ஆசிரியைஅடித்ததில் பள்ளி மாணவிசாவு

திருச்சி: தண்ணீர் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மாணவி, ஆசிரியை அடித்ததில் இறந்தது தெரியவந்துள்ளது. ஆசிரியை மற்றும் அதை மறைக்க உதவிய பள்ளி அலுவலர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி., கலியமூர்த்தி கூறியதாவது: மணப்பாறை புனித மரியன்னை துவக்கப்பள்ளியில், இரண்டு நாட்களுக்கு முன் பள்ளிக்கு வந்த மாணவி ஸ்ரீரோகிணி மர்மமான முறையில் தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்தார். இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இறந்த மாணவியின் வகுப்பாசிரியை ஜெயராகினி (25) மேல் சந்தேகம் எழுந்தது. இறந்த மாணவி பள்ளிக்கே வரவில்லை என, அவர் கூறி வந்தது, எங்களுக்கு அவர் மேல் சந்தேகத்தை எழுப்பியது. மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், மதிய உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்தில் தான் இறப்பு நிகழ்ந்துள்ளது; தண்ணீர் தொட்டியில் மூழ்கியதால் இறக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

ஆசிரியை ஜெயராகினியிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. மாணவி விளையாடும் போது மற்றவர்களுடன் தகராறு செய்ததால், பிரம்பால் தலையில் அடித்ததாக கூறினார். அதில் ஸ்ரீரோகிணி மூர்ச்சையாகி இறந்துள்ளார். பின், வகுப்பறையிலேயே தூங்குவது போல் படுக்க வைத்து விட்டு, பள்ளி முடிந்த பின், அங்கு பணியாற்றும் அலுவலர்கள் ஆரோக்கியராஜ் மற்றும் சகாயராஜ் ஆகியோர் மூலம் மாணவியின் பிணத்தை, வேறு பள்ளிக்கு அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் வீசிவிட்டதாகவும் ஒப்புக் கொண்டார்.இதையடுத்து, மாணவி ஸ்ரீரோகிணியை கொலை செய்ததாக ஆசிரியை ஜெயராகினி, அவருக்கு உதவிய பள்ளி அலுவலர்கள் ஆரோக்கியராஜ், சகாயராஜ் ஆகியயோர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கலியமூர்த்தி கூறினார்

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.