இலங்கையில் நடைபெறுவது வெளிப்படையான இனவெறிப் போர்: இந்திய எழுத்தாளர் அருந்ததி ரோய்

இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, மக்களின் பார்வைக்கு படாமல் திறமையாக மறைக்கப்படுகின்ற, வெட்கமற்ற முறையில் வெளிப்படையாக நடத்தப்படுகின்ற இனவெறிப் போர் என இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ரோய் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவின் தேசிய ஆங்கில நாளிதழான ‘ரைம்ஸ் ஒஃப் இந்தியா’ வுக்கு எழுதிய கட்டுரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலக அளவில் இலக்கியத்துக்காக அளிக்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்றான ‘புக்கர் பரிசு’ பெற்ற ‘த கொட் ஓஃப் ஸ்மோல் திங்ஸ்’ எனும் புதினத்தை எழுதியவர் அருந்ததி ரோய்.

இலக்கியப் பணிகளுக்கு இடையே சமூகத்தின் தீவிரப் பிரச்சினைகள் குறித்து பேசுவதுடன் அவற்றுக்கு எதிராக களமிறங்கி சமூக சேவையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அவரின் கட்டுரையை இங்கு தமிழில் தருகிறோம்:

இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பயங்கரத்துக்கு, சூழ்ந்துள்ள மௌனமே காரணம். அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பற்றி, இந்தியாவில் உள்ள முதன்மையான செய்தி ஏடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் சரி, அனைத்துலக செய்தி ஏடுகளிலும் சரி ஏறக்குறைய செய்திகளே வெளிவருவதில்லை. ஏன் இப்படி இருக்கிறது என்பது ஆழ்ந்த கவலை அளிக்கும் விடயமாகும்.

இலங்கையில் இருந்து கசிந்து வரும் சிறிதளவு தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, நாட்டில் ஜனநாயகத்தின் அடையாளம் ஏதேனும் தென்பட்டால் அதனைத் தகர்ப்பதற்கும், அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக சொல்ல முடியாத குற்றங்களை இழைப்பதற்குமே ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்ற பரப்புரையை சிறிலங்கா அரசு ஒரு மூடு திரையாகப் பயன்படுத்தி வருகிறது என்றே தோன்றுகிறது.

தங்களை அப்பாவிகள் என்று மெய்ப்பிக்காத வரையில், ஒவ்வொரு தமிழரும் பயங்கரவாதிதான் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படும் சிறிலங்கா அரசு, அப்பாவி மக்கள் உள்ள பகுதிகள், மருத்துவமனைகள், தங்கும் இடங்கள் மீது குண்டு வீசி அவற்றைப் போர்ப் பகுதியாக மாற்றி வருகிறது.

சண்டை நடைபெறும் பகுதியில் 2 லட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் சிக்கியிருப்பதாக நம்பகமான மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, இடம்பெயர்ந்து வரும் தமிழர்களுக்காக, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் பல்வேறு ‘நலம் காக்கும் சிற்றூர்கள்’ அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சிற்றூர்கள், போர் நடைபெறும் பகுதியில் இருந்து தப்பி ஓடிவரும் அப்பாவி மக்கள் அனைவரையும் கட்டாயமாக அடைத்து வைக்கும் நடுவங்களாக இருக்கும் என்று த டெய்லி டெலிகிராப் (2009 பெப்ரவரி 14) நாளேட்டுச் செய்தி தெரிவிக்கிறது.

இவை சித்திரவதை முகாம்களுக்கு மறைமுகப் பெயரா? சிறிலங்கா அரசின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர த டெய்லி டெலிகிராப் நாளேட்டில் பின்வருமாறு
கூறியிருக்கிறார்: பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன்பு கொழும்பு நகரில் உள்ள அனைத்துத் தமிழர்களையும் அரசு பதிவு செய்யத் தொடங்கியது.

ஆனால், 1930-களில் ஹிட்லரின் நாசிப் படையினர் பயன்படுத்தியது போல, இது வேறு காரணங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். அவர்கள், அப்பாவித் தமிழ் மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் ஆகும் வாய்ப்புள்ளவர்கள் என்று முத்திரை குத்தப் போகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

விடுதலைப் புலிகளைத் ‘துடைத்து எறிய வேண்டும்’ என்பதை சிறிலங்கா அரசு அறிவிக்கப்பட்ட குறிக்கோளாகக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அப்பாவி மக்களும், ‘பயங்கரவாதிகளும்’ வீழ்ந்து கொண்டிருப்பது, சிறிலங்கா அரசு இனப் படுகொலையை நடத்தும் விளிம்பில் இருப்பதன் அறிகுறியாகத் தோன்றுகிறது.

ஏற்கெனவே பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. மதிப்பீடு ஒன்று தெரிவிக்கிறது. மேலும் பல்லாயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நேரில் கண்ட சாட்சிகள் சிலர் வெளியிட்டுள்ள தகவல்கள் நரகத்துக் கொடுமைகளின் அனுபவச் சித்திரிப்புகளாக உள்ளன.

இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, மக்களின் பார்வைக்குப் படாமல் திறமையாக மறைக்கப்படுகிற, வெட்கமற்ற முறையில் வெளிப்படையாக நடத்தப்படுகிற இனவெறிப் போர் என்றுதான் சொல்ல வேண்டும்.

