அந்தியூர் பர்கூர் வனத்தில் கடுமையான உணவு பஞ்சம்: பசிக்கு ‘கையேந்தும்’ குரங்குகளை காண பரிதாபம்

அந்தியூர்: அந்தியூர் பர்கூர் வனத்தில் விலங்குகள் தீவனத்துக்கு கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அந்தியூர் பர்கூர் காட்டில் ஆயிரக்கணக்கான வன விலங்குகள் வசித்து வருகின்றன. மான், குரங்கு, மயில் போன்றவை அதிகளவிலும், யானை, செந்நாய், காட்டெருமை, சிறுத்தை புலிகள் குறைந்த அளவிலும் இருக்கின்றன. சில மாதங்களாக யானைகள் பலியாவது அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு மாதமும் சராசரியாக இரண்டு யானைகள் ஏதாவது ஒரு நோய் தாக்கி இறந்து போகின்றன. யானைகள் தொடர்ந்து இறந்து போவதற்கான காரணம் என்ன என்பதை இன்னும் வனத்துறை அதிகாரிகள் விரிவாக விளக்கவில்லை. யானைகள் கொல்லப்படுகிறதா? இயற்கையாகவே இறந்து போகிறதா? என்றால் கேள்விக்கு பதில் இல்லை. யானைகள் அனைத்தும் உணவு குழாயில் ஏற்படும் பிரச்னையால் இறந்து போனதாக கூறப்படுவது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. தற்போது கோடை வெயில் வாட்டி எடுக்கும் சூழ்நிலையில், மழையின்றி, வனத்தில் இயற்கையாக அமைந்துள்ள குளங்கள், குட்டைகள் வற்றிவிட்டன. வெயில் நேரங்களில் தலைகாட்டாத விலங்குகள் மாலை நேரங்களில் தண்ணீரை தேடி அடர்ந்த காட்டுப்பகுதியை விட்டு வெளியில் நடமாடுகின்றன.

வரட்டுப்பள்ளம் அணையில் இருக்கும் நீரின் உதவியால் விலங்குகளுக்கு தண்ணீர் பிரச்னை ஓரளவு தீர்ந்துள்ளது. ஆனால், வனத்தில் மரங்கள், செடி, கொடிகள் காய்ந்து, பச்சை இழந்து நிற்கின்றன. அனல் கக்கும் வெயிலின் கொடுமையால் காட்டில் இருக்கும் மரங்கள் காய்ந்து போய்விட்டன. விலங்குகள் உணவாக எடுத்து கொள்ளும் காட்டு மா, அத்திமரம், விளாமரம் ஆகியவை முற்றிலும் காய்ந்துவிட்டன. மேலும், இம்மாதிரி மரத்தை மரம் வெட்டுபவர்களும் அதிகரித்து விட்டனர். இதனால், வன விலங்குகளின் உணவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

காட்டில் உணவு கிடைக்காமல் வெளியே வரும் குரங்குகள், சாலையில் செல்லும் லாரி, பஸ், கார்களை வழிமறித்து பிச்சை எடுப்பது போல கையேந்துவதை பார்க்க பரிதாபமாக இருக்கிறது. குரங்கு என்றாலே, கையில் இருப்பதை பிடுங்கி கொள்ளும் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இவை பிச்சை கேட்பது போல, கையேந்துகின்றன. பயணிப்பவர்களில் கருணை கொண்டவர்கள் பலரும் கையில் இருக்கும் உணவுப் பண்டங்களை கொடுத்து செல்கின்றனர். ஒரு சிலர், அதன் பசியறியாமல் அதனிடமே ” சேட்டை’ செய்து தவிக்க விடுகின்றனர். கடுமையான தொந்தரவு செய்து மகிழ்கின்றனர். கல் எறிதல் போன்ற கொடுமையான செயல்களை செய்கின்றனர். வனத்தில் நிலவும் வறட்சியின் காரணமாக விலங்குகள் உணவுக்கு காட்டை விட்டு வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதிலும், குரங்கினங்கள் நிலைமை மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. நெடுஞ்சாலையில் பசியால் அலறும் குரங்கினங்களின் பசியைப் போக்கும் வழியை வனத்துறை ஆய்வு செய்ய வேண்டும்.

Source   &     Thanks   :    dinamalar

Leave a Reply

Your email address will not be published.