இலங்கைக்கு இராணுவ உதவி வழங்கப்பட வில்லை: இந்திய கடற்படை தளபதி தகவல்

இலங்கைக்கு, இராணுவ உதவி வழங்க படவில்லை என்று, இந்திய கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா கூறினார். இராமநாதபுரம் கடற்படை விமானத்தளத்தை நேற்று திறந்து வைத்து பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் உச்சி புளி என்ற இடத்தில், இந்திய கடற்படைக்கு சொந்தமான விமான தளம் இருக்கிறது. இங்குள்ள ஓடுதளம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த தளத்துக்கு “ஐ.என்.எஸ். பருந்து” என்று பெயரிடப்பட்டு இருக்கிறது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்திய கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா, கிழக்கு கடற்படை துணை தளபதி நிர்மல் வர்மா கலந்து கொண்டனர். புதிய விமான தளத்தை மதுலிகா வர்மா திறந்து வைத்தார். கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா, ஐ.என்.எஸ். பருந்து தளத்தின் பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் இந்திய கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கைக்கு இராணுவ உதவி வழங்கி இருப்பதாக தமிழ்நாட்டில் சிலர் கூறி வருகிறார்கள். ஆனால் அப்படி எந்த உதவியும் வழங்கவில்லை. இது போன்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது.

விடுதலை புலிகள் இயக்கம், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கம். எனவே அந்த இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட முடியாது.

சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்றும் போது, இதன் வழியே கப்பல்கள் இந்திய கடற்கரைக்கு நெருக்கமாக செல்லும். அப்போது, அந்த கப்பல்களில் இருந்து, நாம் விரும்பாதவர்கள், இறங்கி இந்திய கடற்பகுதிக்கு வரக்கூடிய ஆபத்து உண்டு. மேலும் சுற்றுச்சூழல் மாசுபடுதல் போன்றவையும் ஏற்படலாம். இவற்றை தடுப்பது பற்றி ஆலோசித்து வருகிறோம்.

மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது. சர்வதேச எல்லையை தாண்டி மீனவர்கள் செல்லக்கூடாது. அவ்வாறு செல்லும் மீனவர்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

இந்திய கடல் பகுதியில் சீன கப்பல்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டு இருக்கிறது. என்றாலும், அவர்களால் நமக்கு ஆபத்து இல்லை. இவ்வாறு கடற்படை தளபதி கூறினார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.