ராமதாஸ் போனதால் கோபமே கிடையாது, நிம்மதிதான்: கருணாநிதி

சென்னை: பாமக போனதால் விரக்தியோ, கோபமோ கிடையாது. இப்போதுதான் நிம்மதியாக உள்ளது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணியை விட்டு விலகியதற்கு தெரிவித்த காரணங்களை அடுக்கி அளித்த பேட்டிக்கு கேள்வி-பதில் பாணியில் முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.

அந்த அறிக்கை:

கேள்வி:- நீங்கள் விரக்தியின் விளிம்பிற்கும் – கோபத்தின் உச்சிக்கும் சென்றுவிட்டதாக பா.ம.க. நிறுவனர் அறிக்கை விடுத்திருக்கிறாரே?.

பதில்:- எனக்கு எந்த விரக்தியும் கிடையாது – கோபமும் கிடையாது. ஒரு நிம்மதிதான் உள்ளது. ஆனால் விரக்தியில் கொடுக்கப்பட்ட பேட்டிகளை எல்லாம் நான் அறிவேன். 8-7-2001 அன்று இதே டாக்டர் ராமதாஸ் விரக்தியின் உச்சியிலும் கோபத்திலும் நின்று ஒரு பேட்டி கொடுத்தார். பழைய ஏடுகளைப் புரட்டினால் பார்க்கலாம் அதை. இதோ அந்தப் பேட்டி வருமாறு:-

“தேர்தலுக்கு முன்பு எனது ஆதரவு வேண்டிய அந்த அம்மையார், அப்போது நடந்துகொண்ட விதம் கண்டு நானே அவரை வாய் நிறைய “அன்புச் சகோதரி” என அழைக்க ஆரம்பித்தேன். அதே அம்மையார் தேர்தல் முடிந்ததும் நடந்துகொண்ட விதத்தை எப்படி விவரிப்பது? அந்த அம்மையார் எனக்கு ஏற்படுத்திய அவமானங்களை நாகரிகமாகவே பட்டியல் போடுகிறேன்.

அ.தி.மு.க. பெரும்பான்மை பெற்று வென்ற செய்தி வந்த அடுத்த தினமே ஏற்பாடு செய்த பதவியேற்பு விழாவிற்கு வேண்டும் என்றே எனக்கு மிகத் தாமதமாக தகவல் தந்தார்.

பூச்செண்டோடு காத்திருந்த ராமதாஸ்..

புது முதல்-அமைச்சரை வாழ்த்த வெள்ளை மனதுடன் அவசரமாகக் கிளம்பினேன். சரியாக 7 மணிக்குத்தான் சென்னை சேர முடிந்தது. பதவி பிரமாணம் முடிந்து கோட்டையில் இருப்பதாக தகவல் வந்தது. சரி, வீட்டுக்குப் போய் வாழ்த்தலாம் என்று பூச்செண்டை வாங்கி வைத்துக் கொண்டு என் மகள் வீட்டில் காத்திருந்தேன்.

தொடர்ந்து போயஸ் கார்டனுக்கு போன் செய்தேன். எந்தவித பதிலும் இல்லை. பூச்செண்டு வாட, அடுத்த நாளும் பூச்செண்டு வாங்கி வைத்து மீண்டும் போன் போடத் தொடங்கினேன். அடுத்த பூச்செண்டும் வாடிப்போக நான் திண்டிவனம் கிளம்பிவிட்டேன்.

அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிற்கு அவரே போன் செய்து அழைத்ததின் பேரில், போய்ப் பார்ப்போம் எனக் கிளம்பினேன். ராஜ்பவனில் விழா முடிந்தது.

முதல்வர் அழைப்பதாக அவரது செயலர் ராமகிருஷ்ணன் கவர்னர் மாளிகையிலேயே ஒரு அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு கவர்னர் பாத்திமா பீவியும், முதல்வரும் அமர்ந்திருந்தார்கள். அறையில் வேறு எந்த சேரும் இல்லை.

என்னைப் பார்த்தவுடன் கவர்னர் தனது ஊழியர்களை அழைத்து நாற்காலி கொண்டு வரும்படி கூறினார். ஆனால் அம்மையாரோ தனது முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். மிகுந்த வேதனையுடன் “வாழ்த்துக்கள்” என்று வாயளவில் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

எனக்கு நேர்ந்த அவமானங்களைப் பற்றி நேருக்கு நேராகச் சொல்லி நியாயம் கேட்பது என்று முடிவெடுத்து `அப்பாயிண்ட்மென்ட்’ கேட்டேன். ஒரு வாரத்துக்குப் பிறகு கோட்டையில் சந்திப்பதாக சொன்னார். கோட்டையில் கால் வைப்பதில்லை என்ற சபதத்தை முறித்துக் கொண்டு நானும் கோட்டைக்குச் சென்றேன்.

