இலங்கை பிரச்சினையில் எல்லோருமே நாடகமாடுகிறார்கள்; மத்திய, மாநில அரசு இரண்டையுமே நான் எதிர்க்கிறேன்: விஜயகாந்த்

இலங்கை பிரச்னைக்காக தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களை இராஜிநாமா செய்ய வைத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திமுக இருந்திருக்கலாமே? என்று கேள்வி எழுப்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் இராமநாதபுரம் தொகுதி தேமுதிக வேட்பாளர் சிங்கை ஜின்னாவை ஆதரித்து புதன்கிழமை அவர் பேசியதாவது:

இலங்கை பிரச்சினையில், “அனைத்துக் கட்சி தீர்மானத்தின்படி திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இராஜிநாமா கடிதம் அளித்தார்கள்; மற்ற கட்சி உறுப்பினர்கள் அளிக்கவில்லை’ என்று முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

திமுகவினர் அளித்த கடிதங்களை மக்களவைத் தலைவரிடம் அளித்து, மற்ற கட்சியினருக்கு திமுகவே முன்னுதாரணமாக இருந்திருக்கலாமே? நீங்கள் இராஜிநாமா செய்திருந்தால் மற்ற கட்சியினரும் செய்திருப்பார்களே, ஏன் செய்யவில்லை?

இலங்கை பிரச்சினையில் எல்லோருமே நாடகமாடுகிறார்கள். மத்திய அரசு, மாநில அரசு இரண்டையுமே நான் எதிர்க்கிறேன். காவிரி, முல்லைப் பெரியாறு, இலங்கை பிரச்சினை என்று எந்தப் பிரச்சினையிலுமே இரு அரசுகளும் ஆர்வம் காட்டவில்லை. முக்கியப் பிரச்சினைகள் எதுவுமே தீர்க்கப்படாத நிலையில் சாதனை என்று எதைக் கூறுகிறார்கள்? என்று பேசினார் விஜயகாந்த்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.