ரூ. 50 லட்சம் மோசடி-மருத்துவ கல்லூரி பேராசிரியை கைது

புதுச்சேரி: அரசு வேலை மற்றும் கல்லூரிகளில் சீட் வாங்கி தருவதாக ரூ. 50 லட்சம் மோசடி செய்த புதுச்சேரி பல் மருத்துவ கல்லூரி பேராசிரியை அவர் ஓய்வு பெறும் நாளில் கைது செய்தனர்.

புதுச்சேரி கோரிமேடு மகாத்மாகாந்தி அரசு பல் மருத்துவ கல்லூரியில் உயிர் வேதியியல் துறை தலைவராக பேராசிரியை ஜோதிபாய் (60) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது கணவர் பெயர் நடராஜன். இவர் தனது குடும்பத்துடன் புதுச்சேரி செல்லான் நகரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு பேராசிரியை ஜோதிபாய், காட்பாடியை சேர்ந்த சரவணன் (30) என்பவருக்கு புதுச்சேரி அரசு பல் மருத்துவ கல்லூரியில் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தார். அதற்காக இரண்டு தவணைகளில் அவரிடம் ரூ. 10 லட்சம் வாங்கியுள்லார்.

சரவணன் முதல் தவணையில் ரூ. 6 லட்சமும், அடுத்த தவணையில் ரூ. 4 லட்சமும் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கி கொண்ட ஜோதிபாய் இந்த பணத்தை தனது வங்கி கணக்கில் வைத்திருப்பதாகவும், வேலை கிடைக்கவில்லை என்றால் இந்த செக்கை பயன்படுத்தி அதை எடுத்து கொள்ளுமாறு கூறி சரவணனிடம் ஒரு செக்கை கொடுத்துள்ளார்.

மாதங்கள் கடந்த போதும் சரவணனுக்கு வேலை கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் ஜோதிபாயிடம் கேட்டுள்ளார். ஆனால், ஜோதிபாய் வேலை இப்போ கிடைக்கும், அப்போ கிடைக்கும் என தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் தனக்கு வேலை கிடைக்காது என வெறுத்து போன சரவணன் செக்கை போட்டு பணத்தை எடுக்க முயன்றுள்ளார். அப்போது அது போலி செக் என்பது தெரியவந்தது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த சரவணன் கோரிமேடு போலீசில் புகார் செய்தார்.

இதை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஜோதிபாய் மேலும் பலரிடம் என்ஜினியரிங், மருத்துவ கல்லூரிகளில் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. அவர் மொத்தமாக ரூ. 50 லட்சம் வரை பலரிடம் பணம் வாங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று கல்லூரி பேராசிரியர் பதிவியில் இருந்து ஓய்வு பெறுவதாக இருந்த ஜோதிபாயை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source & Thanks : thatstamil.oneindia.

Leave a Reply

Your email address will not be published.