அந்த அம்மையாரின் அலுவலக அறையை ஒட்டி அருகில் ஒரு சாதாரண அறையில் அமர வைக்கப்பட்டேன். சரியாக ஒரு மணி நேரம் கழித்து தனது அறைக்கு அழைத்தார். இந்த அம்மையார்தான் முதல்வர் என்ற மமதையை பிறருக்குக் காட்டுவதிலேயே குறியாக இருந்ததால், அந்த நாற்காலியில் அமர்ந்தபடி என்னைச் சந்தித்தார். என் பேச்சைச் சுருக்கமாக முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டேன்.

கருணாநிதியுடன் நான் பேச நினைக்கும் போதெல்லாம் விஷயம் கேள்விப்பட்டதும் கவுரவம் பார்க்காமல் அவரே லைனில் வந்து பேசுவார். எனது சவுகரியத்தைக் கேட்டு நேரம் ஒதுக்குவார். நான் இதைச் சொல்லக் காரணம், உயர் பதவிகளில் இருப்பவர்கள் சில நாகரிகங்களை நன்றியை நல்ல விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான். இந்த நாகரிகங்கள் எதுவுமே தெரியாத ஒரு மனுசியோடு இனியும் அரசியல் பண்ண எந்தத் தன்மானத் தலைவனும் முன்வரமாட்டார்கள்.”.

இப்போது தெரிந்து கொள்ளுங்கள்! யாருக்கு விரக்தி? யாருக்கு கோபம்? என்பதை! நாகரிகங்கள் எதுவுமே தெரியாத ஒரு மனுசியோடு இனியும் அரசியல் பண்ண எந்தத் தன்மானத் தலைவனும் முன்வர மாட்டார்கள் என்று பேட்டி கொடுத்த அதே டாக்டர் ராமதாஸ் தற்போது எங்கே போயிருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்!.

ஏமாற்றியது யார்…

கேள்வி: அரசுக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் இலங்கைத் தமிழர்கள் நலனை நீங்கள் கை கழுவிவிட்டதாக டாக்டர் ராமதாஸ் அறிக்கை விட்டிருக்கிறாரே?.

பதில்: தன்னுடைய மகனின் மந்திரி பதவி போய்விடக் கூடாது என்பதற்காக காங்கிரசோடு கூட்டணி என்று கடைசி வரை ஏமாற்றி வந்தது யார் என்பதை தமிழ்நாடு அறியும். இலங்கைத் தமிழர்களுக்காக இரண்டு முறை தி.மு.க. ஆட்சியையே பலி கொடுத்தவர்கள் நாங்கள் என்பதையும் – நானும், பேராசிரியரும் எங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்தோம் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.

ஊரை ஏமாற்ற ஓட்டுப் பெட்டி...

கேள்வி: பா.ம.க. அ.தி.மு.க.விலே கூட்டணி சேருவது பற்றி அந்தக் கட்சியின் பொதுக் குழுவிலே ஓட்டுப் பெட்டி வைத்து வாக்களிக்க செய்து அதன் அடிப்படையிலே தான் அங்கே செல்வதைப் போல முடிவெடுத்ததாக அறிவித்திருக்கிறார்களே?.

பதில்: ஓட்டுப் பெட்டியில் விழுந்த வாக்குகளின் எண்ணிக்கையை எண்ணி அறிவித்த ஒரு சில நிமிடங்களில்; பா.ம.க., அ.தி.மு.க. அணியிலே சேருவதாக எடுத்த நீண்ட தீர்மானத்தை பொதுக் குழுவிலே படித்ததாகவும் – வாக்குகளின் எண்ணிக்கை தெரியாத நிலையில் அவ்வளவு நீளமான தீர்மானத்தை எப்படி முன்கூட்டியே தயாரித்தார்கள் என்றும் செய்தியாளர்களே கிண்டலாகப் பேசிக் கொண்டார்களாம். எனவே ஓட்டுப் பெட்டி, வாக்குகள் எண்ணிக்கை, காங்கிரஸ் சமாதானம், பேச்சுவார்த்தை என்பதெல்லாமே ஊரை ஏமாற்றும் நடவடிக்கைகளாகும்.

கேள்வி: டாக்டர் ராமதாஸ் நேற்று பேசும்போது, தி.மு.க.வில் இருந்து மாவட்டச் செயலாளர்களோ, அமைச்சர்களோ தன்னை வந்து சந்திக்கவில்லை என்பதுதான் அ.தி.மு.க.விற்குச் செல்லக் காரணம் என்பதைப் போலச் சொல்லியிருக்கிறாரே?.

