தேசிய இன விடுதலைக்கான போராட்டத்தை யுத்தத்தால் ஒடுக்கிவிட முடியாது – சுவிசில் ரணத் குமாரசிங்க

ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்கான போராட்டத்தை யுத்தத்தால் ஒடுக்கிவிட முடியாது என நவ சம சமாஜக் கட்சியின் (இடதுசாரி முன்னணியின்) கல்வித்துறைச் செயலரும், ஊடகவியலாளருமான ரணத் குமாரசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

தாயகத்தில் நடைபெறும் யுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு சுவிஸ் அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்து நடாத்தப்பட்ட ‘இன்றில்லையேல் என்றுமில்லை” எனும் தலைப்பிலான கவன ஈர்ப்பு நிகழ்வு சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ணில் நாடாளுமன்றத்துக்கு முன்பாக நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய ரணத் குமாரசிங்க மேலும் பேசுகையில்,
தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் ஒரு தடவை போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். ஆனால் சிறிலங்கா அரசு அதனை வழமைபோன்று பிடிவாதத்துடன் நிராகரித்துள்ளது. இதிலிருந்து சிறிலங்கா அரசு இறுதி விடுதலைப் புலி இருக்கும்வரை தனது இனவழிப்புப் போரைத் தொடரத் திட்டமிட்டிருப்பது தெரிகின்றது.

தமிழ் பயங்கரவாதிகளுக்கு எதிராகவே போரை முன்னெடுப்பதாகவும், சாதாரண தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல என அரசு எப்போதும் கூறி வருகின்றது. இது விடயத்தில் மகிந்த ஆட்சிக்கு அனைத்துலக ஆதரவு கிடைத்து வருகின்றது. தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பல்வேறு மனிதநேய மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் நூற்றுக் கணக்கான அறிக்கைகளையும், கண்டனங்களையும் காண முடிகின்றது. ஆனால் இவை அனைத்தும் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற அரசின் முழக்கத்தின் முன்னால் அடிபட்டுப் போவதையே காண முடிகின்றது.

எது பயங்கரவாதம்? ஒரு சிறிய குழு ஆயுதங்களை வைத்திருப்பதா பயங்கரவாதம்? அப்படியென்றால் அரச படைகளும் ஆயுதங்களை வைத்திருந்து மக்களுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றன தானே? அரச படைகள் ஆயுதங்களுடன் ஒவ்வொரு வீதியிலும் நிற்பதாலேயே பொதுமக்களின் சுதந்திர நடமாட்டம் பாதிக்கப்படுகின்றது அல்லவா?

அதுமட்டுமன்றி அரச படைகள் தமது துப்பாக்கிகள், ஆட்டிலறிகள், டாங்கிகள், போர்ப் படகுகள், தாக்குதல் உலங்கு வானூர்திகள், கிபீர் போன்றவற்றை உலக வல்லரசுகளின் ஆதரவுடன் பாவிக்கும்போது, எந்தவொரு ஆயுத அமைப்பும் தமது அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்ள வன்முறையே பாவிக்கும் நிலைக்குத் தள்ளப்படும். அதனாலேயே எந்தவொரு பயங்கரவாதத்தை விடவும் அரச பயங்கரவாதம் மிக மோசமானது, கொடூரமானது என இடதுசாரிகளான நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.

இலங்கையிலுள்ள தமிழர்கள் கடந்த பல தசாப்தங்களாக இனப்படுகொலைக்கு மட்டுமன்றி, அரச பயங்கரவாத தாக்குதல்களுக்கும் முகம்கொடுத்தே வருகின்றனர். தமிழர்கள், தமது தேசிய சனநாயக உரிமைகளுக்காக சாத்வீக ரீதியில் அமைதியான முறையில் தமது போராட்டங்களை நடத்திய போதெல்லாம் அரச பயங்கரவாதத்திற்கு முகம்கொடுக்க நேர்ந்தது.

இதனையடுத்தே தமிழ் இளைஞர்கள் தமது தேசிய உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்திப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்களின் தாய் தந்தையர்களால் சனநாயக வழியில் தமது அரசியல் அபிலாசைகளை அடைய முடியாமல் போனதே இதற்குக் காரணமாகும்.

யாராவது இலங்கையில் பயங்கரவாதத்தைப் பற்றி பேச முற்பட்டால், அவர்கள் இந்தத் தமிழ் இளைஞர்கள் தமது அரசியல் அபிலாசைகளை ஜனநாயக வழிமுறையில் அடைய முடியாமல் போன பெற்றோரின் பிள்ளைகளே என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் வேற்றுக் கிரக வாசிகள்; அல்ல.

