இலங்கை இனப்படுகொலை, பொதுத்தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்: தொல்.திருமாவளவன் கருத்து

இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலை இந்திய பொதுத்தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முல்லைத்தீவில் நடைபெறும் இனப்படுகொலை மனிதநேயமுள்ள ஒவ்வொருவரையும் மிக பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

கடந்த 3 மாதங்களில் 9,985 பேர் உயிரிழந்தோ, காயப்பட்டோ பாதிக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. பேரவையின் மனித உரிமை அமைப்பின் ஆவணம் சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பாக அண்மையில் டெல்லிக்கு வந்திருந்த ஐ.நா.மனித உரிமை அமைப்பின் செயலாளர் நவநீதம்பிள்ளை இந்த அதிர்ச்சியான உண்மையை வெளியிட்டிருக்கிறார்.

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜியை சந்தித்தபோது ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்த இனப்படுகொலையை சுட்டிக்காட்டி இருப்பதுடன், ஈழத்திலும் மியான்மாரிலும் தமிழினத்துக்கு எதிராக நடைபெறும் மனிதநேயமற்ற அரசு பயங்கரவாதத்தை இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது சரியில்லை என்றும் அவற்றில் உடனடியாக தலையிட்டு, தீர்வுக்கான முயற்சியை எடுக்க வேண்டும் எனவும், தெற்காசிய மண்டலத்தில் மனித உரிமைகளை பாதுகாப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும், அத்தகைய பொறுப்பும், கடமையும் இந்தியாவுக்கு உள்ளதாகவும், சுட்டிக்காட்டியிருப்பதாக தெரியவருகிறது.

இச்சந்திப்பு தொடர்பாக இந்திய அரசோ, பிரணாப் முகர்ஜியோ இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் தொடர்ந்து இந்திய அரசு அமைதி காப்பதும் வேடிக்கை பார்ப்பதும் மனிதநேயமுள்ள ஒவ்வொருவரையும் ஆழ்ந்த கவலைக்குள் ஆழ்த்துகிறது.

இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முல்லைத்தீவில் நடைபெறும் கொடூரமான இனப்படுகொலையை, மனிதகுல பேரழிப்பை வேதனையுடன் சுட்டிக்காட்டியிருப்பதுடன் சிங்கள அரசை காமன்வெல்த் நாடுகள் அமைப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்க நாட்டின் ஜனநாயக கட்சியின் குடியரசு தலைவருக்கான முன்னாள் வேட்பாளர் கேரியும் முல்லைத்தீவில் நடைபெறும் மனித பேரழிப்பை கடுமையாக கண்டித்துள்ளார். இவ்வாறு சர்வதேச சமூகத்தையே உலுக்கி இருக்கிற சிங்கள இனவெறியர்கள் நடத்தும் மனித பேரவலம் தொடர்பாக இந்திய அரசு கருத்து ஏதும் கூறாமல், தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமல் சிங்களவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நடந்துகொள்வது சகித்துக்கொள்ளவே முடியாததாக உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்திலும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. தமிழக மக்களை அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் ஆளாக்கியிருக்கிற இந்த இனப்படுகொலை பொதுத்தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, இந்திய அரசோ, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியோ இதில் விரைந்து தலையிட்டு போர் நிறத்தத்திற்குரிய அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்றும் நவநீதம்பிள்ளை தெரிவித்திருப்பதை போல இந்திய அரசு தனது கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் திருமாவளவன் கூறியுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.