அ.தி.மு.க. – பா.ம.க. கூட்டணி : பொதுக் குழுவில் முடிவு

வீரகேசரி இணையம் 3/26/2009 3:08:56 PM – மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது என்று இன்று நடந்த பா.ம.க. பொதுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்திக்கிறார். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் வழங்கப்படவுள்ளது. பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர காங்கிரஸ் மேற்கொண்ட இறுதி முயற்சியும் தோல்வியில் முடிந்து விட்டதையடுத்து பாமக இன்று இந்த முடிவை அறிவித்தது.

முன்னதாக தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தங்களது கட்சி போட்டியிடப் போகும் தொகுதிகளின் நிர்வாகிகளை அழைத்து தீவிர ஆலோசனை நடத்தினார்.

வேட்பாளர்களாக யாரை நிறுத்தலாம் என்பது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு புதுச்சேரி, ஆரணி, கள்ளக்குறிச்சி, சிதம்பரம், தர்மபுரம், காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இவைதவிர ஒரு ராஜ்யசபா சீட்டையும் பாமகவுக்கு அதிமுக வழங்குகிறது. இன்று காலை 11.00 மணிக்கு சென்னை அருகே உள்ள வானகரத்தில் ஸ்ரீவாரி வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவுடன் இணையும் முடிவு எடுக்கப்பட்டது.

அதிமுகவுக்கு 2,453-திமுகவுக்கு 117:

இக்கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொரு பொதுக்குழு உறுப்பினரிடமும் ஒரு சீட்டு தரப்பட்டது. அதில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

இதில் 2,453 பொதுக் குழு உறுப்பினர்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என வாக்களித்தனர். 117 பேர் திமுக அணியில் சேரலாம் என்று வாக்களித்துள்ளனர். 10 பேர் நடுநிலை வகித்துள்ளனர். ஒரு செல்லாத வாக்கும் பதிவாகியுள்ளது. இதையடுத்து அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர் ராமதாஸ், இன்று மாலை போயஸ் தோட்டம் சென்று ஜெயலலிதாவை சந்திப்பார் என பாமக வட்டாரம் கூறுகிறது. இந்த முடிவைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவிகளை அன்புமணி ராமதாஸும், வேலுவும் ராஜினாமா செய்யவுள்ளனர்.

சோனியா அவசர ஆலோசனை:

இந் நிலையில் கூட்டணி விவகாரம் குறித்து டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் இன்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டம் நடந்தது.

இதில் லாலு பிரசாத், பாமக விவகாரம், விஜய்காந்தை இணைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் உத்தரப் பிரதேச தொகுதிப் பங்கீட்டு விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி, திக்விஜய்சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர். E-mail to a friend

Source & Thanks : virakesari

Leave a Reply

Your email address will not be published.