இலங்கைக்கு உணவுப் பொருள்களை அனுப்ப தமிழக அரசு முடிவு

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட 40 ஆயிரம் தமிழர் குடும்பங்களுக்கு ஏப்ரல் 15-ம் தேதிக்குள் உணவுப் பொருள்கள் அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு செய்துளளது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்புவது தொடர்பாக தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி தலைமையில், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிவாரணப் பொருள்களை 40 ஆயிரம் சிப்பங்களாக அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு சிப்பத்தில் புழுங்கல் அரிசி முதல் தரம் 15 கிலோ, துவரம் பருப்பு 2 கிலோ, சர்க்கரை 1 கிலோ, தேயிலை 100 கிராம், டம்ளர் 2, வேட்டி, புடவை, 2 போர்வைகள், சலவைச் சோப்பு 250 கிராம் ஆகியன உள்ளடக்கி இருக்கும்.

நிவாரணப் பொருள்களை பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு ஏப்ரல் 15-ம் தேதிக்கு முன்னர் அனுப்புவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

முன்னதாக இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசின் சார்பில் ரூ.50.53 கோடி நிவாரணமாகத் திரட்டப்பட்டது. அத்தொகையில் இருந்து இதுவரை ரூ.10.07 கோடிக்கான நிவாரணப் பொருள்கள், இந்திய அரசின் அனுமதியோடு இலங்கையில் உள்ள இந்திய தூதகரத்தின் மூலம் அங்குள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் பன்னாட்டுக் குழு மூலமாக தமிழ் மக்களுக்கு முறையாக விநியோகிக்கப்பட்டன.

தற்போது 40 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான உணவுப் பொருள்கள், சமையல் பாத்திரங்கள் ஆகியவை அனுப்பப்பட உள்ளன.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.