தண்டனைக் உட்படாமல் சிறிலங்கா அரசு இந்தக் குற்றங்களை இழைத்து வருகிறது. ஆழமாக வேரோடியுள்ள இனவெறித் தப்பெண்ணங்கள்தான் இலங்கையில் தமிழர்கள்
ஒதுக்கப்படுவதற்கும், ஒடுக்கப்படுவதற்கும் வழிவகுத்துள்ளன என்பதையே இது உண்மையில் வெளிப்படுத்துகிறது. அந்த இனவெறிக்கு சமூகப் புறக்கணிப்பு, பொருளாதார முற்றுகை, கலவரம், சித்திரவதை என நீண்ட வரலாறு உண்டு.

வன்முறையற்ற அமைதி வழியிலான எதிர்ப்பாகத் தொடங்கி, பல பத்தாண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போரின் கொடிய தன்மைக்கான வேர்கள் இதில்தான் அடங்கியுள்ளன.

ஏன் இந்த மௌனம் இலங்கையில் இன்று சுதந்திரமாகச் செயற்படும் நாளேடுகள், தொலைக்காட்சிகளே ஏறக்குறைய இல்லை என்று இன்னொரு நேர்காணலில் மங்கள சமரவீர கூறியிருக்கிறார்.

சமுதாயத்தை ‘அச்சத்தில் உறைய வைக்கிற’ கொலைக் கும்பல்கள், ‘வெள்ளை வேன் கடத்தல்கள்’ தொடர்பாக எல்லாம் சமரவீர தொடர்ந்து பேசுகிறார். பல்வேறு பத்திரிகையாளர்கள் உட்பட எதிர்ப்புக் குரல் கொடுப்பவர்கள் கடத்தப்படுகின்றனர், படுகொலை செய்யப்படுகின்றனர்.

பத்திரிகையாளர்களைப் பேசவிடாமல் செய்வதற்கு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், காணாமல் அடித்தல், படுகொலை செய்தல் முதலிய எல்லாவற்றையும் சிறிலங்கா அரசு பயன்படுத்துவதாக அனைத்துலக பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

மனித குலத்துக்கு எதிரான இந்தக் குற்றங்களில் சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு பொருள் உதவியும், ஆயுத உதவியும் அளித்து வருவதாக, கவலை அளிக்கிற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

உண்மையாக இருக்கும் எனில் இது அறநெறிக்கு எதிரானது, ஏற்றுக் கொள்ள முடியாதது. மற்ற நாடுகளின் அரசுகள் என்ன செய்கின்றன? பாகிஸ்தான்? சீனா? சிறிலங்கா நிலைமைக்கு உதவி செய்ய அல்லது தீங்கு விளைவிக்க என்ன செய்கின்றன?

இலங்கையில் நடைபெறும் போர் தமிழ்நாட்டில் உணர்ச்சிக் கொந்தளிப்புக்களை ஏற்படுத்தி உள்ளது. 10-க்கும் அதிகமானோர் தீக்குளித்து இறந்துள்ளனர். அரசியல் தந்திர வெளிப்பாடுகள் சில இருந்தாலும், பெரும்பாலும் மக்களின் சீற்றமும், வேதனையும் மெய்யானவை. இது தேர்தல் சிக்கலாக மாறியிருக்கிறது.

இந்தக் கவலை இந்தியாவின் பிற பகுதிகளுக்குப் போய்ச் சேரவில்லை என்பதுதான் அசாதாரணமானது. இங்கே ஏன் இந்த மௌனம்? இந்தச் சிக்கலில் இங்கே ‘வெள்ளை வான் கடத்தல்கள்’ எதுவும் இல்லையே. இலங்கையில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற பாதிப்பின் அளவை வைத்துப் பார்க்கும்போது, இந்த மௌனம் மன்னிக்க முடியாதது.

முதலில் ஒரு பக்கத்துக்கு ஆதரவாகவும் பிறகு இன்னொரு பக்கத்துக்கு ஆதரவாகவும் நிலை எடுத்து பொறுப்பற்ற முறையில் பட்டும் படாமல் மேலோட்டமாகச் செயற்படும் இந்திய அரசின் நீண்ட கால வரலாற்றைப் பார்க்கும்போது இந்த மௌனம் மிகவும் மன்னிக்க முடியாதது. நான் உட்பட, நம்மில் பலரும், இது தொடர்பாக முன்பே குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் போர் பற்றிய தகவல்கள் சரியாகக் கிடைக்காததே அதற்குக் காரணம்.

படுகொலைகள் தொடர்கின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் சித்திரவதை முகாம்களில் அடைக்கப்படுகிறார்கள். 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பட்டினிக் கொடுமையை எதிர்நோக்கி உள்ளனர். ஓர் இனப் படுகொலை நிகழ்வதற்குக் காத்திருக்கிறது. இந்த நிலையில் இந்த மாபெரும் நாட்டில் ஏன் இந்த சாவு அமைதி? இது மாபெரும் மனிதப்பேரழிவுத் துன்பம். காலம் கடப்பதற்கு முன் உலகம் இப்போதே தலையிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.