இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாக ‘தினமலர்’ : வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி பெருமிதம்

கோவை: “”குற்றச் செய்திகள், அரசியல் செய்திகள் மட்டுமின்றி, சமுதாயத்திற்கு பயனுள்ள, வளர்ச்சிக்கும், வளத்திற்கும் தேவையான செய்திகளை அதிகளவில், “தினமலர்’ வெளியிட்டு வருகிறது.

இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாக, “தினமலர்’ விளங்கி வருகிறது,” என “தினமலர்’ நாளிதழ் வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி பேசினார். “தினமலர்’ நாளிதழ், எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து நடத்தும், பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று துவங்கியது. கோவை, ஆவாரம்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடக்கும் இந்த மூன்று நாள் கண்காட்சியை, எஸ்.ஆர்.எம்., பல்கலை வேந்தர் பச்சமுத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், “தினமலர்’ நாளிதழ் வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி பேசியதாவது: “தினமலர்’ நாளிதழ், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையும் இணைந்து நடத்தும், “வழிகாட்டி’ நிகழ்ச்சியை, எஸ்.ஆர்.எம்., பல்கலை வேந்தர் டாக்டர் பச்சமுத்து துவக்கி வைத்துள்ளார். இன்ஜினியரிங், மருத்துவம், வேளாண்மை என பல துறை சார்ந்த கல்வியை, தரமுடன் நடத்தி வருகிறார் பச்சமுத்து. “அவுட் லுக்’ ஆங்கில இதழ் நடத்திய சர்வேயில், இந்தியாவிலேயே ஐந்தாவது சிறந்த கல்வி நிறுவனமாக இந்த பல்கலை திகழ்கிறது.
“தினமலர்’ நாளிதழ், 11 ஆண்டுகளாக, “வழிகாட்டி’ நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து, இந்த சேவையை செய்து வருகிறது. குற்றச் செய்திகளையும், அரசியல் செய்திகளையும் மட்டும் தராமல், சமுதாயத்திற்குப் பயனுள்ள, வளர்ச்சிக்கும், வளத்திற்கும் தேவையான செய்திகளையும் வெளியிட்டு வருகிறது. இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாக, “தினமலர்’ விளங்கி வருகிறது.
“தினமலர்’ நாளிதழ், 1951ம் ஆண்டு செப்டம்பரில் துவக்கப்பட்டது. தற்போது 59வது ஆண்டில், தமிழ்நாடு மற்றும் புதுவையில் 10 பதிப்புகள் வெளி வருகிறது. சமூக அக்கறை கொண்ட இந்த நாளிதழ், நெல்லை, குமரி மாவட்டங்களின் வளர்ச்சிக்காக, ரயில் திட்டங்களைக் கொண்டு வர தொடர்ந்து செய்திகளை பிரசுரித்து வந்தது. இந்த கோரிக்கை வலுப்பெற்று, கன்னியாகுமரி, நெல்லை ரயில், ரயில்வே ஸ்டேஷன் உருவானது.
திருவனந்தபுரத்தில் இயங்கி வந்த “தினமலர்’ நாளிதழ், 1956ம் ஆண்டில் நெல்லைக்கு மாற்றம் பெற்று செயல்படத் துவங்கியது. தூத்துக்குடி ஆழ்கடல் திட்டத்தில், “தினமலர்’ நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் கவனம் செலுத்தினார். 1967ம் ஆண்டில், இந்த திட்டம் கைவிடப்பட்டு விட்டது என்ற சூழ்நிலை நிலவியது. இச்சமயத்தில், பொது நல அமைப்புகள், தொழிலதிபர்கள், வர்த்தக நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகளிடம் திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி, செய்திகளை வெளியிட்டது. ஆழ்கடல் திட்டத்தால் சுற்றுப்பகுதிகளில் ஏற்படும் வளம், தொழில் வளர்ச்சி குறித்து விளக்கப்பட்டது.
இதையடுத்து, “எக்காரணம் கொண்டும் இந்த திட்டம் கைவிடப்பட மாட்டாது’ என, பிரதமராக இருந்த இந்திரா காந்தி உறுதியளித்தார்.
ஏராளமான சமுதாயப் பணிகளுடன், கல்விப் பணிக்கும் “தினமலர்’ நாளிதழ் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. முதன் முதலில், மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற, எஸ்.எஸ்.எல்.சி., பாடங்களை வெளியிட்டது. மாதிரி வினா – விடையை வெளியிட்ட முதல் நாளிதழ் என்ற பெருமை, “தினமலர்’ நாளிதழுக்கே உண்டு.

தரமான ஆசிரியர்களைக் கொண்டு, இந்த வினா – விடையை வெளியிட்டது. 1968ம் ஆண்டு முதல் 41 ஆண்டுகள், சீரிய முறையில் கல்விப் பணியாற்றி வருகிறது. மாணவர்கள் பயமின்றி தேர்வை எதிர்கொள்ள, “ஜெயித்துக் காட்டுவோம்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி, “நம்மால் தேர்வில் சாதிக்க முடியும்’ என்ற தன்னம்பிக்கையூட்டி வருகிறது.
மாணவர்களுக்கு அறிவு வளர்க்கும் நாளிதழ் என போற்றப்படும், “தினமலர்’ நாளிதழ், பிளஸ் 2 மாணவர்களுக்கு, படிப்பு முடித்தவுடன் என்ன படிக்கலாம்; எந்த படிப்பை தேர்வு செய்யலாம்; எந்த கல்லூரி சிறந்த கல்லூரி என அறிய, “வழிகாட்டி’ நிகழ்ச்சி பேருதவியாக உள்ளது.
கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து வழிகாட்டி நிகழ்ச்சியில், 165க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்றுள்ளன. இந்த கல்லூரிகளில் என்ன படிக்கலாம், எந்த படிப்பை தேர்வு செய்யலாம், எந்த கல்லூரிக்கு செல்லலாமென மாணவர்களுக்கு வழிகாட்டுவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். இந்த நிகழ்ச்சியால், 35 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவர்.
மாணவர்களுக்கென வாரந்தோறும் கல்வி மலர், வேலைவாய்ப்பு கல்வி மலர், கம்ப்யூட்டர் மலர் என மூன்று பகுதிகளை தினமலர் நாளிதழ் அளித்து வருகிறது. தவிர, “கல்வி மலர் டாட் காம்’ என்ற இணைய தளத்தால், நான்கு லட்சம் மாணவர்கள் பங்கேற்று பயன் பெற்றுள்ளனர். கல்வித் தகவல்களின் சுரங்கமாக இந்த இணைய தளம் செயல்பட்டு வருகிறது. அனைத்து கல்வித் தகவல்களையும் ஒரே இடத்தில் பெற இது வாய்ப்பாக உள்ளது. தேவையான கல்லூரிகளின் விண்ணப்பங்களையும், “டவுண் லோடு’ செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும். கல்விக் கடன் பெற தொலைபேசி எண்களுடன் தகவல்கள் தரப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள, தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டு, ஆலோசனை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
அறிவுத்திறனை மேம்படுத்துவதோடு, வாழ்க்கைக்கும் வழிகாட்டியாக இருப்பதால், “தினமலர்’ நாளிதழுக்கு மாணவர்கள் நன்றிக் கடன்பட்டவர் களாக உள்ளனர்.
வாசகர்களுடன் நல்லுறவு கொண்டுள்ள “தினமலர்’ நாளிதழ், அனைவரும் சிறப்பான கல்வியைப் பெற வாழ்த்துகிறது. வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு “தினமலர்’ வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி பேசினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.