2ம் இணைப்பு)சுவிஸ் நாடாளுமன்ற முன்றலில் தமிழர்கள் ஒன்றுகூடல்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் இனப் படுகொலையை வெளிப்படுத்தியும் உடனடி போர் நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு மகிந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி சுவிற்சர்லாந்தின் நாடாளுமன்ற சதுக்கத்தின் முன்பாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலை நடத்துகின்றனர்.

சுவிஸ் தமிழர் பேரவையின் அழைப்பை ஏற்று இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் இருந்தும் நாடாளுமன்ற சதுக்கத்தின் முன்பாக அணிதிரண்ட மக்கள் தமது உரிமை கோரிக்கைகளை முன்வைத்து சிறிலங்கா அரசாங்கத்தின் அடக்குமுறைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சுவிஸ் தமிழர் பேரவையின் ஆலோசகர் வன்னித்தம்பி தங்கரத்தினம் பொதுச்சுடரினை ஏற்றி நிகழ்வினை தொடங்கினார்.

சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்நிகழ்வில் சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், அனைத்துலக தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் என பலரும் உரையாற்றவுள்ளனர்.

இந்த ஒன்று கூடலில் கொழும்பில் இருந்து வருகை தந்திருக்கும் நவசமாஜக் கட்சியின் கல்விக்கழக பொறுப்பாளரும் ஊடகவியலாளருமான ரணத் பிரேம்லால் குமாரசிங்க உரையாற்ற உள்ளமை சிறப்பு அம்சமாகும்.

‘இன்றில்லையேல் என்றுமில்லை’ என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கி முழக்கம் எழுப்பி ஈழத்தில் தமது சுயநிர்ணய உரிமைக்கான குரலை தமிழ் மக்கள் ஒன்றாக வலியுறுத்துகின்றனர்.

குறிப்பாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் போராட்டத்தையும் அங்கீகரிக்குமாறு வலியுறுத்தி சுவிஸ் அரசாங்கத்திடம் தமது கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்புகின்றனர்.

சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கு எதிரான கண்டனங்களும் ஒன்று கூடியுள்ள மக்களால் எழுப்பப்படுகின்றன. அத்துடன், வன்னி பெருநிலப்பரப்பில் மக்கள் தற்போது எதிர்நோக்கும் மனிதப் பேரவலங்களுக்கு முடிவு காணும் வகையில் சுவிஸ் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

வன்னி மக்களின் உடனடித் தேவையான உணவு, மருந்து என்பவற்றை வன்னி மக்களுக்குச் சென்றடையக்கூடிய வகையில் சுவிஸ் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஒன்றுகூடியுள்ள மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அதேவேளையில் சுவிசின் பேர்ண் மாநிலம் மற்றும் ஏனைய மாநிலங்கள் உட்பட சகல பகுதிகளிலும் இந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடலை விளக்கி பன்மொழிகளிலும் எழுதப்பட்ட பல்லாயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள் வீடு வீடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை சுவிஸ் அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கையெழுத்து பெறப்பட்ட மனுவும் ஒன்றுகூடலின் முடிவில் சுவிஸ் அரச அதிபர் மதிப்பிற்குரிய கன்ஸ் ருடொல்ப் மேர்சிடம் சுவிஸ் தமிழர் பேரவையினால் கையளிக்கப்படவுள்ளது.

அத்துடன் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் பிரகடனமும் கையளிக்கப்பட்டு அதன் பிரதிகளும் ஒன்று கூடலின் முடிவில் வெளியிடப்படவுள்ளன.

இந்நிகழ்வின் கொள்கை விளக்க பிரகடனத்தினை விளக்கி சுவிஸ் தமிழர் பேரவையின் செயலாளரும் லௌசான் மாநில மாநகர சபையின் உறுப்பினருமாகிய தம்பிப்பிள்ளை நமவசிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கை:

அன்பார்ந்த மக்களே!
மதிப்புக்குரிய சுவிஸ் நாட்டவர்களே!
அனைத்துலக சமூகமே!

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இன்றைய நாளில் நாம் பேர்ண் நாடாளுமன்ற முன்றலில் கூடியுள்ளோம். சுவிசுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் இன்று எமது உளக்கிடக்கையை முன்வைத்து எமது எதிர்பார்ப்பை முன்வைக்க வந்துள்ளோம்.

தமிழர்களின் ஆர்வலர்களும் சகல சுவிஸ் வாழ் தமிழ் அமைப்புக்களும் இந்த ஒன்றுகூடலில் ஒருங்கிணைந்த மக்கள் கூட்டமாக நிற்பதை நீங்கள் காணலாம்.

