480 புள்ளிகள் சரிந்து ஆட்டம் கண்ட பங்குச் சந்தை!

மும்பை: யாரும் எதிர்பாராத வகையில் இன்று பெரும் சரிவைச் சந்தித்தது இந்தியப் பங்குச் சந்தை. கடந்த இரு வாரங்களாக நிலையான போக்கிலிருந்த பங்கு வர்த்தகம், இன்று வாரத்தின் துவக்க நாளிலேயே அதிரடி வீழ்ச்சி கண்டது.

வர்த்தக நேர முடிவில் 480 புள்ளிகள் சரிந்து, சென்செக்ஸ் குறியீட்டெண்ணை மீண்டும் 10000 புள்ளிகளுக்குக் கீழ் இழுத்துச் சென்றது.

நிப்டியில் இன்று மட்டும் 180 புள்ளிகள் சரிந்தது. சமீப நாட்களில் சென்செக்ஸ் மற்றும் நிப்டியில் இந்த அளவு சரிவு ஏற்பட்டது இது இரண்டாவது முறை.

முன்னணி வங்கிகள், உலோகத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகள் எதிர்பாராத சரிவைச் சந்தித்தன.

சர்வதேச பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இன்று திடீரென்று அதிக அளவு பங்குகளை விற்கத் துவங்கியது போன்றவைதான் இந்த சரிவுக்குக் காரணம் என்று பங்குத் தரகர்கள் தெரிவித்தனர்.

ஐசிஐசிஐ வங்கியின் பங்குகள் மட்டுமே 12.36 சதவிகிதம் வீழ்ச்சி கண்டது. ஜெய்ப்பிரகாஷ் அஸோஸியேட்ஸ் நிறுவனப் பங்குகள் 12.27 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தன. ரிலையன்ஸ் மற்றும் டிஎல்எப் பங்குகளும் கடுமையாக வீழ்ந்தன.

பொதுத்துறை நிறுவனமான என்டிபிசியின் பங்குகள் மற்றும் ஓரளவு தப்பித்தன.

வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 9668.14 (480.35) ஆகவும், நிப்டி 2978.15 (130.50)ஆகவும் நிலைப்பெற்றன.

Source & Thanks : thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.