புலிகளுடன் மகிந்த அரசு ஒருபோதும் போர் நிறுத்தம் செய்யாது: கேகலிய ரம்புக்வெல

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மகிந்த அரசாங்கம் ஒருபோதும் போர் நிறுத்தம் செய்யாது அவ்வாறான நோக்கம் எதுவும் இல்லை என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தேசியப் பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

சிறிலங்கா படையினர் வெற்றியடைந்து வருகின்றனர். இந்நிலையில் போர் நிறுத்தம் செய்வது ஏற்புடையதல்ல. அனைத்துலக நாடுகள் கூட தற்போது அந்த வார்த்தையை கைவிட்டு மக்கள் பாதுகாப்பாக வெளியேற மோதல் தவிர்ப்பு ஒன்றை செய்யுமாறு கூறுகின்றன அது ஏற்கக்கூடியது என்றார்.

குறிப்பாக போர் நிறுத்தம் செய்யுமாறு முன்னர் கடுமையான அழுத்தம் கொடுத்த அனைத்துலக நாடுகள் மோதல் தவிர்ப்பு இடைவெளியை கோருவதாக அவர் சுட்டிக்காகட்டினார்.

விடுதலைப் புலிகள் பலவீனமடைந்திருக்கும் நிலையில் அரசாங்கம் போர் நிறுத்தம் ஒன்றை செய்தால் விடுலைப் புலிகள் மீண்டும் தம்மை பலப்படுத்திக் கொள்வார்கள் என்றும் கூறிய அமைச்சர் கேகலிய ரம்புக்வெல்ல, கடந்த காலங்களில் புலிகள் போர் நிறுத்தத்தை பயனபடுத்தி அவ்வாறான நடவடிக்கைகளில்தான் ஈடுபட்டிருந்தனர் எனவும் தெரிவித்தார்.

பயங்கரவாதம் ஒழிக்கப்படும் வரை பேர் தொடரும். மக்களின் பாதுகாப்புக்காக படையினர் அவ்வப்போது சில நடவடிக்கைகளை எடுப்பார்கள். ஆனால் அது போர் நிறுத்தம் அல்ல என்றும் அமைச்சர் கேகலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.