சுவிஸ் தமிழர் பேரவையின் அழைப்பை ஏற்று இங்கு ஒருமித்த குரலாக தமிழர்களாகிய நாம் சமூகமளித்துள்ளோம். தமிழர்களின் வரலாற்றுப்பாதையில் இந்நாளும் பதியப்படும் என நம்புகின்றோம்.

ஏனெனில் இன்றைய நாளில் இத்தருணத்தில் ஆயிரம் ஆயிரம் தமிழர்கள் அணிதிரண்டு தமது உரிமை குரலை வெளிப்படுத்தி தமிழீழத்தின் விடுதலையை வேண்டி நிற்கின்றனர்.

தாயகத்தில் கட்டவிழ்த்து விடப்படும் தமிழர் மீதான வன்முறைகளும் அடக்குமுறைகளும் எமக்கு பாரிய துன்பத்தை தருவதோடு எமது எதிர்கால இருப்பு பற்றிய கேள்வியையும் எழுப்பி நிற்கின்றன.

ஒவ்வொரு நாளும் தமிழ் மக்கள் வகை தொகையின்றி கொல்லப்பட்டு வருகின்றனர். குழந்தைகள், பெண்கள், வயோதிபர் என சகலவிதமான அப்பாவி பொதுமக்களையும் சிறிலங்கா அரச படைகளும் அவர்களது ஒட்டுப்படைகளும் எவ்வித கரிசனையின்றியும், கேட்க ஆளில்லை என்ற துணிவுடனும் கொன்றொழித்து வருகின்றனர்.

இந்த அநீதிகளை அறிந்தும் உலகின் பிரபல்யம் வாய்ந்த ஊடகங்கள் யாவும் மௌனித்து நிற்கின்றன. இலங்கை இனப்பிரச்சனை தொடர்பில் பல ஊடகங்கள் ஒருபக்க சார்பான செய்திகளையே வெளியிட்டு வருகின்றன.

இந்த செய்திகளுக்கு தமிழர்களின் பிறிதொரு கருத்தும் இருப்பதை ஊடகங்கள் உணர வேண்டுகின்றோம்.

சிறிலங்கா அரசின் கருத்துக்கள் எங்கனம் செய்திகளில் இடம் பிடிக்கின்றனவோ அவ்வாறே தமிழர்களின் கருத்துக்களும் இடம்பிடிக்க வேண்டும். தற்போதைய செய்திகள் தமிழர்கள் இலங்கையில் ஏதோ சிறிலங்கா அரசிடம் தங்களுக்கு உரிமையற்ற விடயத்தை வேண்டி நிற்பதைபோல் சித்தரிக்கப்படுகின்றன.

அல்லது தமிழர்கள் தம்மை காக்கும் பொருட்டு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அவை குற்றச்செயல்களாக காட்டப்படுகின்றன.

தென்னிலங்கையில் இன்று பயங்கரமான சிங்கள பௌத்த பேரினவாதம் தலைவிரித்தாடுகிறது. இது தமிழ் பேசும் மக்களின் சனநாயக வழியில் அமைந்த எந்தவொரு தீர்வுக்குமான கதவுகளையும் முற்றாக மூடியுள்ளது.

இந்நிலையில் தமிழர் தாயகத்தில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்களாகிய நாம் இன்று அடைந்துள்ள அவலமானதும் ஆபத்தானதுமான நிலையை அனைத்துலக சமூகத்தின் முன்னால் வெளிப்படுத்தி எமக்கான நியாயத்தையும் அங்கீகாரத்தையும் கோருகின்றோம்.

தமிழ் பேசும் மக்களாகிய நாம் இலங்கைத்தீவினை ஐரோப்பியர் ஆக்கிரமிக்க முன்னர் தனியரசாக இருந்து வந்துள்ளோம். 1833 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் இலங்கையில் ஒற்றையாட்சி முறையைப் புகுத்திய போது தமிழர் தாயகம் சிங்கள தேசத்தோடு இணைக்கப்பட்டது.

அப்போது, அது தன் இறைமையை இழந்ததையும், அதன்பின் 1948 இல் இலங்கையை விட்டு ஆங்கிலேயர் வெளியேறிய போது தமிழ் பேசும் மக்களின் இறைமையை எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருந்த சிங்களவரிடம் ஒப்படைத்துச் சென்றதையும் சுட்டிக் காட்டுகின்றோம்.

இவ்வாறு சிங்களச் சமூகம் முறையற்ற வகையில் பெற்றுக்கொண்ட இறைமையின் மூலம் நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி மிக அநாகரிகமான முறையில் தமிழ்பேசும் மக்கள் ஒடுக்கப்பட்டனர்.

