அமெரிக்காவில் 5 பேரைச் சுட்டுக் கொன்று நீலகிரி இன்ஜினியர் தற்கொலை

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர், உறவினர்கள் ஐந்து பேரைச் சுட்டுக்கொன்று, தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி மாவட்டம், பந்தலூர் அடுத்துள்ள அய்யன்கொல்லி பகுதியைச் சேர்ந்தவர்கள் அப்பு -தேவகி தம்பதியர். இவர்களது மகன் அசோக்(36); பெங்களூரில் உள்ள எச்.பி., சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக இருந்தார். இவர் ஆறு மாதத்துக்கு ஒரு முறை கம்பெனி மூலம் அமெரிக்கா சென்று அலுவலகப் பணிகளை கவனிப்பார். கடந்த ஒரு மாதத்துக்கு முன் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார். இவரது மனைவி சுசித்ரா(32), மகள் அகானா(11 மாதம்).

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள எருமாடு கப்பாலா பகுதியைச் சேர்ந்தவர்கள் ராகவன் – லட்சுமி தம்பதியர். இவர்களின் மகன் தேவராஜன்(43); சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் அமெரிக்காவில், “யாகூ’ நிறுவனத்தில் பணியாற்றி வருவதுடன், அமெரிக்கா குடியுரிமை பெற்றுள்ளார். இவர், அசோக்கின் தங்கை ஆபாவை(32) திருமணம் செய்துள்ளார். இவர்களது மகன் அகில்(12); மகள் நேகா(4).

கலிபோர்னியா அடுத்துள்ள சாண்டா கிளாரா பகுதியில், தேவராஜன் புதிய வீடு வாங்கி, கடந்த 29ம் தேதி கிரகப்பிரவேசம் செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியில், அசோக் குடும்பத்தாரும் கலந்து கொண்டனர். அன்று இரவு விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, தேவராஜன் – அசோக் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது, தேவராஜன் திடீரென கைத்துப்பாக்கியால் அசோக், அவரது மனைவி சுசித்ரா, 11 மாத கைக்குழந்தை அகானா ஆகியோரைச் சுட்டார். பின், தனது மனைவி ஆபா மற்றும் இரண்டு குழந்தைகளையும் கண்மூடித்தனமாகச் சுட்டார். தானும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதில், தேவராஜின் மனைவி ஆபாவைத் தவிர அனைவரும் இறந்துவிட்டனர். ஆபா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. நேற்று(31ம் தேதி) அதிகாலை 4.00 மணிக்கு அய்யன்கொல்லியில் உள்ள அப்பு வீட்டுக்கு இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேவராஜ் மற்றும் அவரது குழந்தைகள் உடல்களைத் தவிர அசோக் மற்றும் அவரது குடும்பத்தார் உடல்களை அய்யன்கொல்லி கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.