15 தொகுதி-பல கோடி பேரம் பேசினார்கள்: விஜயகாந்த்

நெல்லை: தேர்தல் கூட்டணி பற்றி என்னிடம் பேசினார்கள். 15 சீட்டும், பல கோடி ரூபாய் தருவதாகவும் கூறினார்கள். ஆனால் நான் விலை போகவில்லை. நான் கோடிகளுக்காக கட்சி ஆரம்பிக்கவில்லை என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.

நெல்லை தொகுதி தேமுதிக வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை ஆதரித்து அந்தத் தொகுதியின் பல்வேறு பகுதிகளி்ல் பயணம் செய்து பேசினார் விஜயகாந்த். அதன் விவரம்:

மீன்பிடி தொழிலை நம்பி இப்பகுதி மக்களின் வாழ்வு அமைந்துள்ளது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் மீனவர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல்-டீசல் வழங்கவில்லை. அவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

மீனவர்கள் மீது எனக்கு எப்போதுமே தனி மரியாதை உண்டு. ராமேஸ்வரம் கடல்பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன் பிடிக்கிறார்கள் என்று காரணம் மட்டும் சொல்கிறார்கள்.

கடலில் வாழும் மீன்களுக்கு எல்லை கிடையாது. ஆனால் அந்த மீன்களை பிடிக்கச் செல்லும் மீனவர்களை மட்டும் எல்லை தாண்டுகிறார்கள் என்று கூறி இலங்கை ராணுவம் பிடித்துச் சென்று ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்கிறது. தமிழக மீனவர்கள் இப்படி கொல்லப்படுவதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பார்க்கிறார்களே தவிர, நடவடிக்கை எடுக்கவில்லை.

தேர்தல் கூட்டணி பற்றி என்னிடம் பேசினார்கள். 15 சீட்டும், பல கோடி ரூபாய் தருவதாகவும் கூறினார்கள். ஆனால் நான் விலை போகவில்லை. நான் ஆரம்பத்திலிருந்தே கூட்டணி கிடையாது என்பதை கூறிவந்தேன். அதில் உறுதியாகவும் உள்ளேன். நான் கோடிக்காக கட்சி ஆரம்பிக்கவில்லை. கோடி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கட்சி ஆரம்பித்துள்ளேன்.

மக்களுடனும், ஆண்டவனுடனும்தான் எனது கூட்டணி. நான் மக்களை மட்டுமே நம்பி தேர்தலில் நிற்கிறேன். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன். தீர்க்கப்படவில்லை.

திமுக-அதிமுக ஆட்சிகள் ஊழலையும், லஞ்சத்தையும் வளர்த்துள்ளன.

அரசியல் கட்சிகள் மாநாடு நடத்தி அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். லஞ்சத்தையும், வறுமையையும் ஒழிப்போம் என்று யாரும் தீர்மானம் நிறைவேற்றுவதில்லை. ஆனால் வறுமையையும், லஞ்சத்தையும் ஒழிப்போம் என்று தேமுதிக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்த நீங்கள் மட்டும் தொடர்ந்து கஷ்டப்பட்டு வருகிறீர்கள். உங்களைப் பற்றி நினைக்காதவர்களுக்கு எதற்கு ஓட்டுப் போடுகிறீர்கள். இதுவே அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சரியான தருணம். இந்த முறை உங்களுடன் கூட்டணி வைத்துள்ள எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். தேமுதிக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்கள்.

பெருந்தலைவர் காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை கொடுத்தார்கள். இப்போது மக்களை ஏமாற்ற கவர்ச்சி திட்டங்களை அறிவிக்கிறார்கள்.

தமிழ்நாடுதான் இந்தியாவின் பிரதமரை நிர்ணயிக்கும் மாநிலம் ஆகும். 40 தொகுதிகளில் வெற்றி பெறும்போது நாம் கைகாட்டுகிறவர்தான் பிரதமர். இது டெல்லிக்காக நடைபெறும் தேர்தல் என்று வேறு யாருக்காவது ஓட்டு போடாதீர்கள். சட்டப்பேரவை தேர்தலைப் போன்று இது அல்ல என்று நினைத்து விடாதீர்கள்.

தற்போது தேசிய கட்சிகள் மாநில கட்சிகளையே நம்பி உள்ளன. பீகாரில் ஒரு தேசிய கட்சிக்கு 3 இடங்களைத்தான் கொடுப்போம் என்கிறார்கள். இதுவா தேசிய கட்சி. இந்த தேசிய கட்சி உங்களுக்காக எந்த நன்மையாவது செய்துள்ளதா என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

இந்தியாவிலேயே மின்சாரத்திற்கும், கோர்ட்டுக்கும் விடுமுறை விட்ட ஒரே அரசு திமுக அரசு தான். மக்களுக்கு பணத்தை கொடுத்து ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஏமாறக்கூடாது. ஒரு மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.

புதிய ரத்தம், புதிய சிந்தனை, புதிய கொள்கை உள்ள தேமுதிகவுக்கு வாக்களியுங்கள். நாங்கள் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் எங்களின் சட்டையைப் பிடித்து நீங்கள் கேட்கலாம்.

நான் எம்ஜிஆர் ரசிகன். அவர் வழியிலேயே நடப்பேன். ஜானகி எம்ஜிஆர் நடத்தும் காதுகேளாதோர் பள்ளிக்கு வேறு யாராவது நிதி உதவி அளித்தார்களா? நான் அளித்து வருகிறேன். ஆனால் அதிமுகவில் எம்.ஜி.ஆர். படத்தையே பயன்படுத்தக்கூடாது என்று ஜெயலலிதா சொல்கிறார்.

ஜெயலலிதா ஆட்சியில் அரசு ஊழியளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். 10,000 சாலைப் பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் பலர் தற்கொலை செய்து கொண்டனர். வேலைநீக்கம் செய்த இவர்களா ஏழை மீது அன்பு வைப்பார்கள்? டான்சி ஊழலில் கையெழுத்து போட்டுவிட்டு கையெழுத்து போடவில்லை என்கிறார். இவரா ஏழைகளை காப்பாற்றுவார்?

அதிமுகவும், திமுகவும் மாறி மாறி பாஜகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்து பதவியை அனுபவித்துவிட்டு அவர்களை மதவாத கட்சி என்று சொல்கிறார்கள்.

மக்களை மதிக்க தெரியாதவர்களை மந்திரியாக தேர்ந்து எடுக்காதீர்கள். எனவே, ஒருமுறை எனக்கு சந்தர்ப்பம் தாருங்கள் என்று உங்களை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் விஜய்காந்த்.

Source & thanks : /thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.