ஈழத்தமிழின படுகொலையை நிறுத்தக்கோரி பிரித்தானியா,கிங்ஸ்டன் பல்கலை மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்

இன்று(27-03-09) பிரித்தானியாவில் உள்ள கிங்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் மாணவர்களால் இலங்கை அரசின் இன அழிப்பு போரை உடனடியாக நிறுத்தக் கோரியும், தமிழர்களைக் கொல்வதை உடனடியாக நிறுத்தக் கோரியும். எங்களுக்கு தமிழ் ஈழம் வேண்டுமென்றும் உரத்துக் கூறிய வண்ணம்….

இருபத்திநான்கு மணிநேரம் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இப்போராட்டத்தில் பல்வேறு பல்கலைக்கழக மாணவர்களும் எழுச்சியுடன் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் ஸ்ரீலங்கா இனவாத அரசின் கொடிய யுத்தத்தைப் பற்றியும், இலங்கையில் தமிழர்கள் வரலாறு பற்றியும் தமது பல்கலைக்கழக மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

மாணவர்கள் தமிழீழ தேசியக்கொடியை ஏந்தியவாறு எழுச்சியுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதன் போது அங்கு வந்த காவல்துறையினர் மாணவர்களின் போராட்டத்திற்கான நோக்கத்தை அறிந்த பின்னர் அமைதியாக நடந்த இப்போராட்டத்திற்காக ஒத்துழைப்பு வழங்கினர்.

அடுத்த கட்டமாக வருகின்ற முப்பத்தியோராம் திகதி மதியம் பன்னிரண்டு மணி முதல் மறுநாள் மதியம் பன்னிரண்டு மணிவரை லண்டன் சவுத்பாங் (South Bank) பல்கலைக்கழக மாணவர்கள், பிரித்தானிய மாணவர்களுடன் இணைந்து இருபத்திநான்கு மணிநேர உண்ணாவிரத எழுச்சிப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் போதும் மறைந்த ஈகைப்போரளியும், முன்னாள் பிரித்தானிய மாணவருமான முருகதாஸ் அண்ணாவின் நினைவஞ்சலியும், யுத்தத்தில் உயிர்நீத்த பொதுமக்களின் நினைவாக அகவணக்கமும் இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து இலங்கை பற்றிய வரலாறும் தற்போதைய நிலவரமும் மாணவர்களால் புகைப்படக் கண்காட்சியாகவும் ஒளிப்படமாகவும் காண்பிக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் றவல்கர் ஸ்குயர் (Trafalgar Square) சென்று மாணவர்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்குபற்றுவர்.

அனைத்து பிரித்தானிய மாணவர்களையும், இதில் கலந்து கொள்ளுமாறு பிரித்தானிய தமிழ் மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.