ஐக்கிய நாடுகளின் ஜோன் ஹோமஸ் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் குற்றச்சாட்டு

க்கிய நாடுகள் சபை தமது உறுப்பு நாடான இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படும் போது அதனை தடுக்க முடியாத நிலையில் உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் நேற்று இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

வன்னிக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கும் வண்ணம் உடனடியான போர்நிறுத்தம் ஒன்றை அமுல் செய்ய வேண்டும் என விடுத்த கோரிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான துறை செயலர் ஜோன் ஹோம்ஸ் அண்மையில் விடுத்திருந்த அறிக்கையை குற்றம் சுமத்தியே நடேசன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் இன்று இனப்படுகொலைக்கு உள்ளாகியுள்ளார்கள்.

உலக நாடுகள் தமது மௌனத்தின் மூலம் இதற்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கின்றன.

போரில் வெற்றி பெறுவதாக கூறி இலங்கை அரசாங்கம் தமிழர்களை நாளாந்தம் படுகொலை செய்துவருகின்றது.

இந்த தாக்குதல்களின் போது எந்த வொரு சிங்களவரும் பாதிக்கப்படுவதில்லை.

சர்வதேச சமூகம் பிரச்சினைக்கான அடிப்படைக் காரணத்தை அறியாது தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை களையக் கோருகின்றது.

இது தமிழர் ஒரு தேசியம் என்ற நிலைப்பாட்டை அழிக்கவே உதவும் என நடேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்கள் தொடர்ந்தும் புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகின்றார்கள்.

அவர்களின் தாயகப் பூமியில் உரிமைகள் அற்ற நிலையில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

லண்டனில் உள்ள டெலிகிராப்ஃ பத்திரிகை கூட இலங்கையில் அரசாங்கத்தால் நடத்தப்பட்டுவரும் அகதி முகாம் தொடர்பில் தமது கவலையை வெளியிட்டுள்ளது.

அங்கு மக்கள் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில் எனினும், ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் வவுனியாவிற்குச் சென்று உரிய முறையில் பார்வையிட முயற்சிக்கவில்லை.

அவர் சுதந்திரமான மொழிப்பெயர்ப்பாளரையேனும் முகாம்களுக்கு அழைத்துச் செல்லவில்லை என நடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இவையாவும் சர்வதேசத்தின் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் காரணங்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் அனைவரும் பகலிரவாக கடற் பிரதேசத்திற்கு அருகில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் எறிகணை வீச்சுகளால் நாளாந்தம் மக்கள் கொல்லப்படுகின்றார்கள்.

நாளாந்தம் மக்கள் பட்டினியால் கொல்லப்படுகின்றார்கள்.

இந்த நிலையில் உலகம் தாமதிக்கும் ஒவ்வொரு விநாடிகளும் வன்னியில் மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.