எகிறும் தங்கம் விலை-மக்களை கவரும் கவரிங்

டெல்லி: தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை அடுத்து இந்திய மக்களிடையே கவரிங் நகைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் சாமாண்யர்களுக்கு தங்கம் வாங்குவது கனவாகி விட்டது. இன்று சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை 1420 ஆகவும், மதுரையில் 1425 ஆகவும், கோவையில் 1430 ஆகவும் இருக்கிறது.

பொதுவாக திருமண முகூர்த்த நேரங்களில் தங்கத்தின் விற்பனை படுஜோராக இருக்கும். ஆனால், இம்முறை தங்கத்தின் விலை ஏற்றம் காரணமாக விற்பனை பல மடங்கு குறைந்துவிட்டது.

அதுவும் இந்தியாவில் தங்கம் அதிகம் விற்பனையாகும் குஜராத் மற்றும் கேரளாவில் விற்பனை படு மந்தமாக இருக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் தங்கத்தை விட அதற்கு சமமாக ஜொலிக்கும் கவரிங் நகைகளை நாடி செல்வது அதிகரித்துள்ளது.

மக்களின் போக்கை உணர்ந்த நகை விற்பனையாளர்கள் சிலரும் தங்கம் நகை செய்யும் தொழிலை விட்டுவிட்டு கவரிங் கலையில் கலக்கி, மக்களை மயக்க ஆரம்பித்துள்ளனர்.

குஜராத்தில் ஆண்டுதோறும் திருமண மூகூர்த்த நேரங்களில் ஒரு குடும்பத்தினர் சராசரியாக 100 கிராம் தங்க நகை வாங்குவார்களாம். அதே நேரத்தில் பணக்காரர்கள் தங்கள் வீட்டு திருமணத்துக்கு சுமார் 400 முதல் 500 கிராம் தங்க நகைகள் வாங்குவது வழக்கமாம்.

இதனால் ஒவ்வொரு தங்க வியாபாரியும் ஒரு நாளைக்கு 2 கிலோ, 3 கிலோ என விற்பனை செய்வது உண்டாம். ஆனால், இம்முறை தங்கத்தின் விலை உயர்வால் இது வெகுவாக குறைந்துவிட்டது. இது சுமார் 10 மடங்கு வரை குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அங்கு தற்போது ஒரு நாளைக்கு 200 அல்லது 500 கிராம் மட்டுமே ஒரு வியாபாரியால் விற்கப்படுகிறது. இதனால் தங்க வியாபாரிகள், கவரிங் வியாபாரிகளாக மாறிவரும் கதை அங்கு தொடர்கிறது.

Source & Thanks : thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.