யேர்மனியில் தமிழர்களின் கலந்துரையாடலை தடுக்க முயற்சித்த சிறிலங்கா

யேர்மனியில் உள்ள ஈடார் ஒபஸ்ரைன் நகரில் ‘சமகால இலங்கை நிலவரமும் மனித உரிமை மீறல்களும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலை நிறுத்த சிறிலங்கா அரசாங்கத்தின் தூதரகம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

கடந்த சனிக்கிழமை (28.03.09) நடைபெற்ற இக்கலந்துரையாடலில் சுவீடனில் இருந்து பேராசிரியர் பீற்றர் சால்க், ஜி.ஜே.மோகன், யேர்மனியில் இருந்து பேராசிரியர் டாக்மா கெல்மன் இராஜநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினைத் தடுக்க ஜேர்மனியில் உள்ள சிறிலங்கா தூதரகம் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. அவர்களின் தூண்டுதலினால், இக்கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை ஜேர்மனிய குற்றத்தடுப்பு புலனாய்வுத்துறையின் மூன்று உயர்தர அதிகாரிகள் சந்தித்து நிகழ்வின் நோக்கம், கலந்துகொள்வோர் விபரம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டனர்.

ஜெனீவாவில் தமிழர் ஒருவர் தீக்குளித்ததுபோல் இங்கும் ஒரு தமிழர் தீக்குளிக்க இருப்பதாக தமக்கு முறைப்பாடு வந்துள்ளதாக தெரிவித்த அவர்கள், நிகழ்வினைத் தடுக்குமாறு கோரி தமக்கு வந்த மின்னஞ்சல், தொலைநகல் அடங்கிய கோவையினையும் காட்டினர்.

விசாரணையின் பின் ஜேர்மனிய சட்டத்தின்படி இதனை நடத்த உங்களுக்கு முழு உரிமை உள்ளது. விசாரிக்க வேண்டியது எமது கடமை எனக் கூறிச்சென்றனர்.

ஆயினும், நிகழ்வு நடைபெற்ற அன்று மோப்ப நாய் சகிதம் வந்த ஜேர்மன் காவல்துறை மண்டபம் முழுவதையும் சோதனையிட்ட பின்னரே நிகழ்வினை தொடங்க அனுமதித்தனர்.

ஆனால், ஜேர்மனியில் உள்ள சிறிலங்கா தூதரகத்தினரின் தலையீட்டால் ஈடார் ஒபஸ்ரைன் நகர பிதா நிகழ்வினை புறக்கணித்தார்.

சிறிலங்கா தூதரகத்தின் மிகுந்த அழுத்தத்தையும் மீறி, சுமார் மூன்றரை மணித்தியாலம் வரையில் குற்றப் புலனாய்வுத்துறை காவல்துறையினரின் காவலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான யேர்மனிய மக்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சமகால வன்னிக்களமுனையும் மக்களின் அவலங்களும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

வன்னி அவலங்களை எடுத்துக்காட்டும் ஜேர்மன் மொழியிலான 9 நிமிட விவரணப்படமும் காண்பிக்கப்பட்டது.

‘இலங்கைப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க எடுத்த முயற்சிகள் ஏன் பயனின்றிப் போயின?’ எனும் தலைப்பில் உரையாற்றிய டொக்டர் திருமதி டாக்மா இராஜநாயகம் இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இன்னும் தொடர்வதின் காரணங்களை விளக்கினார். ஊடகங்கள் செய்தியை வெளியிடாது மறைப்பதையும் அவர் கண்டித்து உரையாற்றினார்.

இவரது உரை இலங்கை சுதந்திரமடைந்தபின் தமிழர் இனப்பிரச்சனை தொடங்கிய காலம் முதல் தற்போது நடைபெறும் வன்னி அவலம் வரை உள்ளடக்கிய விரிவுரையாக இருந்தது.

நிகழ்வினை ஈடார் ஒபஸ்ரைன் நகர பிதா, ஜேர்மனியில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் தலையீட்டால் புறக்கணித்ததையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குற்றப் புலனாய்வுத்துறையினரால் விசாரிக்கப்பட்டதையும் கண்டித்தார்.

சுவீடன் தமிழர் பேரவையின் சார்பில் கலந்துகொண்ட ஜி.ஜே.மோகன் ‘இலங்கைத் தமிழரின் உண்மையான பாதுகாவலர் யார்’ என்ற தலைப்பில் உருக்கமான உரையாற்றினார்.

நாளாந்தம் 50-100 வரையான பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். வன்னி மண்ணில் ஒவ்வொரு அங்குலமும் மனிதக்குருதியால் நனைந்துள்ளது. இந்த மண்ணின் காற்றில் வெடிமருந்து வாசம் வீசுகின்றது. ஏரிகளும் குளங்களும் மாசுபடுத்தப்பட்டு சுத்தமான குடிநீர் பெறவும் வழியில்லை எனக்குறிப்பிட்டார்.

சிறிலங்கா அரசு தமிழர்களின் இறைமையை மறுதலிப்பதுடன் அவர்கள் மீது இன அழிப்பு போரை நடத்துகின்றது. நீங்கள் சிறிலங்காவுக்கு நன்கொடையாக வழங்கும் ஒவ்வொரு சதமும் உங்கள் கரங்களில் இரத்தக்கறையை விட்டுச் செல்கிறது.

இந்நாட்டுடன் உங்கள் நாடு செய்யும் ஒவ்வொரு வணிகமும் அப்பாவித் தமிழரின் அவலங்களை அதிகரிக்கச் செய்கின்றது.

ஜேர்மனி வழங்கிய ஆழிப்பேரலை நிதிகூட தவறான கைகளுக்கு சென்று விட்டது. தமிழ் மக்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. இந்திய அரசு குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கின்றது. உங்கள் அரசாங்கங்களை விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி கேளுங்கள் என்றும் தெரிவித்தார்.

‘சிறிலங்காவில் நடைபெறும் போர் தொடர்பான ஜேர்மனியின் பார்வை’ என்ற தலைப்பில் பேராசிரியர் பீற்றர் சால்க் ஆற்றிய உரையில், இடம்பெற்று வரும் போரில் அகதிகளாக அல்லலுறும் பொதுமக்களின் நிலைமை கவலைக்கு உரியது.

தமிழருக்குத் தேவையானது உரிமையுடன் கூடிய விடுதலையே, தமது உரிமைகளை தாமே தீர்மானிக்கும் சுதந்திரமே, மனித உரிமை மீறல்களை சகிக்க முடியாத சில தமிழ்மக்கள் தம்மைத்தாமே தீயூட்டி தமதுயிரை துறந்துள்ளனர். அவர்களில் சிலர் கடிதம் மூலம் தமது உணர்வுகளைப் பதிவு செய்திருந்தனர் எனவும் குறிப்பிட்டார்.
பிந்திய 10 செய்திகள்

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.