விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதலில் சிக்கிய விஜயபா படையணி

வன்னிப் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் குறிச்சூட்டுத் தாக்குதலில் சிக்கி 7 ஆவது விஜயபா றெஜிமென்ட் படையணி பலத்த இழப்புக்களைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

சாலை பகுதியால் நகர்வில் ஈடுபட்டு வரும் 55 ஆவது படையணியின் 7 ஆவது விஜயபா றெஜிமென்ட் படையணி விடுதலைப் புலிகளின் 10 அடி உயரமான மணல் அணை ஒன்றை கைப்பற்றும் முயற்சியில் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது.

இந்த மணல் அணையில் உள்ள விடுதலைப் புலிகளின் நிலை இடங்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் நோக்கத்துடள் பீரங்கிப் படையணியைச் சேர்ந்த லெப். சந்திரஜித் தலைமையில் 4 பேர் கொண்ட இராணுவ அணி ஒன்று நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.

விடுதலைப் புலிகளின் நிலை இடங்களை அவர்கள் நோக்கி ஊர்ந்து சென்ற போது விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதல் அணியினர் அவர்களை அடையாளம் கண்டு தாக்குதலை நடத்தினர்.

இதில் லெப். இந்திரஜித் உட்பட இருவர் கொல்லப்பட்டதுடன், ஏனைய இருவரும் காயமடைந்திருந்தனர்.

இவர்களை காப்பாற்றும் முயற்சியில் 7 ஆவது விஜயபா படையணியைச் சேர்ந்த லெப். தாரங்க துசார தலைமையிலான குழுவினர் அங்கு சென்ற போது விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அவர்களும் சிக்கி கொண்டனர்.

தாரங்கவின் தொலைத் தொடர்பினை கையாளும் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன், தாரங்கவும் அதிக நீரிழப்பினால் பாதிக்கப்பட்டார்.

இவர்கள் அனைவரும் வான்குண்டுத் தாக்குதலில் ஏற்பட்ட குழி ஒன்றுக்குள் பதுங்கி கொண்டனர். அதன் பின்னர், அவர்களை காப்பாற்ற கப்டன் அசங்க அன்றூ மற்றும் கப்படன் பிரசன்ன ஆகியோரின் தலைமையில் இரு பிளட்டூன் படையினர் அனுப்பப்பட்டனர்.

ஆனால் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அந்த அணியும் சிக்கி கொண்டதனால் கப்டன் அன்றூ உட்பட இரு படையினர் கொல்லப்பட்டனர்.

இம் மோதல்களில் 7 படையினர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் படுகாயமடைந்திருந்தனர்.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலனவர்கள் விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.