வன்னியில் பொதுமக்கள் தொடர்ந்தும் பாதுகாப்பற்ற சூழ்நிலையுடன் வாழ்கின்றனர்: ஐக்கிய நாடுகள் சபை

வன்னியில் இடம்பெயர்ந்த பாதுகாப்பு வலயங்களில் உள்ள பொதுமக்கள், சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சுகள் மற்றும் உணவு, சுத்தமான நீர், மற்றும் மருந்து பொருட்களின் தட்டுப்பாடுகள் காரணமாக தொடர்ந்தும் பாதுகாப்பற்ற சூழ்நிலையுடன் வாழ்வதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்த தகவல்களை நேற்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் நாளாந்த செய்தியாளர் சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் பேச்சாளர் வெளியிட்டிருந்தார்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் கடந்த 22 ம் திகதி இருவார மருந்து பொருட்களை விநியோகித்திருந்தனர்.

அத்துடன் தற்போது உலக உணவுத்திட்டத்தின் கீழ் 1000 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்களை அங்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த உணவு விநியோகம் இந்த வார இறுதியில் இடம்பெறலாம் என அவர் இதன் போது தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளும் பொதுமக்களை, பாதுகாப்பு பிரதேசங்களுக்கு அனுப்பாமல் தடுத்து வைத்துள்ளனர்.

இதற்கிடையில் வன்னியில் இருந்து வந்து வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த வருடம் ஜனவரியில் இருந்து மார்ச் மாதம் 23ம் திகதி வரையில் 44 ஆயிரத்து 756 பேர் மோதல் பிரதேசங்களில் வெளியேறியுள்ளனர். இவர்கள் வவுனியா மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதனை அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.

மொத்தமாக 3 ஆயிரத்து 701 கூடாரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தினால் அவர்களுக்கான தற்காலிக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் நேற்று தெரிவித்துள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.