பிரபாகரனைப் பற்றி ஒவ்வொருவரும் தமது கருத்துக்களை அவசரப்பட்டு வெளியிட்டு வருகின்றனர். பிரபாகரன் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்யும் ஒரு தானியங்கி இயந்திரம் என்று அவர்கள் நினைக்கின்றனர். அவர் தமிழ் ஆயுதக் குழுக்களாலும், தமிழ் மக்களாலும் அதிகம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தலைவராக இருக்கலாம். எப்படியாயினும் அவரும் ஒரு வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்த ஒருவரல்ல என்பதையும், வடக்கு கிழக்கில் பயங்கரவாதத்தை அவராக உருவாக்கவில்லை என்ற உண்மையையும் நாம் ஒப்புக் கொண்டேயாக வேண்டும்.

பண்டாரநாயக்க, சேனாநாயக்க, ஜயவர்த்தன, விக்கிரமசிங்க போன்றவர்களால் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்க்கும் சிங்கள இனவாத அரசியல் தலைவர்களே தமிழர் தாயகத்தில் பயங்கரவாதத்தை விதைத்து வருகின்றனர்.

இலங்கையில் ஐக்கியத்தை உருவாக்க வேண்டும் என்றால், கடந்த கால வரலாற்றை உற்றுநோக்கி வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்த அந்நியர்கள் யார் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த உண்மையைப் புரிந்து கொண்டால், விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும்வரை போரைத் தொடரும் அரசின் திட்டத்திற்கு யாரும் துணைபோகவோ, அதனை ஆதரிக்கவோ மாட்டார்கள்.

அரசு உண்மையில் பயங்கரவாதத்தை அழிப்பதற்கு திட்டமிடவில்லை, மாறாக தமிழ் மக்களை அவர்களது சொந்த பூமியிலேயே இல்லாதொழிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

ஆயுதம் ஏந்தும் தமிழ் இளைஞர்கள் வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல என்ற இந்த உண்மையை நாம் உணர்ந்து கொண்டால், அவர்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிநிதித்துவம் செய்கின்றார்கள் என்பதையும் நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும்.

அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தல் பரப்புரையின்போது தற்போதைய அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவும், இராசாங்க அமைச்சர் ஹிலாரி கிளின்டனும் இதனை உணர்ந்துகொண்டு வாக்குகளைப் பெறும் நோக்கில் இவ்வாறே கருத்து வெளியிட்டிருந்தனர். அவர்களைப் பார்த்து நான் தற்பொழுது கேட்கின்றேன். இது தொடர்பாக உங்களது தற்போதையை நிலைப்பாடு என்ன?

இன்னும் கூறுவதானால்ää தமிழ் மக்களின் இந்த ஆயுத எழுச்சியை சிறிலங்கா அரசு படை நடவடிக்கைகளால் அடக்கிவிட முடியாது. இதுதான் உண்மை, ஏனென்றால் இதுவொரு தேசிய இனத்தின் விடுதலைக்கான பிரச்சினை.

வன்னியில் ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் பல இலட்சக் கணக்கான மக்கள் முடக்கப்பட்டுள்ளார்கள். ஐ.நா அறிக்கையின் பிரகாரம் 150,000 முதல் 180,000 வரையிலான மக்கள் தொடர்ந்தும் அங்கே தங்கியிருக்கிறார்கள். இத்தனை கஸ்டங்களின் மத்தியிலும் அவர்கள் தொடர்ந்தும் அங்கே தங்கியிருக்கக் காரணம் என்ன? இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளால் தொடர்ச்சியாக மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகப் பலர் சொல்லுகின்றார்கள். என்னைப் பொறுத்தவரை, அந்த மக்களைக் காப்பாற்றும் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே பலர் இவ்வாறு கூறி வருகின்றனர். இவர்கள் கூறுவது போன்று அந்த மக்களுக்கு சிலவேளை அச்சுறுத்தல் இருக்கலாம். தமது கட்டளைக்குப் பணியாத சிலரை விடுதலைப் புலிகள் சிலவேளை சுட்டும் இருக்கலாம். ஆனால், இவ்வளவு தொகையான மக்களை சிறிய எண்ணிக்கை கொண்ட விடுதலைப் புலிகளால் பலவந்தமாக மறித்து வைத்திருக்க முடியுமா?

