ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் லண்டன் புறப்பட்டார்; ஒபாமாவுடன் 2-ந்தேதி சந்திப்பு

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஜி-20 நாடுகள் உச்சிமாநாடு வருகிற ஏப்ரல் 2-ந்தேதி நடக்கிறது. இதில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் பங்கேற்கின்றன.இம்மாநாட்டை இங்கிலாந்து பிரதமர் கார்டன்பிரவுன் நடத்துகிறார். இதில் பங்கேற்கும்படி அவர் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அழைப்பு விடுத்தார்.

அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர் 3 நாள் பயணமாக இன்று லண்டன் புறப்பட்டார். கடந்த 2 மாதத்துக்கு முன்புதான் மன்மோகன்சிங்குக்கு இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது.அதன் பிறகு முதன் முதலாக தற்போதுதான் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார்.

லண்டன் புறப்படும் முன்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜி-20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கலந்து கொள்கிறார். அவரை வருகிற 2-ந்தேதி (வியாழக்கிழமை) சந்தித்து பேசுகிறேன். அமெரிக்க அதிபராக அவர் பதவி ஏற்றபின் முதலாவதாக அவரை சந்திக்க உள்ளேன். இதை ஒரு நல்ல வாய்ப்பாக கருதுகிறேன்.

அப்போது அமெரிக்கா, இந்தியாஆக இரு நாடுகளின் உறவுகள் குறித்தும் மண்டல அளவிலும், உலக அளவிலும் உள்ள பிரச்சினைகள் குறித்தும் விவாதிப்பேன்.

குறிப்பாக உலகை அச்சுறுத்தி வரும் தீவிரவாதத்தை ஒழிப்பது மற்றும் ஆப்கானிஸ்தானில் நிலவும் பிரச்சினைகள், பாதுகாப்பை பலப்படுத்துதல் போன்றவை குறித்தும் அவருடன் பேச்சு நடத்துவேன் என்றார்.

மாநாட்டில் பங்கேற்கும் மன்மோகன்சிங் இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுனையும் சந்தித்து பேசுகிறார். சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார சீரழிவை சமாளிக்க கூட்டாக நடவடிக்கை எடுப்பது பற்றி மாநாட்டில் உரையாற்றுகிறார்.

ஜி-20 நாடுகள் உச்சிமாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் 2-வது முறையாக கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : maalaimalar

Leave a Reply

Your email address will not be published.