பிரசவம்: ரயில்வே கேட் அடைப்பு-தாய், சேய் பலி

தென்காசி: பிரசவத்தின் போது வலிப்பு ஏற்பட்டதை அடுத்து நெல்லை மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லும் வழியில் ரயில்வே கேட் அடைக்கப்பட்டதால் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அனந்தபுரத்தை சேர்ந்த முருகன். இவரது மனைவி கண்ணம்மாள். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தென்காசியை அடுத்த வடகரை உதயசெல்வன்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு பிரசவத்துக்காக வந்தார்.

இந்நிலையில் நேற்று கண்ணம்மாளுக்கு பிரவச வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை வடகரையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு கண்ணாம்மாளுக்கு ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. இந்நிலையில் தாய்க்கும் திடீரென வலிப்பு ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்ததால் உரிய நேரத்தில் நெல்லை செல்ல முடியவில்லை.

இந்நிலையில் வலிப்பு அதிகமானதை தொடர்ந்து கண்ணம்மாள் பாதி வழியில் இறந்தார். இதையடுத்து அவரது உடல் அதே ஆம்புலன்சில் தென்காசி அரசு மருத்துவமனைக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது.

மருத்துவமனை நிர்வாகத்தின் தாமதம் மற்றும் ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்ததால் தான் கண்ணம்மாளை காப்பாற்ற முடியாமல் போய்வி்ட்டது என்று கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் தென்காசி இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பு, பிரகாஷ் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து உறவினர்கள் சமாதானமடைந்து உடலை வாங்கி சென்றனர்.

Source & Thanks : thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.