சென்னை, மும்பை தாஜ்: பாகிஸ்தானிலிருந்து மிரட்டல் இ-மெயில்

சென்னை: சென்னை மற்றும் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல்களை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் இருந்து இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் தாஜ் ஹோட்டலையும், அதில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரையும் முக்கிய இலக்காக வைத்து இந்த தாக்குதலை நடத்தினர்.

இந்நிலையில் கடந்த 30ம் தேதி சென்னை கோவளம் கடற்கரைக்கு அருகில் இருக்கும் தாஜ் ஹோட்டலுக்கு மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்துள்ளது. இதை தொடர்ந்து இரண்டாவது மிரட்டல் இ-மெயிலும் வந்துள்ளது.

அதில் இன்னும் இரண்டு நாட்களுக்குள் இந்த ஹோட்டலை தகர்க்க போகிறோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயத்தில் மும்பையில் இருக்கும் தாஜ் ஹோட்டலுக்கும் இதே போல் இரண்டு மிரட்டல் இ-மெயில் வந்துள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து தாஜ் குழுமத்தினர் போலீசில் புகார் செய்துள்ளனர். இதை தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கிய மும்பை சைபர் கிரைம் போலீசார் அந்த இ-மெயில் அனுப்பப்பட்ட இன்டர்நெட் இணைப்பை கண்டறிந்துள்ளனர்.

அப்போது அந்த இ-மெயில் பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இருந்து அனுப்பப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அனைத்து தாஜ் ஹோட்டல்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Source & Thanks : thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.