5 ஆண்டு வேட்டி துவைப்பார்-5 ஆண்டு சேலை துவைப்பார் ராமதாஸ்-விஜயகாந்த்

தூத்துக்குடி: ஜெயலலிதாவுக்குப் பின்னால் ரோபோ போல நிற்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். அவர் ஐந்து ஆண்டுகளுக்கு வேட்டி துவைப்பார். ஐந்து ஆண்டுகளுக்கு சேலை துவைப்பார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் நக்கலடித்துள்ளார்.

தூத்துக்குடி தேமுதிக வேட்பாளர் எம்.எஸ்.சுந்தரை ஆதரித்து நேற்று காலை செய்துங்கநல்லூரில் பிரசாரம் செய்தார் விஜயகாந்த்.

அங்கும், உடன்குடி, ஆழ்வார்திருநகரி ஆகிய பகுதிகளிலும் விஜயகாந்த் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் முதன்முதலில் அடியெடுத்து வைக்கிறது. தூத்துக்குடி தொகுதிக்கு வேட்பாளர் சுந்தர் முதன்முதலாக களம் இறங்கி உள்ளார். உங்கள் ஆதரவு எங்களுக்கு நிச்சயம் வேண்டும்.

கூட்டணி வைத்துக் கொண்டால் சுதந்திரமாக செயல்பட முடியாது என்பதால் நான் மக்களோடும், தெய்வத்தோடும் மட்டும் கூட்டணி வைத்துள்ளேன். நான் உங்களை நம்புகிறேன். நீங்கள் என்னை நம்புங்கள்.

மூப்பனார் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் அவர் சொல்லை நான் கேட்டிருப்பேன். காலையில் ‘டிவி’ பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது அம்மா (ஜெ.,) முன்பாக ஒருவர் விரைப்பாக நின்றுகொண்டிருந்தார்.

அவர், ஐந்து ஆண்டுகள் வேட்டி துவைப்பார்; அடுத்த ஐந்து ஆண்டுகள் சேலை துவைப்பார். அவரது பெயரை நான் சொல்லாமலே உங்களுக்குப் புரியும். அந்த அளவுக்கு எல்லாம் நான் தன்மானத்தையும், சுயமரியாதையையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

அவரைப்போல நான் யார் முன்னும் நிற்க விரும்பவில்லை; மக்களாகிய உங்கள் முன் நிற்கிறேன். கருணாநிதியின் பின் நின்றுகொண்டு காங்கிரசார் எப்படி காமராஜர் ஆட்சியை ஏற்படுத்தமுடியும்.

எம்.ஜி.ஆர்., காலத்தில் பிரபலமான ஒரு கோஷத்தை நாள் கேள்விப்பட்டுள்ளேன். மகன், ‘பிள்ளையோ பிள்ளை’ என நடிக்கிறான். அப்பன், ‘கொள்ளையோ கொள்ளை’ என அடிக்கிறான் எனச் சொல்வர். அந்தக் கொள்ளை தற்போதும் தொடர்கிறது. தமது பிள்ளைகளுக்காக தமிழகத்தையே துண்டாடிவிட்டார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பது முக்கியமல்ல. மக்களாட்சியை கொண்டு வருவோம். மக்களின் ஆசி பெற்ற வேட்பாளர் என்று எனது வேட்பாளரை அறிவிக்கிறேன்.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திராவிடக் கட்சிகள் ஏமாற்றி வருகின்றன. எனக்கு பின்னால் அவர்கள் பிரசாரத்திற்கு வருவார்கள். எதை நம்ப வேண்டும், எதை நம்பக் கூடாது என்று உங்களுக்கு தெரியும்.

நானா நன்றி மறக்காதவன்…

அமைச்சர் ஆற்காடு வீராசாமி மூலம் பத்திரிகைகளில் இன்று ஒரு அறிக்கை கொடுத்துள்ளார். கருணாநிதியும், மூப்பனாரும் எனது திருமணத்திற்கு வந்தார்கள். தாலி எடுத்துக் கொடுத்தார்கள் என்றும், நான் நன்றி மறந்தவன் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

நான் எப்போதும் நன்றி உணர்வு கொண்டவன். அதனால்தான் கருணாநிதிக்கு பொன்விழா எடுத்து தங்கப்பேனா பரிசாக கொடுத்தேன்.

முன்பு தென்காசியில் நடைபெற்ற இடைத்தேர்தலின் போது எம்.ஜி.ஆர். “புதியபூமி” படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது தி.மு.க. சார்பில் வேட்பாளராக கதிரவன் நிறுத்தப்பட்டார். கதிரவனுக்கு ஆதரவாக புதியபூமி படத்தில் தனது கதாபாத்திரத்தின் பெயரை கதிரவன் என்று எம்.ஜி.ஆர். வைத்துக் கொண்டார். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரையே விரட்டியவர்கள் எனக்கு நன்றி உணர்வு உள்ளதா? என்று கேட்கிறார்கள்.

