கடன்-போர் நிறுத்தம் குறித்து இலங்கை பரிசீலனை

கொழும்பு: உலக அளவில் அதிகரித்து வரும் நெருக்கடி காரணமாக தற்காலிகமாக சண்டையை நிறுத்தி, அப்பாவித் தமிழர்கள் வெளியேற அனுமதி கொடுப்பது குறித்து இலங்கை பரிசீலித்து வருவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

இந்த தற்காலிக சண்டை நிறுத்தத்தின்போது அப்பாவித் தமிழர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்ச மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்காலிக சண்டை நிறுத்தம் குறித்த விவரங்கள் விரைவில் முடிவு செய்யப்படும் என்றார்.

இலங்கை வெளியுறவு செயலாளர் பலித கொகனா கூறுகையில், அப்பாவி மக்கள் வெளியேற வகை செய்யப்படும். இதை எப்படி செய்வது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். விரைவில் முடிவெடுக்கப்படும் என்றார்.

அப்பாவித் தமிழர்களைக் கொத்துக் கொத்தாக இலங்கைப் படைகள் கொன்று குவித்து வருகின்றன. இதற்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் இலங்கை படைகள் இனப்படுகொலையை அரங்கேற்றி வருகின்றன.

ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இலங்கையின் போக்கை கடுமையாக கண்டித்து வருகின்றன.

உலக நாடுகளில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு நடத்தி வரும் போராட்டங்களும் உலக சமுதாயத்தின் கவனத்தை இலங்கையின் பக்கம் திருப்பி வருகின்றன. இதனால் இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சண்டை நிறுத்தம் செய்ய வேண்டும். அப்பாவிகள் வெளியேற வழி செய்ய வேண்டும். அப்பாவிகளைக் கொல்லக் கூடாது என்று இலங்கைக்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

கடனுக்காக’ சண்டை நிறுத்தம்?

அதேசமயம், இலங்கை அரசின் இந்த முடிவுக்கு இன்னொரு காரணம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சர்வதேச நிதியத்திடம் இலங்கை பல நூறு கோடி கடன் கேட்டுள்ளது. இந்த சமயத்தில், தமிழர்கள் படுகொலை விஸ்வரூபம் எடுத்து வருவதால், கடன் தொகை கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவும் இப்போதைக்கு சண்டையை நிறுத்தி விட்டு, கடன் தொகை கைக்கு வந்தவுடன் மறுபடியும் தாக்குதலை தொடரலாம் என இலங்கை அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2 மாதங்களில் மட்டும் 3000 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 7000 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஐ.நா. கூறியுள்ளது. காஸாவில் நடந்த அநியாய படுகொலைகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் நிலை ஹிட்லர் காலத்தை விட மிகக் கொடுமையானது என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.