பாதுகாப்பு வலயத்தினுள் பொதுமக்கள் உளரீதியாக பாதிப்படைகின்றனர்: வன்னி பிராந்திய உளவியல் அமைப்பு

பாதுகாப்பு வலயங்களில் உள்ள பொதுமக்களில் பலர் உள ரீதியாக பாதிப்படைந்திருப்பதாக வன்னி பிராந்திய உளவியல் சமூக இணைப்பு சமூகம் தெரிவித்துள்ளது.

இந்த பகுதியில் உள்ள மக்கள் இரவு பகலாக பல வன்முறைகளுக்கு உள்ளான நிலையில் வாழ்வதாலும், இலங்கை இராணுவத்தின் அன்றாட எறிகணை வீச்சுக்களால் பாதிக்கப்படுவதினாலும், உளவியல் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அந்த அமைப்பின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது கண்களுக்கு முன்னரே தமது உறவினர்களும், நண்பர்களும் எறிகணை வீச்சுக்களால் கொல்லப்படுவதையும் காயமடைவதையும் பார்க்கின்ற அதிக அளவிலான சிறுவர்களும், இந்த உளச் சுமைக்கு ஆளாகியுள்ளனர் எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அதிக அளவிலான குடும்பங்களுக்கும், சிறுவர்களுக்கும் அவர்களது உறவினர்கள் கொல்லப்பட்டதன் பின்னர், அங்கிருந்து தப்பி ஓட வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால், தமது உண்மையான உணர்களை வெளிப்படுத்த முடியாத நிலையும் தோன்றியுள்ளது.

அத்துடன் இவ்வாறான துன்புறுத்தலுக்கு உள்ளான நிலையிலும் சுமார் 330000 பேர், சர்வதேச சமூகத்தினாலும், ஏனைய அனைத்து தரப்பினரினாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதால், உளரீதியாக பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதுடன், அவர்கள் பல்வேறு மன அழுத்தங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக அந்த பகுதியில் இயங்கி வரும் வன்னி பிராந்திய உளவியல் சமூக இணைப்பு சமூகம் தெரிவித்துள்ளது.

source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.