பதில்: அப்படியானால் அ.தி.மு.க. சார்பில் எந்த மாவட்டக் கழகச் செயலாளர் ராமதாசை வந்து சந்தித்தார்? ஒவ்வொரு நாளும் ஏடுகளை எடுத்தால், அவர் அ.தி.மு.க. பக்கம்தான் போகப் போகிறார் என்று செய்தி வந்து கொண்டிருக்கும்போது – எப்படி தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்களோ, அமைச்சர்களோ இவரைச் சென்று சந்திக்க முடியும். அப்படியிருந்தும் கூட மத்திய மந்திரி டி.ஆர். பாலு தன்னை வந்து சந்தித்தார் என்று இவரே சொல்லியிருக்கிறாரே?.

கடந்த சில மாதங்களாக இவர் என்னையும், தி.மு.க.வையும் தாக்கிப் பேசியதையும், அறிக்கை விட்டதையும் பார்த்தாலே இவர் எந்தப் பக்கம் போகப் போகிறார் என்பது எல்லோருக்கும் தெரியுமே! எதற்காக ஊர் மக்களை ஏமாற்ற ஓட்டுப்பெட்டி, தேர்தல் என்ற காட்சிகள் எல்லாம்?.

கேள்வி: பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுவில் பேசிய டாக்டர் ராமதாஸ் “குரு, சாதாரணமாகப் பேசினார் என்பதற்காக, மற்ற கூட்டணி கட்சிக்காரர்களைக் கூடக் கேட்காமல் எங்களை வெளியேற்றினார்கள்” என்று கூறியிருக்கிறாரே?.

பதில்: இதோ; இது தான் “குரு” என்ற நண்பர் பேசிய “சாதாரண” பேச்சு – இது ஒலிநாடாவில் பதிவாகி வெளியிடப்பட்டது – அந்தச் “சாதாரண”ப் பேச்சின் சில பகுதிகள் வருமாறு:

– கடந்த ஊராட்சி மன்றத் தேர்தலில் தி.மு.க.காரன் காட்டிக்கொடுத்ததும், கூட்டிக் கொடுத்ததும் இந்த நாட்டு மக்களுக்கே தெரியும். மானங்கெட்ட பயலுகளா 27 சதவீத இடஒதுக்கீட்டுக்காக போராடுகின்ற ஒரே தலைவன் இந்தியாவிலேயே நமது மருத்துவர் அய்யாதான் என்று உறுதியோடு கூறுகிறேன்.

– கருணாநிதி சொல்கிறான், வன்னிய சமூகத்திற்காக மூன்று அமைச்சர்களைக் கொடுத்திருக்கிறேன் என்று. இரண்டு கோடி மக்கள் உள்ள சமுதாயத்திற்கு மூன்று அமைச்சராம். இரண்டு சதவீதம் உள்ள ஆர்க்காடு வீராசாமிக்கும் மூன்று அமைச்சராம். என்னங்கடா உங்கள் நியாயம்?.

– 2011-ல் தமிழ்நாட்டில் பா.ம.க. ஆட்சியை அமைக்கும். இதை கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, யாராலும் தடுக்க முடியாது. கருணாநிதியே, எங்களுக்கு முகவரி இருக்கிறது. உனக்கு இருக்கிறதா?.

– சிவசங்கருடைய அப்பாவாலேயே ஒன்றும் முடியவில்லை. இவன் நேற்று வந்த சின்னப்பையன் (அதாவது சிவசங்கர், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர். அவரைப் பற்றிப் பேசுகிறார்) மத்திய மந்திரி ராஜா, கருணாநிதியின் எடுபிடி. இவனுக்கு எடுபிடி, பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர். எங்கள் மாவட்டச் செயலாளர், வைத்தி மீது பொய் வழக்கு நீ போடச் சொன்னாயோ அல்லது உன் தலைவர் கருணாநிதி போடச் சொன்னானோ – நீ எந்த வழக்கு வேண்டுமென்றாலும் போடு – ஜெயிலுக்குப் போவது ஒன்றும் புதுசு அல்ல. என்னை ஒரு மயிரும் புடுங்க முடியாது.

எங்கள் கட்சிப் பொறுப்பாளர் மீது வழக்கு போட்டால், இந்த அமைச்சர் ராஜாவோ, சிவசங்கரோ, நீங்க யாரும் உயிரோடு இருக்க முடியாது. உங்கள் குடும்பத்தையே உயிரோடு எரித்து விடுவோம்.

அய்யா ராமதாஸ் அகராதியில் இதுதான் சாதாரணப் பேச்சாம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Source & Thanks : thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.