வன்னி நிலைமை கவலையளிக்கிறது: ஐ.நா

இலங்கையின் சிறிலங்க இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் நடைபெற்றுவரும் பகுதியில் உள்ள அப்பாவி மக்களின் நிலை ‘மிகவும் கவலையளிக்கிறது’ என்று ஐ.நா.சபையின் மனிதாபிமான விவகாரங்கள் பிரிவு கூறியுள்ளது.

இலங்கையில் நிலவிவரும் சூழல் குறித்து ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அதற்குப் பிறகு ஐ.நா.வில் செய்தியாளர்களிடம் பேசிய மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா.வின் துணை பொதுச் செயலர் ஜான் ஹோல்ம்ஸ், போர் நடக்கும் அப்பகுதியில் 1,50,000 முதல் 1,90,000 பேர் வரை சிக்கியுள்ளார்கள் என்றும், அவர்களின் நிலை மிகவும் கவலையளிப்பதாக உள்ளதென்றும் கூறினார்.

போர் நடக்கும் பகுதி 300 சதுர கி.மீட்டரில் இருந்து 58 கி.மீட்டராக சுருங்கிவிட்டது என்றும், அங்கு (வன்னிப் பகுதியில்) 14 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட பகுதி பாதுகாப்பு வலயமாக உள்ளதெனவும் அங்குதான் 1,90,000 தமிழ் மக்கள் தங்கயுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

“எங்களுடைய முதல் வேண்டுகோள் அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதியை நோக்கி வெளியேற விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும்” என்பதே என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படாமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதனை சிறிலங்க அரசு செய்ய வேண்டும் என்றும், அப்பகுதியில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் சிறிலங்க அரசை கேட்டுக்கொள்ளவதாகவும் கூறியுள்ளார்.

இந்தப் போரால் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பாதுகாப்பு வலயங்களில் உள்ளார்கள். அவர்களுக்குத் தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், கழிவறை வசதிகள் என்று எதுவுமில்லை. அவர்களின் இரண்டு வாரத் தேவைகளை நிவர்த்தி செய்ய ஐ.நா.வின் உணவுத் திட்டத்தின் கீழ் 1,000 டன் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை கப்பல் மூலம் அங்கு கொண்டு செல்ல சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஏற்பாடு செய்து வருகிறது என்று கூறியுள்ளார்.

“ஜனவரி மாதத்தில் முதல் போர் நடக்கும் பகுதியில் இருந்து 40,000 பேர் தப்பித்து வந்து பாதுகாப்பு வலயத்திற்குள் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வன்னியிலும், மற்றவர்கள் மன்னார், யாழ்ப்பாணம் பகுதிகளுக்கும் வந்துள்ளனர். வன்னியில் 4,000 கூடாரங்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா.வின் குழைந்தைகள் நிதியம் தற்காலிக மருத்துவ வசதிகளை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ள ஹோல்ம்ஸ், “அதே நேரத்தில் சிறிலங்க அரசு அமைத்துள்ள முகாம்களிலும், தற்காலிக மையங்களிலும் நிலவும் சூழல் எங்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.

சிறிலங்க அரசு ஏற்படுத்தியுள்ள இந்த முகாம்களுக்கு தான் கடந்த மாதம் சென்று வந்ததாகவும், அந்த முகாம்களில் இருந்து வெளியே செல்ல யாருக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை என்றும் ‘ஏற்க முடியாத அளவிற்கு மிக அதிகமான கட்டுப்பாடுகள்’ விதிக்கப்பட்டுளளதாகவும் ஹோல்ம்ஸ் கூறினார்.

Source & Thanks : tamil.webdunia.

Leave a Reply

Your email address will not be published.