எமது பாரம்பரிய வாழ்விடங்கள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் காரணமாக நிலச் சூறையாடலுக்குட்பட்டு எமது குடித்தொகைப் பரம்பல் முற்றாகச் சிதைக்கப் பட்டது. இவ்வாறாகத் தமிழ் பேசும் மக்களாகிய எமது வாழ்வுரிமை பறிக்கப்பட்டது.

சட்டங்கள் மட்டுமன்றி இலங்கைத்தீவின் அரசியல் யாப்புக்களுமே இனவாத ஒடுக்குமுறைக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டன.

இத்தகைய இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தமிழ் பேசும் மக்களின் அப்போதைய அரசியல் தலைமை அங்கீகரிக்கப்பட்ட நாகரீகமான அரசியல் வழிமுறைகளையும் மென்முறைப் போராட்ட வடிவங்களையும் கைக்கொண்டது.

இவ்வாறாக மென்முறைப் போராட்ட வடிவங்களைக் கைக்கொண்ட போது எம்மக்கள் மீது மிக மோசமாக வன்முறைகள், இனப்படுகொலைகள், பாலியல் கொடூரங்கள் என்பன பிரயோகிக்கப்பட்டன.

இந்நிலையில் 70-களின் முற்பகுதியில் ஆயுதம் தாங்கிய தமிழ் மக்களின் தற்காப்புக்கும் விடுதலைக்குமான போராட்டத்துக்கு தமிழர் தரப்பு நிர்ப்பந்திக்கப்படுகின்றது.

எனவே, அமைதி வழியில் அரசியல் தீர்வுகளை எட்டுவது இயலாது என்பதை ஏற்றுக்கொண்ட தமிழ்த் தலைமைகள், 1976 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் வட்டுக்கோட்டையில் தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்டனர்.

பின்னர் அரசியல் அரங்கில் அதற்கான மக்கள் ஆணையை 1977 ஆம் அண்டு நடைபெற்ற சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றுக்கொண்டனர்.

ஆயுதம் தாங்கி எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட நாம் தமிழ் மண்ணையும் தமிழ் பேசும் மக்களையும் ஆழமாக நேசிக்கும் ஆற்றல் மிகுந்த சிறந்த ஒரு தேசியத் தலைவரையும் ஒரு மரபு வழிப் போரை நடத்தவல்ல படையணிகளையும் கண்டு நிமிர்ந்து எழுந்தோம்.

இதன் மூலம் இலங்கைத்தீவில் ஒரு தனித்தேசிய இனமாகத் தமிழ் மக்கள் நாம் வாழ்ந்து வருகின்றோம் என்னும் உண்மையை உலக அரங்கில் ஓங்கி ஒலித்தோம்.

இப்போராட்ட காலத்தில் சிங்கள ஆட்சியாளர்களுடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போதும் தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.

தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்பும் இன அழிப்பும் தமிழர் தாயகத்தில் நடத்தப்பட்டன. கண்மூடித்தனமான வான் குண்டு வீச்சுக்கள், எறிகணை வீச்சுக்கள், ஆகியன பாடசாலைகளிலும் மக்கள் குடியிருப்புக்களிலும் வழிபாட்டுத் தலங்களிலும் அடிக்கடி நடத்தப்பட்டு எமது மக்கள் பச்சிளம் பாலகர் முதல் முதியோர் வரை கோரமாகப் பலியெடுக்கப்பட்டனர்.

பலவிதமான இராணுவ நடவடிக்கைகளாலும் சொந்த மண்ணில் இருந்து தமிழ்மக்கள் இடம்பெயர்க்கப்பட்டு, ஏதிலிகளாக அலைக்கப்பட்டனர். இத்தகைய அரச பயங்கரவாதக் கொடூரங்களையெல்லாம் அரசு என்ற முகத்திரை கொண்டு அனைத்துலக சமூகத்திற்கு முன் சிங்கள பௌத்த பேரினவாதம் மூடி மறைத்தது.

ஆயினும், எமது விடுதலைப் போராட்டம் ஆக்கிரமிப்புக்களை எதிர்கொண்டு முறியடித்து வெற்றிகளைக் குவித்தது.

இந்த வெற்றிகளின் பின்னால் தமிழ்மக்கள் அனைவரும் கிளர்ந்து எழுந்து தேசிய விடுதலைப் போருக்குத் தோள்கொடுத்தனர். இந்த வரலாற்றுப் போக்கில் தமிழர் தாயகத்தில் தமிழ்பேசும் மக்களுக்கு என்றொரு நடைமுறை அரசுக்கான கட்டுமானங்கள் நேர்த்தியான முறையில் கட்டியெழுப்பப்பட்டன.

