போராளிகள் என்று கூறி தொலைபேசியில் ரூ.10 இலட்சம் கேட்டு தன்னை மிரட்டியதாக தமிழ்நாட்டிற்கு அகதியாக வந்தவர் தெரிவிப்பு

தாங்கள் போராளிகள் என்று கூறி தன்னிடம் தொலைபேசியில் ரூ.10 இலட்சம் கப்பம் கேட்டு மிரட்டியதாக தமிழ்நாட்டிற்கு அகதியாக வந்த வவுனியாவில் புடவை வியாபாரம் செய்துவந்த சசிகுமார் என்பவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக தெரியவருவதாவது:-

இலங்கை வவுனியாவில் இருந்து 6 குடும்பத்தை சேர்ந்த 5 ஆண்கள், 5 பெண்கள், 2 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் என மொத்தம் 14 பேர் ஒரு படகு மூலம் தனுஷ்கோடி அருகே உள்ள ஒத்தப்பட்டி கடற்கரைக்கு நேற்று வந்தனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து தனுஷ்கோடி பொலிஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு பொலிஸார் மற்றும் கியு பிரிவு பொலிஸாரின் விசாரணைக்கு பின்னர் அவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அகதியாக வந்த சசிக்குமார் (வயது 30) என்பவர் கூறியதாவது:-

நான் வவுனியாவில் துணிக்கடை வைத்துள்ளேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு எனக்கு மர்ம டெலிபோன் வந்தது. அதில் பேசியவர்கள், “நாங்கள் போராளி இயக்கத்தை சேர்ந்தவர்கள். உடனடியாக எங்களுக்கு ரூ.10 இலட்சம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உன்னை குடும்பத்துடன் அழித்து விடுவோம்” என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டனர்.

உடனே நான் இதுகுறித்து பொலிஸில் தகவல் கொடுத்தேன். தகவல் கொடுத்த 3வது நாளில் எனது வீட்டுக்கு அருகே உள்ள சுப்பையா என்பவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டுகளை வீசி சேதப்படுத்தினர். இதைக் கண்டு பயந்து போன நான், பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு இந்தியா செல்ல புறப்பட்டபோது வழியில் மதவாச்சி சாலையை படையினர் அடைத்து விட்டனர்.

பின்னர் படகு மூலமாக வந்துவிடலாம் என்று எண்ணி, கடந்த சில நாட்களுக்கு முன்பு நானும் குடும்பத்தினரும் எனது நண்பர் புஷ்பராஜ் என்பவரை அழைத்துக்கொண்டு தமிழகம் வர முடிவு செய்தோம்.

இதற்காக ஒரு படகை ரூ.1 இலட்சத்து 85 ஆயிரத்துக்கு விலைக்கு வாங்கி நேற்று முன்தினம் எங்களுடன் சேர்ந்து 6 குடும்பத்தை அழைத்துக்கொண்டு இரவு அங்கிருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை தனுஷ்கோடி அருகே ஒத்தப்பட்டி கடற்கரையில் வந்து இறங்கினோம்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விடுதலை புலிகளின்தாக்குதலில் இந்திரா என்ற ரேடார் சேதமடைந்தது. மேலும் இந்த தாக்குதலில் பல இராணுவ வீரர்களும் உயிரிழந்து விட்டனர். தொடர்ந்து சண்டை நடந்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை வாழ முடியாததால் உயிர் பிழைக்க இங்கு வந்து விட்டோம்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.