பாகிஸ்தானில் போலீஸ் பயிற்சி மையத்தை சுற்றி வளைத்தனர்: தீவிரவாதி தாக்குதல் – 8 மணி நேர துப்பாக்கி சண்டை; அதிகாரிகள் உள்பட 35 பேர் பலி

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் லாகூர் அருகே உள்ள மனவன் என்ற இடத்தில் போலீஸ் பயிற்சி மையம் உள்ளது.வாகா (இந்திய எல்லை) எல்லையில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அந்த மையம் இருக்கிறது. அங்குள்ள 850 பயிற்சி போலீசார், நேற்று காலை 7 மணி அளவில் வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த பயிற்சி மையத்துக்குள் 14 தீவிரவாதிகள் அதிரடியாக நுழைந்தனர். அனைவருமே முதுகில் பைகளை கட்டி இருந்தனர். அவர்களில் சிலர், போலீஸ் சீருடை அணிந்து இருந்தனர். உள்ளே நுழைந்த உடனேயே, போலீசாரை நோக்கி ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். கையெறி குண்டுகளையும் வீசினர். அதனால், பயிற்சியில் ஈடுபட்ட அனைவரும் உயிருக்கு பயந்து சிதறி ஓடினர்.

உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்ததால், போலீசார் கைகளில் ஆயுதங்கள் எதுவும் இல்லை. அதனால் பயிற்சி மைய வாசலிலேயே பலரும் சுருண்டு விழுந்தனர். தப்பியோடிய போலீசார்களில் சிலர் துப்பாக்கிகளை எடுத்து வந்து தீவிரவாதிகளை நோக்கி சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே, சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கடுமையான சண்டை நீடித்தது.

பின்னர், பயிற்சி மையத்துக்குள் தீவிரவாதிகள் புகுந்தனர். பயிற்சி மையத்துக்குள் இருந்த சுமார் 800 போலீசாரை பணயக் கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்தனர். அதன் பிறகு, 4 முறை குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டது. இது குறித்த தகவல் கிடைத்ததும் ராணுவம், துணை ராணுவப் படையினரும், போலீசாரும் விரைந்து வந்து பயிற்சி மையத்தை முற்றுகையிட்டனர்.

பயிற்சி மையத்தை வானில் இருந்து கண்காணிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன. வானில் வட்டமிட்டபடியே, பயிற்சி மையத்துக்குள் நடைபெறுவதை ராணுவ ஹெலிகாப்டர்கள் நோட்டமிட்டன. இதற்கிடையே, பயிற்சி மையத்தில் ராணுவ ஹெலிகாப்டர் வந்து இறங்கியபோது, அதை நோக்கி ஒரு மர்ம மனிதன் வேகமாக சென்றான்.

அவனது நடவடிக்கைகள் சந்தேகப்படும் படியாக இருந்ததால் அவனை போலீசார் கைது செய்தனர். தீவிரவாதிகளுக்கும், அவனுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. அதே நேரத்தில் போலீஸ் பயிற்சி மையம் அமைந்துள்ள பகுதி முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்த பஞ்சாப் மாகாண கவர்னர் சைமன் தஸீர் உத்தரவிட்டார்.

ஹெலிகாப்டர் பாதுகாப்புடன் பயிற்சி மைய வளாகத்துக்குள் சென்ற ராணுவத்தினர், குற்றுயிராக கிடந்த போலீசாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருகில் உள்ள உயரமான கட்டிடங்களில் ஏறி, நிலைமையை கண்காணித்தனர். அப்போது, பயிற்சி மையத்தின் 3 மாடி கட்டிடத்துக்குள் இருந்தபடியே ராணுவத்தை நோக்கி துப்பாக்கியால் தீவிரவாதிகள் சுட்டனர். உள்ளே இருந்த போலீசாரையும் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர்.

உடனே, பயிற்சி மைய வளாகத்துக்குள் ராணுவ அதிகாரிகள் சென்று `மைக்’ மூலமாக தீவிரவாதிகளுடன் பேசி அவர்களுடைய கோரிக்கைகளை அறிய முயன்றனர். ஆனால், பயிற்சி மையத்தின் கூரையில் நின்றபடி ஹெலிகாப்டரை நோக்கி தீவிரவாதிகள் சுட்டதால் மீண்டும் சண்டை தொடர்ந்தது. சுமார் 8 மணி நேரம் நீடித்த சண்டை, மாலை 4 மணிக்கு முடிவுக்கு வந்தது.

ராணுவத்துடன் நடந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து மற்ற தீவிரவாதிகள் அனைவரும் தப்பிக்க முயற்சித்தனர். ஏற்கனவே 800 பயிற்சி போலீசார் அங்கு இருந்ததால் அவர்களுடன் வெளியேற முயற்சித்தனர்.

ஆனால், ராணுவம் விழிப்பாக இருந்ததால் மேலும் 4 பேர் தங்களை தாங்களே சுட்டுக் கொண்டு இறந்தனர். இது தவிர, 6 தீவிரவாதிகள் உயிருடன் பிடிபட்டனர். அவர்களில் ஒருவன், தப்பித்து செல்வதற்காக போலீஸ் உயர் அதிகாரி சீருடையை அணிந்து இருந்தான்.

தீவிரவாதிகள் தாக்குதலில் 8 போலீஸ் அதிகாரிகள் உள்பட 27 போலீசார் கொல்லப்பட்டனர். எனவே, பலியான தீவிரவாதிகள் 8 பேருடன் சேர்த்து இந்த சண்டையில் மொத்தம் 35 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. காயமடைந்த போலீசார், லாகூரில் உள்ள 3 மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

தீவிரவாதிகளுடன் நடந்த சண்டை முடிந்த பிறகு பயிற்சி மையத்தை ஒழுங்கு படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அது முடிந்தால் தான் பலியானவர்களின் உண்மையான எண்ணிக்கை தெரியவரும்.

தீவிரவாதிகள் அனைவரும் உருது மற்றும் பஞ்சாபி மொழிகளில் தங்களுக்குள் பேசிக் கொண்டனர் என்றும், 19 முதல் 22 வயதுக்குள் இருந்தனர் என்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போலீசார் தெரிவித்தனர். மொத்தம் 15 முதல் 20 தீவிரவாதிகள் வரை வந்ததாகவும் ஒரு போலீஸ்காரர் கூறினார்.

தீவிரவாதிகளுடன் நடந்த சண்டை முடிந்த பிறகு உள்துறை மந்திரி ரகுமான் மாலிக் கூறியதாவது:-

மும்பையில் நடந்த தாக்குதல்களை போலவே இந்த தாக்குதலும் நடைபெற்றுள்ளது. தாக்குதலுக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. எனினும், லஷ்கர்-இ-தொய்பா அல்லது ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். பிடிபட்டுள்ள தீவிரவாதிகளில் ஒருவனுக்கு 19 வயது இருக்கலாம். அவன் பாஸ்டா மொழி (பலுசிஸ்தான் மாகாணத்தில் பேசப்படுவது) பேசுகிறான்.

போலீஸ் பயிற்சி மையத்தின் மீது நடந்த தாக்குதல் குறித்து விசாரிக்க ஒரு கூட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு மாலிக் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது கடந்த 3-ந் தேதி அன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் இலங்கை வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அப்போது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பியோடி விட்டனர். அந்த தீவிரவாதிகள் தான், ஒரு மாதத்துக்குள் இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Source & Thanks : .maalaimalar

Leave a Reply

Your email address will not be published.