இவ்வாறு கட்டி எழுப்பப்பட்ட இந்த அரசுரிமையையும் தமிழ் மக்களினதும் கோரிக்கைகளையும் நிராகரித்த சிறிலங்கா அரசு, அனைத்துலக நாடுகள் சிலவற்றின் உதவியுடனும் ஒத்துழைப்புடனும் தமிழர்களின் இறைமையை பறித்து தமிழர் தாயகத்தை கபளீகரம் செய்து மூர்க்கமான தமிழின அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது .

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கிய தமிழின அழிப்பு நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் இருக்கையில் எமது மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை நிறுத்துவதற்க்கு இதுவரை எவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்ககவில்லை.

இந்நிலையில் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான எந்தவொரு தீர்வையும் முன்னெடுக்கமாட்டார்கள் என்பதை நாம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்கின்றோம்.

இந்த உண்மை நிலையின் காரணத்தினால் நாம் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியவர்களாகச் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.

எனவே, எமது தாயக நிலத்தையும் கடலையும் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா இராணுவம் எமது மண்ணை, கடலை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், எமது நிலத்தில், எமது பலத்தில் எமது தலை விதியை நாமே நிர்ணயித்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாக வேண்டும் என்றும், அந்த உன்னதமான உயரிய சுதந்திர வாழ்வை நோக்கி தமிழ் மக்கள் அணி திரண்டபடியே உள்ளோம் என்பதையும் இந்த எழுச்சிப் பிரகடனத்தின் மூலம் முன்வைக்கும் அதேவேளை, எமது அவலக்குரலை கேளுங்கள்.

சிறிலங்கா அரசின் அழிப்பு வேலைகளையும் இராணுவ பலப்படுத்தலையும் தடுத்து நிறுத்துங்கள். தமிழர்களாகிய நாம் சிறிலங்கா அரசாங்கத்ததால் எமது மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அனைத்துலக அரங்கில் அதன் மனச்சாட்சியின் முன்பாக மேற்குறித்த பிரகடனங்களை முன்வைத்து எமது உரிமைக் குரலை வெளிப்படுத்துகின்றோம். எங்கள் அபிலாசைகளும் விருப்புகளும் தமிழீழ விடுதலைப் புலிகளையே மையமாகக் கொண்டுள்ளது.

எனவே, தமிழ் பேசும் மக்களாகிய எமது அடிப்படை வாழ்வுரிமையையும் சுதந்திர வாழ்வையும் ஏற்றுக்கொண்டு எமது மரபுவழித் தாயகம், தேசிய இனம், தன்னாட்சி என்பவற்றின் அடிப்படையில் எம்மையும் எமது இறைமைக்கான போராட்டத்தையும் அங்கீகரிக்க வேண்டும் என்று சுவிற்சர்லாந்து அரசாங்கத்தையும் அனைத்துலக சமூகத்தை நாம் கோருகின்றோம். எமது வேண்டுகோளை சுவிற்சர்லாந்து அரசானது கவனத்தில் எடுத்து எமது அபிலாசைகளை நாம் அடைவதற்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்யும் வண்ணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இன்றைய நாளில் வேண்டுகின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

கூடியிருந்த மக்களிடமும் மாநில ரீதியாகவும் பெறப்பட்ட கையெழுத்துக்களையும் இணைத்து சுவிஸ் அரச தலைவருக்கான மனு கையளிக்கப்பட்டது.

அந்த மனு வருமாறு:

மேதகு திரு.ஹன்ஸ்-றுடொல்ப் மேர்ற்ஸ்
சுவிஸ் கூட்டரசின் தலைவர்,
பேர்ண்.

பேர்ண். 30மார்ச் 2009.
Réf/CH/Merz/300309vtfska

அதி மேன்மையானவரே,

தமிழ் மக்களின் அவலநிலை.

சுவிசில் உள்ள 30-க்கும் மேற்பட்ட நாடற்ற தமிழர்களின் கழகங்களின் தலைமையாக விளங்கும் சுவிஸ் தமிழர் பேரவையானது, தங்களது அரசின் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஓர் தீர்வு காணும் முயற்சிகளுக்கான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

வன்னியில் இடம்பெற்றுள்ள மனிதப் பேரவலம் நாளாந்தம் நூற்றுக்கணக்கானோரின் மரணத்தாலும், மேலும் நூற்றுக்கணக்கானோர் காயப்படுவதாலும் பலமடங்கு தனது பரிமாணத்தால் அதிகரித்துக் காணப்படுகின்றது.

