப் பணித் தேர்வை எழுதிய உமா, அதில் அகில இந்திய அளவில் 2வது இடத்தைப் பெற்றுள்ளார். மகளிர் பிரிவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

எந்த பயிற்சி நிறுவனத்திலும் பயிற்சி எடுக்காமலேயே இந்த சாதனையை செய்துள்ளார் உமா.

இதுகுறித்து உமா கூறுகையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்பதுதான் எனது கணவு. இதுவரை நான்கு முறை ஐ.ஏ.எஸ். தேர்வை எழுதி அதில் இருமுறை நேர்முகத்தேர்வு வரை போயுள்ளேன். ஆனால் அங்கு தோல்வியடைந்தேன்.

கடந்த ஆண்டு ஜூலை 15-ந்தேதி ஐ.எப்.எஸ். தேர்விற்கான முதன்மை எழுத்து தேர்வினை எழுதினேன். அதில் தேர்ச்சி பெற்று மார்ச். 5-ந்தேதி நேர்முக தேர்விற்கு அழைக்கப்பட்டு அதிலும் தேர்ச்சி பெற்றேன்.

இதே கால கட்டத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வும் கடந்த ஆண்டு எழுதி இருந்தேன்.

எனது இந்த வெற்றிக்கு எனது மகளும், பெற்றோரும்தான் முக்கிய உந்துசக்தியாக இருந்தார்கள் என்றார்.

Source & Thanks : thatstamil.oneindia.

Leave a Reply

Your email address will not be published.