நாங்கள் சில உண்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அதில் முதலாவது, இந்தப் போராளிகள் அனைவரும் வன்னியில் வாழ்ந்துவரும் தாய், தந்தையரின் பிள்ளைகள். எனவே, பெற்றோர் தமது பிள்ளைகளுடன் இருப்பதையே விரும்புவர். பிள்ளைகளின் ஒவ்வொரு துயரிலும் தாமும் பங்கெடுக்கவே பெற்றோர் விரும்புவர். தமது பிள்ளைகளுடன் இணைந்து சுதந்திரத்தைப் பெறுவதற்கு அல்லது செத்து மடிவதற்கு அவர்கள் விரும்புவார்களே ஒழிய வன்னியில் இருந்து வெளியேற எண்ண மாட்டார்கள்.

உணவு, மருந்து, குடிநீர் பற்றாக்குறை இருந்தும் பதுங்க குழிகளுக்குள் அல்லது மரத்தின் கீழ் இருந்தாவது தாம் நேசிக்கும் தமது பிள்ளைகளுடன் வாழ்வதையே அவர்கள் விரும்புகின்றனர் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த நிலை பல மாதங்களாக, பல வருடங்களாக சிலருக்கு இருக்கின்ற போதிலும், மேலும் சிலர் இவ்வாறான பொருண்மியத் தடைகளுடன் கடந்த இரண்டு தசாப்தங்களாக தாம் வாழ்ந்திருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த வாழ்க்கை முறைக்கு அவர்கள் பழக்கப்பட்டு விட்டனர். நான் அதைப்பற்றிக் கருத்துக்கூற விரும்பவில்லை.

ஆனால் மக்கள் தாம் நேசிக்கும் தமது பிள்ளைகளுடன் இணைந்து சுதந்திரமாக வாழ்வதை அல்லது சுதந்திரமாக செத்து மடிவதையே விரும்புவார்கள் என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

வன்னியிலுள்ள பொதுமக்களுக்கு அவசியமான குருதி, மருந்துப் பொருள்கள், உணவு, குடிநீர் மற்றும் அத்தியவசியப் பொருள்களை அனுப்புவதற்கு சிறிலங்கா அரசு மறுத்து வருகின்றது. பொதுமக்களுக்கான மருந்துப் பொருள்களை அனுப்ப மறுக்கும் சுகாதார அமைச்சர் (நிமால் சிறீபால டி சில்வா) உலக சுகாதார அமைப்பின் தலைவராக பதவி வகிப்பது மிகவும் வெட்கக்கேடான ஒரு விடயம்.

வன்னியின் அவல நிலை பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தெளிவாக்குகின்றது. தாம் விரும்பும் இடத்தில் வாழும் உரிமை மக்களுக்கு இருக்கின்றது. நான் ஏன் இதனைச் சொல்லுகின்றேன் என்றால், வன்னிக்கு சர்வதேச செஞ்சிலுவைக் குழு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய அமைப்புக்கள் செல்ல தடை விதித்துள்ள சிறிலங்கா அரசு, உணவு, மருந்துப் பற்றாக்குறையை ஏற்படுத்தி அங்குள்ள மக்களை வெளியேற்றப் பார்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது அனைத்துலக சமூகமே அரசின் இந்த திட்டம் பற்றி புரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நான் கருதுகின்றேன்.

நாளாந்தம் வான்வழி மற்றும் ஆட்டிலறித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு அத்தியாவசிப் பொருள்களை அனுப்புவதற்கான அழுத்தத்தினை இந்த அமைப்புக்கள் சிறிலங்கா அரசுக்கு கொடுக்கவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அனைத்துலக மனிதநேய அமைப்புக்கள் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை அவர்கள் வீணடித்திருக்கின்றனர்.

உலகின் நான்காம் மண்டல (Forth International)அமைப்பின் இலங்கை பிரதிநிதிகளான நவ சம சமாஜக் கட்சி (NSSP) மற்றும் இடதுசாரி முன்னணி கட்சியான நாம், சிறிலங்கா அரசு மோதல்களை நிறுத்தி, உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் எனவும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றோம்.

இதை விடுத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு விடுக்கும் பொய்யான அழைப்புக்கள் நிராகரிக்கப்படவே செய்யும்.

பல சமூகங்கள் ஒற்றுமையாக வாழும் உலகின் சிறந்த சமத்துவ ஆட்சியைக் கொண்டுள்ள சுவிற்சர்லாந்து அரசாங்கம், தனது வல்லமையைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசு போர் நிறுத்தம் செய்து, விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்துவதற்கும், தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என, நவ சம சமாஜக் கட்சி வலியுறுத்துகின்றது.

அத்துடன் உலகில் உள்ள இடதுசாரி அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், ஏனைய அமைப்புக்கள், மற்றும் ஊடகங்கள் எமது கட்சியின் இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்க முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கின்றோம் என அவர் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.