நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை * பட்டப்பகலில் கும்பல் கைவரிசை

திருநெல்வேலி : நெல்லை அருகே காங்கிரஸ் கட்சிப்பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சாலைப்புதூரைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(51); வர்த்தக காங்கிரசில் பொறுப்பில் உள்ளார். பகல் 11 மணியளவில் களக்காட்டில் தோட்டத்தில் இருந்து காய்கறிகளுடன் மோட்டார் சைக்கிளில் சாலைப்புதூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

ராமகிருஷ்ணாபுரம் அருகே ஒரு கும்பல் நடுரோட்டில் சைக்கிள்களைப் போட்டு முத்துராமலிங்கத்தை வழிமறித்தது. அவர் ஓட்டம்பிடித்தார். இருப்பினும் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சாலைப்புதூரில் கோவில்கொடை தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே தகராறு உள்ளது. சில மாதங்களுக்கு முன் கிராம நிர்வாக அதிகாரி பன்னீர் என்பவரை ஒரு கும்பல் வெட்டியது. இதில் அவர் காயமுற்றார். அந்தச் சம்பவத்திற்கு பழிக்குப்பழி வாங்க கொலை நடந்திருக்கலாமா என்பது குறித்து களக்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.