துறவியென்றால் ஜெ.வுக்கு பதவியெதற்கு?

ஆண்டாண்டாக பதவி வகிப்பவர்கள் வறுமையை ஒழிக்க என்ன செய்தார்கள்? ஜெயலலிதா தன்னை ஒரு துறவி என்று கூறுகிறார். அப்படியானால் அவருக்கு பதவி எதற்கு? வீட்டுக்குப் போக வேண்டியதுதானே? டாஸ்மாக் ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஜெயலலிதாதான்.

எனது வேட்பாளர்கள் படித்தவர்கள். அவர்கள் தவறு செய்தால் நானே அடிப்பேன். தமிழக மக்கள் சொல்பவரே பிரதமராக இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழகம் வளம் பெறும்.

நான் குடும்ப அரசியல் செய்வதாக கூறுகிறார்கள். எனது மைத்துனர் ஆரம்பத்திலிருந்தே என்னுடைய சினிமா கால்ஷீட்டை கவனித்து வந்தார். கட்சி தொடங்கிய பின்னரும் எனக்கு உதவியாக இருந்து வருகிறார். விவசாயம் செய்யும் விவசாயிக்கு உதவியாக அவரது மனைவி, மக்கள் வரக் கூடாதா?

நான் தேர்தலில் நான்கைந்து சீட்டு கேட்டதாக கூறினார். நான் யாரிடமும் கூட்டணிக்காக போகவில்லை. நான் நினைத்திருந்தால் எப்போதோ கோடீஸ்வரன் ஆகியிருக்க முடியும். ஆனால் நான் மக்களுக்கு நன்மை செய்யவேண்டும், அவர்களை அழகுப்படுத்தி பார்க்க வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன்.

எம்.ஜி.ஆரைப் பற்றி பேச எனக்கு அருகதை இல்லை என்று ஒரு நடிகர் கூறியுள்ளார். எம்.ஜி.ஆரைப் பற்றி பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

எம்.ஜி.ஆரை தனது சினிமா படத்தில் காட்டினால்தான் அவருக்கு விசுவாசம் என்றில்லை. வேண்டும் என்றால் அந்த நடிகர் அவரது தலைவியிடம் சென்று எம்.ஜி.ஆர் படங்களை ஏன் சிறியதாக போடுகிறீர்கள் என்று கேட்கலாமே.

காங்கிரசை விமர்சிக்காதே என்கிறார்கள். தங்க ஊசி என்பதற்காக அதை எடுத்து கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா?

தே.மு.தி.க தொண்டர்கள் புற்றில் இருந்து வரும் ஈசல் போல வந்து கொண்டே இருப்பார்கள். தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தொண்டர்கள் இரவு-பகல் பாராமல் சுறுசுறுப்பாக செயல்பட்டு கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் விஜயகாந்த்.

திமுக-அமுதிகவை வதம் செய்யுங்கள்..

பிற்பகலில் திருச்செந்தூர் வந்த விஜயகாந்த் அங்கு பேசுகையில், திருச்செந்தூர் சூரனை வதம் செய்த ஊர். அதைபோன்று தி.மு.க.- அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் வதம் செய்யுங்கள். தே.மு.தி.க. வின் முரசு சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். ஒரு தடவை கொடுத்து பாருங்கள். நான் மாறாமல் இருக்கிறேன்.

மற்றவர்கள் மாட்டு சந்தையை போன்று பேரம் பேசுகிறார்கள். நான் உங்களை மட்டும் நம்பி வந்திருக்கிறேன். எதிர்கால சந்ததிக்கு நல்ல கட்சியை அடையாளம் காட்டுங்கள். அல்லது நீங்கள் நல்லது செய்யுங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன் என்றார் விஜயகாந்த்.

காயல்பட்டனத்தில் அவர் பேசுகையில், அங்கு அதிகம் உள்ள இஸ்லாமியர்களைக் கவரும் வகையில் பேசினார்.

என் வாழ்க்கையில் அதிகம் பின்னிபிணைந்தவர்கள் இஸ்லாமிய மக்கள் தான். எனக்கு எம்மதமும் சம்மதம். கடந்த தேர்தலில் 16 இஸ்லாமியர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தேன். ஆனால் எல்லா மதத்திலும், சாதிகளிலும் ஏழைகள் உள்ளனர். ஏழைகள் அழக்கூடாது.

என்னை பொறுத்தவரை வறுமை, ஊழல் ஒழிப்பது தாரக மந்திரமாக வைத்துள்ளேன். முடியாது என்று முட்டாள்கள் கூறுவார்கள். நிர்வாகத்தை கொடுத்து பார்த்தால் தானே தெரியும் என்றார் விஜயகாந்த்

Source & Thanks : thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.