மூதூரில் சிங்கள ஊர்காவல் படையினரால் 2 தமிழர்கள் சுட்டுப் படுகொலை

திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் இரு வேறு இடங்களில் சிங்கள ஊர்காவல் படையினரால் இரண்டு தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.

கிளிவெட்டி பிரதேசத்தில் உள்ள பாரதிபுரத்தில் நேற்று சனிக்கிழமை இரவு 9:00 மணியளவில் சிங்கள ஊர்காவல் படையினரால் தமிழர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஐந்து பிள்ளைகளின் தந்தையான 57 வயதுடைய கந்தையா யோகன் என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவர் ஆவார்.

கடந்த சில நாட்களாக ஊர்காவல் படையைச் சேர்ந்தவர்களால் கந்தையா யோகன் அச்சுறுத்தப்பட்டு வந்ததாகவும் பத்துக்கும் அதிகமான ஊர்காவல் படையினர் இவரது வீட்டினை உடைத்துச் சென்று சுட்டுக்கொலை செய்ததாகவும் திருகோணமலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் சுட்டு்க்கொல்லப்பட்ட போது இவரது வீட்டில் இருந்து சுமார் 600 மீற்றர் தொலைவில் காவல்துறையினரின் வாகனம் நின்றதாகவும் சம்பவம் இடம்பெற்று சில நிமிடங்களில் அவரது உடலத்தை காவல்துறையினர் எடுத்துச் சென்றதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிவெட்டி தங்கநகர் பகுதியிலும் சிறிலங்கா ஊர்காவல் படையினரால் தமிழர் ஒருவர் சிங்கள ஊர்காவல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 10:00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்துக்கும் சிங்கள ஊர்காவல் படையினரே காரணம் என திருகோணமலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

52 வயதுடைய செல்லத்துரை நல்லதம்பி என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவர் ஆவார்.

அண்மைய நாட்களாக மூதூர் பிரதேசத்தில் ஊர்காவல் படையினர் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் செயல்கள் அதிகரித்து வருகின்றன என திருகோணமலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source & thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.