இலங்கையில் படுகொலைகளை நிறுத்துவது சர்வதேசத்தின் கடமை: அமெரிக்க பொது உரிமைகள் காப்பாளர் ஜேஸ் ஜக்ஸன்

அமெரிக்காவின் மூத்த பொது உரிமைகள் காப்பாளர் வணக்கத்துக்குரிய ஜேஸ் ஜக்சன், இலங்கையில் படுகொலைகளை நிறுத்துவது சர்வதேசத்தின் கடமை என தெரிவித்துள்ளார்.

லண்டனில் நடைபெற்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் மாநாட்டில் பங்கேற்ற அவர், இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்தநிலையில் இது தொடர்பாக சர்வதேச மட்டத்தின் தெளிவாக்கலை மேற்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

பிரச்சினைகள் யாவும் சிந்தித்து தீர்க்கப்படவேண்டும்,அவை துப்பாக்கி சூட்டினால் தீர்க்கப்படமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைக்கு மேலே துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்து கொண்டிருக்கும் போது பேச்சுவார்த்தை நடத்தமுடியாது. எனவே இலங்கையில் யுத்த நிறுத்தம் அவசியமானதாகும் என வணக்கத்துக்குரிய ஜேஸ் ஜக்சன் வலியுறுத்தியுள்ளார்

வட அயர்லாந்திலும் தென்னாபிரிக்காவிலும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டமைக்கு பொது அமைப்புகளின் பங்கு குறித்து அவர் உரையாற்றினார்

எனவே இலங்கைப்பிரச்சினை விடயத்தில் தமது அமைப்பு உதவும் என்றும் அவர் உறுதியளித்தார்

ஏற்கனவே இலங்கையில் யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்படவேண்டும் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டன், பிரித்தானிய பிரதமர் கோடன் பிரௌன் போன்றோர் அழைப்பு விடுத்துள்ளமையை ஜக்சன் சுட்டிக்காட்டினார்.

கிளர்ச்சிகள் ஒவ்வொன்றும் மற்றும் ஒரு கிளர்ச்சிக்கு வழிவகுக்கும் அதேபோல வெற்றியானது இன்னும் ஒரு வெற்றிக்கு வழிவகுக்கும் என்ற அடிப்படையிலேயே அமெரிக்காவின் 44 வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா தெரிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் சர்வதேச சட்டங்கள் கடைப்பிடிக்கப்படவேண்டும் மனித உரிமைகள், மற்றும் சுயநிர்ணய உரிமைகள் உட்பட்ட பொருளாதார நீதி கடைப்பிடிக்கப்படவேண்டும் என்றும் வணக்கத்துக்குரிய ஜெஸ் ஜக்சன் தமது உரையில் கோரிக்கை விடுத்தார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.