வன்னியில் தமிழ்மக்களை கொன்று குவிப்பது தொடர்பில் ஐ.நா.சபை கவனம் கொள்ளாதது கவலையளிக்கின்றது: விடுதலைப்புலிகள்

ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் கோல்ம்ஸ் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் முகமாக தமிழீ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை விடுத்துள்ளார்.

அவ்வறிக்கையில்,

எமது பகுதியில் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி பொருட்களும் மனிதாபிமான உதவிகளும் சென்றடையும் வண்ணம் வன்னியில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என சிறிலங்கா அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் கூட்டாக விடுத்துள்ள வேண்டுகோளை எமது அமைப்பு வரவேற்கின்றது.

உடனடியான போர் நிறுத்தம் வேண்டும் என்ற எமது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம். ஒவ்வொரு தடவையும் நாம் இதனைக்கூறுவதும் உங்களுக்கு தெரிந்ததே.

ஆனால், அரசு அதனை நிராகரித்து வருகின்றது. போர் நிறுத்தத்தை நிராகரிப்பதுடன் சுதந்திரமான பத்திரிக்கையாளர்களும், மனிதாபிமான அமைப்புக்களை சேர்ந்தோரும் எமது பகுதிக்கு வந்து கண்காணிப்பில் ஈடுபடுவதையும், உதவி புரிவதையும் அரசு தடுத்தும் வருகின்றது.

அனைத்துலகத்தின் மனிதாபிமான விதிகளை மதித்து நடக்க வேண்டும் என எமது அமைப்பிடம் இருந்து எதிர்பார்க்கும் உலகம், அதே அனைத்துலகத்தின் மனிதாபிமான விதிகளை மதித்து நடக்குமாறு தன்னை ஜனநாயக நாடாக கூறிக்கொள்ளும் சிறிலங்கா அரசை கோருவதுடன் நாள் தோறும் எறிகணை வீச்சுக்களினால் கொல்லப்படும் மக்களின் மனித அவலங்களை நிறுத்தவும் முன்வர வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை இனச்சுத்திகரிப்பு என்னும் வரையறைக்குள் அடங்கவில்லையா? சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களை அனைத்துலக சமூகம் நிறுத்துவதற்கு முன்வராத போது அவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பிற்கு துணை போவதாகவே நாம் கருத முடியும்.

சிறிலங்கா ஐ.நா. சபையில் உறுப்புரிமையுள்ள நாடு. ஆனால் அதன் உறுப்புரிமையுள்ள நாடு ஒன்று நாள் தோறும் ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று குவிப்பது தொடர்பாக ஐ.நா. அதிக கவனம் கொள்ளவில்லை. ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், குழந்தைகளும், கர்ப்பிணி தாய்மார்களும் எறிகணை வீச்சுக்களினாலும், பட்டினியாலும் நாள்தோறும் இறப்பை சந்தித்து வருகின்றனர்.

சிறிலங்காவில் இருந்து தமிழ் மக்களை முழுவதுமாக இல்லாது ஒழிக்கும் நடவடிக்கையையே அரசு மேற்கொண்டு வருகின்றது.

சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளை எதிர்க்கும் முகமாகவே தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். எமது அமைப்பும் அவ்வாறே உருவாகியது ஆனால், உலகம் எமது அபிலாசைகளை இன்றுவரை புரிந்து கொள்ளவில்லை.

தமிழ் மக்கள் தமது அடிப்படை மனித மற்றும் பொது உரிமைகளுக்காகவும், சமத்துவமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவும், அடக்குமுறையான சட்டங்களில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவுமே போராடி வருகின்றனர்.

தற்போது சிறிலங்கா அரசாங்கத்தின் அழித்தொழிப்பு போரில் இருந்து தப்பிப் பிழைப்பதற்கும், தமது வாழ்க்கையை வாழ்வதற்கும், பிள்ளைகளை காப்பாற்றவும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால், அனைத்துலக சமூகம் அடிப்படை காரணங்களை புரிந்துகொள்ள மறுப்பதுடன், ஆயுதங்களை கீழே போடுமாறு மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றது. எதற்காக? நாட்டில் உள்ள தமிழ் இனத்தை அழித்த பின்னர் சிங்கள மக்கள் எஞ்சிய மக்களை அடக்கி ஆட்சி புரிவதற்காகவா?

வன்னியில் இருந்து மக்கள் வெளியேறுவதை விடுதலைப் புலிகள் தடுத்து வருவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. அனைத்துலக சமூகம் தமிழ் மக்களின் நிலையில் இருந்தால் அவர்கள் விருப்பத்துடன் அரசின் பாதுகாப்பு தேடி செல்வார்களா?

அரச படையினரின் எறிகணைத்தாக்குதலில் உங்களின் ஒரு பிள்ளை கொல்லப்பட்ட பின்னர் மறுநாள் ஏனைய பிள்ளைகளுடன் நீங்கள் அதே அரசின் பாதுகாப்பு தேடிச் செல்வீர்களா?

ஐ.நா.வின் நிதி உதவியில் இயங்கிவரும் தங்கும் முகாம்களில் கூட மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கப்படுவதில்லை.

அங்கு மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் ஏனைய மக்களும் அங்கு செல்ல வேண்டும் என அனைத்துலக சமூகம் எவ்வாறு எதிர்பார்க்கலாம்.

மக்களை பலவந்தமாக தடுத்துவைக்க வேண்டிய அவசியம் விடுதலைப் புலிகளுக்கு இல்லை. தமிழ் மக்களே உங்களுக்கு இதனை தெரிவிப்பார்கள்.

ஐ.நா.வின் பிரதிநிதி ஜோன் கோல்ம்ஸ் அவர்கள் கூட வவுனியாவில் மக்கள் தங்கியுள்ள முகாமுக்கு சென்று முயற்சிக்கவில்லை. முகாமுக்கு செல்லும் போது சுதந்திரமான மொழிபெயர்ப்பாளர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும்.

அரசின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ் மக்களோ, மருத்துவர்களோ, உதவி அமைப்புக்களோ ஏதாவது கருத்தை தெரிவித்தால் விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்கள் என அரசு குற்றம் சுமத்தி வருகின்றது.

ஆனால், அரசினால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மக்களை சுற்றி சிறிலங்கா அரசின் கடுமையான கண்காணிப்பு உள்ள போது அவர்கள் எவ்வாறு உண்மையை கூறுவார்கள்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.