பெண் போலீஸ் கொலையில் ‘போலீஸ்’ சித்தப்பா கைது

சிவகங்கை: சிவகங்கை அருகே பெண் போலீஸ் பிணமாக கிடந்தச் சம்பவத்தில், மதுரை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். அண்ணன் குடும்பத்தை பழி வாங்குவதற்காக சித்தப்பாவே கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சிவகங்கை அருகே கோவானூர் முட்புதருக்குள் கடந்த 11ம் தேதி சாக்கு மூடையில் இளம் பெண் நிர்வாண நிலையில் தலை துண்டிக்கப்பட்டு கிடந்தார். அவரது தலை கிடைக்கவில்லை.கடந்த 24ம் தேதி இறந்தவர் யார் என்ற அடையாளம் தெரிந்தது. மதுரை 6 வது பட்டாலியனில் ஏட்டாக பணிபுரிந்த வேல்விழி (27), திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே எம்.வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. தலை கிடைக்காததால் கொலைக்கான காரணம் தெரியாமல் தனிப்படை போலீசார் திணறி வந்தனர். நேற்று இந்த சஸ்பென்ஸ்க்கு விடை கிடைத்தது.

வேல்விழியின் சித்தப்பா (தந்தையின் தம்பி) பழனிவேல் (43), மதுரை ஊமச்சிகுளம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக உள்ளார். தூரத்து உறவினரான வசந்தாவை திருமணம் செய்த இவர் கருத்து வேறுபாட்டினால் 7 ஆண்டுகளுக்கு முன் அவரை பிரிந்தார். தற்போது பழனிவேல் முஸ்லிம் பெண் ஒருவருடன் குடும்பம் நடத்தி வருகிறார். இந்நிலையில் வசந்தாவின் தம்பி அய்யநாதனுக்கும் (32), வேல்விழிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண பேச்சு வார்த்தை நடந்தது. இதற்கு பழனிவேல் எதிர்ப்பு தெரிவித்தார். அதை புறக்கணித்து திருமண பேச்சு தொடர்ந்ததால் அண்ணன் குடும்பத்தினரை பழிவாங்க திட்டமிட்டார்.”நான் கொடுக்கும் பணம், உடைகளை வசந்தாவிடம் கொடுக்க வேண்டும்’ என, கூறி கடந்த 10ம் தேதி வேல்விழியை மதுரையில் இருந்து காரில் அழைத்து சென்றார்.

மாட்டு தாவணி அருகே காரை நிறுத்தி வேல்விழியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின் கழுத்தை அறுத்து ரத்தத்தை வேல்விழி அணிந்திருந்த நைட்டியை அவிழ்த்து அதன்மூலம் துடைத்தார். அண்ணன் குடும்பத்தை அவமானபடுத்துவதற்காக வேல்விழி உடலை நிர்வாணமாக்கி தலையை பூவந்தி அருகே கீரனூரில் பாழடைந்த கிணற்றிலும், உடலை சாக்குமூட்டையில் கட்டி கோவனூர் முட்புதரிலும் வீசினார். யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்பதற்காக தனது பணிநாள் அன்று இக்கொலையை செய்துள்ளார். பழனிவேலை நேற்று கைது செய்த தனிப்படையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.