கடுமையாக போராடும் புலிகள்-விரக்தியில் ராணுவம்

கொழும்பு: ராணுவத்தின் முன்னேற்றத்ததை தடுத்து விடாப்பிடியுடன் விடுதலைப் புலிகள் கடுமையாக போராடி வருவதால், நகர முடியாமல் விரக்தியில் தள்ளப்பட்டுள்ளது இலங்கை ராணுவம்.

இன்னும் சில நாட்களில் விடுதலைப் புலிகளின் கதை முடிந்து விடும். இலங்கை முழுவதும் சுதந்திர பூமியாகி விடும். பிரபாகரன் அழிக்கப்பட்டு விடுவார். உயிர் தப்ப அவர் சரணடைவதுதான் புத்திசாலித்தனம் என அதிபர் ராஜபக்சே முழக்கமிட்டு 2 மாதங்களாகி விட்டது.

ஆனால் 2 மாதங்களுக்கு முன்பு எந்த இடத்தில் இருந்ததோ கிட்டத்தட்ட அதே இடத்தில்தான் இருக்கிறது ராணுவம். காரணம், விடுதலைப் புலிகள் காட்டி வரும் கடும் எதிர்ப்பு.

ஆமையை விட மெதுவாக நகருகின்றனர் …

இலங்கை ராணுவத்தின் முன்னேற்றம் ஒரு ஆமையின் தினசரி நகர்வை விட மெதுவாக உள்ளதாம். அதாவது ஒரு நாளைக்கு 0.6 மைல்கள் அளவுக்குத்தான் இலங்கை ராணுவம் முன்னேறி வருகிறதாம். அந்த அளவுக்கு புலிகள் கடும் எதிர் தாக்குதலை தொடுத்து தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கின்றனர் ராணுவத்தினரை.

விடுதலைப் புலிகள் தற்போது 21 சதுர கிலோமீட்டர் சுற்றளவுக்குள் சுருக்கப்பட்டு விட்டதாக ராணுவம் கூறுகிறது. ஆனால் அந்த பரப்பளவுக்குள் ஊடுறுவ முடியாமல் ராணுவம் திணறிக் கொண்டிருக்கிறதாம்.

விடுதலைப் புலிகளிடம் தற்போது 500 வீரர்கள் மட்டுமே இருக்கலாம் என ராணுவம் கூறுகிறது. ஆனால் அந்த ஐநூறு பேரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அதை சமாளிக்க முடியவில்லையாம் ராணுவத்திற்கு.

இது விடுதலைப் புலிகளுக்கு வாழ்வா, சாவா போராட்டம். எனவேதான் கடுமையாக அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்கிறார் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து விலகி அரசியல்வாதியாகி விட்ட தர்மலிங்கம் சித்தாந்தன்.

விடுதலைப் புலிகளுடன் இருக்கும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட மக்களும் அவர்களுக்கு கவசம் போல இருப்பதால் ராணுவத்தால் அதிரடியாக நடவடிக்கை எடுக்க முடியவிலல்ை.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், நாங்கள் மிக மிக மெதுவாகத்தான் முன்னேற முடிகிறது. கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த முடியவில்லை.

ஏராளமான மக்கள் விடுதலைப் புலிகள் வசம் உள்ள பகுதிகளில் இருப்பதால் வேகமாக முன்னேற முடியவில்லை. நினைத்தவுடன் தாக்குதல் நடத்தவோ, உள்ளே புகவோ முடியாது என்கிறார்.

கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கேகலிய ரம்புகெவல்லா, இறுதிக் கட்டத்தை எட்டி விட்டோம். விரைவில் புலிகளை ஒழித்து விடுவோம் என்று கூறியிருந்தார்.

ஆனால் தற்போது ராணுவம் நகருகிற வேகத்தையும், புலிகள் நடத்தி வரும் எதிர் தாக்குதலையும் பார்த்தால் இந்தப் போருக்கு எப்போது முடிவு என்பதை யாராலும் கணிக்க முடியாது.

Source & Thanks : thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.