போரில் பிரபாகரனின் மகன் காயம்!?

கொழும்பு: புதுக்குடியிருப்பு பகுதியில் ராணுவத்துடன் நடந்த மோதலில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன சார்லஸ் ஆண்டனி காயமடைந்துள்ளதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது.

24 வயதான சார்லஸ் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடி வருகிறார். புலிகளின் விமானப் படைப் பிரிவுக்கு அவர் தலைவராக உள்ளதாகவும் கூறப்ப்பட்டது.

இந் நிலையில் கடந்த மார்ச் 8ம் தேதி புலிப் படையின் ஒரு பிரிவுக்கு தலைமை தாங்கி புதுக்குடியிருப்பு பகுதியில் ராணுவத்துடன் போராடிய சார்லஸ் தாக்குதலில் காயமடைந்துவிட்டதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

தங்களிடம் பிடிபட்ட ஒரு விடுதலைப் புலியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த விவரம் தெரிய வந்ததாக ராணுவம் கூறுகிறது. புலிகளின் முக்கிய தளபதிகளான பானு, லட்சுமணன் ஆகியோருடன் இணைந்து ஆண்டனியும் போரி்ல் நேரடியாக களமிறங்கியுள்ளதாக அந்தப் புலி கூறியுதாக ராணுவம் சொல்கிறது.

இதற்கிடையே ராணுவத் தாக்குதலில் சார்லஸ் மிக பலத்த காயமடைந்து பாதுகாப்பு வளைய பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அரசுக்கு ஆதரவான த பாட்டம் லைன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கனடாவில் டொராண்டோ நகரில் வசிக்கும் ராமச்சந்திரன் என்ற புலிகளின் ஆதரவாளருக்கு இது தொடர்பாக இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதை ராணுவம் இடைமறித்து தகவலை அறிந்ததாகவும் அதில் கூறப்பட்டு்ள்ளது.

பிரபாகரன் விஷயத்தில் ராணுவம் ஏற்கனவே பலமுறை பொய்களை அவிழ்த்துவிட்டுள்ளதால் இந்தச் செய்தியும் உண்மையா என்பது சந்தேகத்திற்கிடமாகவே உள்ள்ளது.

Source & Thanks : thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.