அனைத்துலக மனித உதவி நிறுவனங்களில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் மட்டுமே வன்னியில் அனுமதிக்கப்படுவதால், சிறிய அளவில் மருத்துவ உதவியைத் தேவையானவர்களுக்கு அதனால் வழங்க முடிகின்றது.

அதனால் கடுமையாக காயம்பட்டவர்களை எடுத்துச்சென்று இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சேர்ப்பிக்கவும் முடிந்துள்ளது.

எனினும் வன்னியில் தொடர்ந்தும் தங்கி இருக்க விரும்புபவர்களுக்கான தேவைகள் கவனத்தில் எடுப்பது குறைவாகவே உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகளின் படி கடந்த 3 மாதங்களில் 3,000 வரையானோர் கொல்லப்பட்டும் 10,000-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தும் உள்ளனர்.

இந்த எண்ணிக்கைகள் நாளாந்தம் அதிகரித்த வண்ணமே உள்ளன. சிறிலங்கா அரசு பிரகடனப்படுத்திய பாதுகாப்பு வலையத்தின் மீது சிறிலங்கா அரச படைகளால் நடத்தப்படும் வான்குண்டு வீச்சுக்களும் தன்னிச்சையான எறிகணைத் தாக்குதல்களும் குறைவின்றித் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

சுவிஸ் அரசு உட்படச் அனைத்துலக சமூகத்தினால் அப்பகுதிக்கு மனித நேய உதவிகளை வழங்கும் வகையில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையை சிறிலங்கா அரசு மறுதலித்து விட்டது. இத்தகைய பின்னணியில், அனைத்துலக சமூகம் தமிழ் இன அழிப்பைத் தடுக்கும் வலுவற்றுக் காணப்படுகின்றது.

தீர்க்கமாக எதுவும் செய்யாது வெறும் அறிக்கைகளை விடுவதன் மூலம் சுவிஸ் அரசும் தமிழ் இன அழிப்பை அனுமதிக்கப் போகின்றதா? இதுவே எமக்குள் எழும் கேள்வியாக உள்ளது.

எப்படி இருப்பினும் பெப்ரவரி 5 ஆம் நாள் 2009 இல் உடனடியாகப் போர் நிறுத்தம் வேண்டும் என கூட்டரசின் நாடாளுமன்றம் விடுத்த அறிக்கையை நாம் வரவேற்கின்றோம்.

எனினும் வழமை போலவே மறுதலித்ததுடன் இந்தக் கோரிக்கையை கவனத்தில் எடுக்கக் கூடத் தயாராகவில்லை. இந்தக் கட்டத்தில் இது தொடர்பாக தங்களின் அரசு அடுத்து எடுக்கப் போகும் நடவடிக்கை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகின்றோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளையும் சிறிலங்கா அரசையும் பேச்சுவார்த்தை மேசைக்கு வரச்செய்ய சுவிஸ் அரசு முன்னர் எடுத்த முன்முயற்சிகளுக்காக நாம் எக்காலத்திலும் நன்றி உடையவர்களாய் இருப்போம்.

போரிடும் பகுதியினரை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு சுவிஸ் அரசு எடுத்துவரும் என்ற உறுதியான நம்பிக்கையில், அமைதியை விரும்பும் சுவிஸ் தமிழர்களாகிய நாம் எமது கையொப்பங்களை இடுகின்றோம்.

சுவிஸ் மத்திய அரசை நாம் வற்புறுத்திக் கேட்பது யாதெனில்:

மேலும் தாமதிக்காது அனைத்துலக சமூகத்தை இலங்கையில் நடக்கும் போரை நிறுத்தி தமிழ் மக்களைக் காப்பாற்ற ஊக்கப்படுத்துவது:

தனது சிறப்புத் தகமையைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்தத்துக்கு உடன்படிக்கைக்கு உதவ:

வன்னிக்கு அவசரமாகத் தேவைப்படும் மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லப்பட:

சுயநிர்ணய அடிப்படையிலான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற உதவ:

தமிழீழ விடுதலைப் புலிகளைத் தமிழரின் பிரதிநிதிகளாகப் பிரகடனப்படுத்த

தங்களின் கருணைக்கு நன்றி தெரிவிக்கும்
உங்கள் உண்மையுள்ள,

எனக்குறிப்பிட்டு மனுவில் சுவிஸ் வாழ் தமிழர்கள் தமது பெயர், முகவரி, கையொப்பத்தினை இட்டுள்ளனர்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.