இந்தியாவின் 7 அதிசயங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இடம்

டெல்லி: என்டிடிவி நடத்திய இந்தியாவின் 7 அதிசயங்கள் எவை என்ற வாக்கெடுப்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் வெற்றி பெற்று இடம் பெற்றுள்ளது.

என்டிடிவி நிறுவனம், இந்தியாவின் 7 அதிசயங்களை தேர்வு செய்துள்ளது. இதற்காக பல மாதங்களாக அது நேயர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது.

ஆன்லைன் மூலம் இந்த வாக்கெடுப்பு நடந்தது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த 20க்கும் மேற்பட்டவை இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டன.

அதிலிருந்து அதிக வாக்குகளைப் பெற்ற 7 இடங்களை இந்தியாவின் 7 அதிசயங்களாக என்டிடிவி அறிவித்துள்ளது.

இதில் உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் ஒன்று. உலகின் 7 அதிசயங்களுக்கான போட்டியிலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

என்டிடிவியோடு மத்திய அரசின் சுற்றுலாத்துறையும் இணைந்து நடத்திய 7 அதிசயங்கள் தேர்வுக்கான வாக்கெடுப்பில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று வாக்குகளைப் பதிவு செய்தனர்.

7 அதிசயங்களை அறிவிக்கும் நிகழ்ச்சி டெல்லியில் கண்கவர் கலை விழாவாக நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன் (கூடவே அமர்சிங்கும்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

என்டிடிவியின் 7 அதிசயங்கள் விவரம் ..

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், நாலந்தா பல்கலைக்கழகம், டெல்லி செங்கோட்டை, ஜெய்சால்மர் கோட்டை, தோலவிரா சைட், கோனாரக் சூரியக் கோவில் மற்றும் கஜுராஹோ.

தாஜ்மஹால் இந்தியாவின் அதிசயமாக தேர்வு செய்யப்பட்டது.

இதுதவிர அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் புனிதமான பொற்கோவில் இந்தியாவின் அமைதி அதிசயமாகவும், தவாங் புத்த கோவில் இறை அதிசயமாகவும் அறிவிக்கப்பட்டது.

Source & Thanks : thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.