சிவசேனா கல்வீச்சால் பெரும் கலக்கம் அவகாசம் கேட்கிறார் பெண் வக்கீல்

மும்பை:மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் அமீர் கசாப்பிற்காக வாதாட நியமிக்கப்பட்ட பெண் வக்கீல் அஞ்சலி வாக்மேரேக்கு, சிவசேனா உட்பட சில கட்சிகளிடம் இருந்து மிரட்டல் வந்துள்ளது. இதனால், கசாப்பிற்கு ஆதரவாக வழக்கில் ஆஜராவதா அல்லது வேண்டாமா என, முடிவு செய்ய ஒரு நாள் அவகாசம் கேட்டுள்ளார் வாக்மேரே.


மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப். ஆர்தர்ரோடு சிறையில் அடைக்கப் பட்டுள்ள இவன், தனக்காக வாதாட வக்கீல் வேண்டும் என, கேட்டான். இதையடுத்து, அஞ்சலி வாக்மேரே என்ற பெண் வக்கீலை, மும்பை தாக்குதல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டின் நீதிபதி தகிலியானி நியமித்தார். இதுதொடர்பான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது.

ஆனால், அன்று இரவே சிவசேனா மற்றும் ராஜ்தாக்கரேயின் நவநிர்மாண் சேனா கட்சியினர், அஞ்சலி வாக்மேரேயின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு, கல்வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பெண்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவசேனா தொண்டர்களின் இந்த போராட்டம் மற்றும் தாக்குதல் நடவடிக்கை காரணமாக வாக்மேரே பீதி அடைந்துள்ளார். அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், அஜ்மல் கசாப்பிற்காக ஆஜராவதா அல்லது வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்ய, தனக்கு ஒரு நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என, சிறப்பு கோர்ட் நீதிபதி தகிலியானிடம் வாக்மேரே கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி தகிலியானி, “இன்று மதியம் 1.00 மணிக்குள் உங்களின் முடிவை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்’ என, உத்தரவிட்டார்.

மேலும், வாக்மேரேயின் வீடு தாக்கப்பட்டது தொடர்பாக, வோர்லி பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறினார். மேலும், “தன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர, வாக்மேரே விரும்புகிறாரா’ என்றும் நீதிபதி கேட்டார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.