ஈழத்தமிழர்கள் மீண்டு வாழ தமிழகமும், தி.மு.க.வும் துணை நிற்கும்: கருணாநிதி தெரிவிப்பு

இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீண்டு வாழ்வதற்கு உலக நாடுகள் எத்தகைய ஏற்பாடுகளை செய்தாலும், அதற்கு துணை நிற்க தமிழகமும் தி.மு.க.வும் தயாராக இருப்பதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் , நேற்று நடைபெற்ற, முரசொலி அறக்கட்டளை சார்பில் 2008-ம் ஆண்டுக்கான கலைஞர் விருது, முரசொலி மாறன் சிறப்பு விருதுகள் வழங்கும் விழாவில் கலைஞர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் சோலை, புகைப்பட நிபுணர் யோகா ஆகியோருக்கு ‘கலைஞர் விருது’களையும், முரசொலி மாறன் சிறப்பு விருதினை நடிகர் தியாகுவுக்கும், முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

முன்னதாக, ஈழத்தந்தை செல்வாவின் 112-வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப்படத்தை கருணாநிதி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

இந்த விழாவில் நண்பர் தந்தை செல்வா அவர்களுடைய புதல்வர் சந்திரஹாசன் வந்து நம்மை பெருமைப்படுத்தியிருக்கிறார். தந்தை செல்வா அவர்கள் 1972-ம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். எதற்காக? இலங்கையிலே அவதிப்படுகிற மக்களுக்கு- இலங்கையிலே அடிமைப்படுத்தப்பட்டிருக்கிற தமிழ் இனத்துக்கு- உரிமைகளைக் கேட்க-அதற்காக துணைபெற இங்கே பெரியாரை காண, அதைத் தொடர்ந்து என்னைக் காண இங்கே வந்தார்.

அவர் அன்று புரிந்த தொண்டின் காரணமாக- ஆற்றிய பணியின் காரணமாக- அடிமைப்பட்டு கிடக்கிற இலங்கை தமிழர்களுக்கு சுதந்திர உணர்ச்சியை உருவாக்க வேண்டும் என்பதற்காக அவர் உருவாக்கிய தமிழ் ஈழம் என்ற அந்த கொள்கை பரவுவதற்காக இங்கே வந்தார். ஆனால் 72-ம் ஆண்டிலே வந்தார். பிறகு, ஐந்தாண்டுகளுக்கு பிறகு அவர்கள் மறைந்தார்.

அவர்கள் மறைந்தபோது அதாவது 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய உடன்பிறப்பு கடிதத்தில், ‘செல்வா மறைந்துவிட்டார். எனினும் அவரால் உருவாக்கப்பட்ட ஆற்றல் மிகு தலைவர்கள், தளபதிகள், வீரக்கவிஞர்கள், இலட்சிய காளைகள் பலர் இருக்கிறார்கள். இலங்கை தமிழர்களுக்காக செல்வா ஆற்றிய பணியை அவர் வழியில் மற்றவர்கள் தொடர்வார்கள். அவர் காத்திட்ட அமைதி- அதேநேரத்தில் தமிழர்களின் நல்வாழ்வுக்கு வழி அமைத்திட அவர் ஓயாது வழங்கிய உழைப்பு-இவை என்றென்றும் அந்த தியாக செல்வத்தை உலகத் தமிழர்களின் நெஞ்சத்தில் அணையாத தீபமாக ஆக்கி வைத்திருக்கும் என்பது மட்டும் உறுதி’ என்று எழுதினேன்.

இந்த வரலாறு தெரியாதவர்கள், செல்வா மறைந்த செய்தி புரியாதவர்கள், செல்வா பட்டபாடு என்னவென்று படிக்காதவர்கள், இன்றைக்கு இலங்கையை பற்றி-நமக்கு என்ன தெரியும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை, இராவணன் ஆண்ட பூமி மாத்திரமல்ல- என் தமிழனும் ஆண்ட பூமிதான். அந்த இலங்கையிலே ஈழத் தமிழர்கள் மீண்டு வாழ எந்த ஏற்பாடுகளை உலக நாடுகள் ஒன்று கூடிச் செய்தாலும் அதற்கு வழி வகுக்க-ஆலோசனைகளைக் கூற-அறிவுரைகளை வழங்க-பக்கத் துணை நிற்க-என்றென்றும் தமிழகம் தயாராக இருக்கின்றது, தி.மு.க.வும் தயாராக இருக்கிறது.

இவ்வாறு கருணாநிதி பேசினார். ஏராளமானோர், விழாவில் கலந்து கொண்டனர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.