அமெரிக்க நடவடிக்கையால் மெதுவாக முன்னேறுகிறது பங்குச் சந்தை- சேதுராமன் சாத்தப்பன் –

சந்தை முன்னேறுகிறது; மெதுவாக முன்னேறுகிறது; 10,000 புள்ளிக்கு அருகில் சென்று முத்தமிட்டு கீழே இறங்கி வந்து விட்டது. ஏறு மயில் ஏறு என்கிறபடி கடந்த 15 நாட்களாக ஏறிக்கொண்டே இருக்கிறது.முக்கிய காரணம் என்ன? உலகளவில் சந்தைகள் மேலே சென்றது தான்.


ஏன் மேலே சென்றன? அமெரிக்காவின் பேக்கேஜ் தான் காரணம். அமெரிக்கா, தனது நாட்டிலுள்ள கம்பெனிகள், வங்கிகளின் பொருளாதார சிக்கல்களை தீர்க்க, பேக்கேஜ் மேல் பேக்கேஜாக அறிவித்துக் கொண்டே இருக்கிறது.அது, அங்கு சந்தைகளை மேலே கொண்டு சென்றன. அதனால், குறிப்பாக இந்திய சந்தைகளும் ஒரேயடியாக மேலே சென்றன. மும்பை பங்குச் சந்தை 457 புள்ளிகள் மேலே சென்றது.நேற்று முன்தினம் சந்தைகள் மேலேயே தான் துவங்கின. பின்னர், மேலும், கீழுமாகத் தான் இருந்தது. முடிவாக, 47 புள்ளிகள் கீழே சென்று முடிந்தது. டாடாவின் நானோவை பார்த்த அனைத்து வெளிநாட்டினரும் பாராட்டியதும் சந்தைக்கு காலையில் ஒரு புத்துணர்ச்சியை நிச்சயம் தந்திருக்கும். ஆனால், அது பின்னர் நீடிக்கவில்லை.நேற்று துவக்கம் கீழேயே இருந்தது. பின் மேலே சென்றது. ஒபாமா விடுத்த அறிக்கையாலும் சந்தைகள் மேலே சென்றன. இருந்தாலும், சந்தைகள் நேற்றைய தினம் மேலும், கீழும் இருந்தது. இதற்கு வேறு ஒரு காரணம் என்னவென்றால், இன்று முடிவுபெற இருக்கும் டிரைவேட்டிவ் சந்தைகளின் முடிவுகள் தான்.மெட்டல், கட்டுமானத்துறை, வங்கித்துறை ஆகியவை மேலே சென்றன. டி.எல்.எப்., கட்டுமானக் கம்பெனியின் நான்கு புதிய மால்கள், தீபாவளிக்குள் திறக்கப்படும் என்று தெரிவித்திருப்பதால் அந்த கம்பெனியின் பங்குகள் மேலே சென்றன. கச்சா எண்ணெய் விலை கூடிவருவதால் அது சம்பந்தப்பட்ட பங்குகள் மேலே சென்றன.இறுதியாக மும்பை பங்குச் சந்தை 196 புள்ளிகள் கூடி 9,667 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 45 புள்ளிகள் கூடி 2,984 புள்ளிகளுடனும் முடிந்தது. கடந்த ஒன்றரை மாதத்தின் அதிகபட்சத்திற்கு சென்றுள்ளது.டாலர் மதிப்பு: டாலர் மதிப்பு சிறிது சிறிதாக வருங்காலங்களில் குறையும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். பெரிய அளவு குறைவு உடனடியாக இல்லாவிடினும் சிறிது சிறிதாக இருக்கலாம். குறைவதற்கு இன்னொரு காரணம், ஏற்றுமதியாளர்கள் பயத்தில் சேமித்து வைத்திருந்த டாலர்களையெல்லாம் விற்று ரூபாய் ஆக்கியது தான்.டாலர் மதிப்பு கூடும் போது எல்லாவற்றையும் டாலர் அக்கவுன்டில் வைத்திருந்தனர். மதிப்பு குறைந்து கொண்டு வருகிறது என்று தெரிந்ததும் உடனடியாக விற்றுக் காசாக்குவோம் (ரூபாயாக்குவோம்) என்ற நினைப்புத் தான் பலருக்கு.தங்கம் தங்கமாகவே உறுதியாக இருக்கிறது. 15,000 அளவிலேயே இருக்கிறது. பங்குச் சந்தை மேலே செல்வதாலும், கச்சா எண்ணெய் மேலே செல்வதாலும் தங்கத்தில் இருக்கும் முதலீடுகள் சிறிது மாறவாய்ப்புகள் உள்ளன.ஒரு காலத்தில் நிறுவனங்களுக்கு தலைவராவது என்றால் அனைவருக்கும் மிகவும் விருப்பமாக இருந்தது. ஆனால், சத்யம் விவகாரத்திற்கு பின், நிறைய நிறுவனங்களின் தலைவர்கள் விலகி வருகின்றனர். விலகுபவர்களிலும் 90 சதவீதம் பேர் உடல்நிலை சரியில்லை என்ற காரணம் காட்டி விலகுகின்றனர். 200 பேர் வரை சமீபத்தில் விலகி உள்ளனர்.கடந்த 9ம் தேதி அன்று சந்தை கடந்த மூன்று ஆண்டின் கீழ் நிலையை எட்டியிருந்தது. அதாவது 8,160 புள்ளிகளை. தற்போது 9,667 புள்ளிகளை எட்டியுள்ளது. 17 நாட்களில் 18 சதவீதம் வரை லாபம் தந்துள்ளது. அது தான் பங்குச் சந்தை. சந்தையை சிறிது நாட்களாக பார்க்காதவர்கள், பேசாதவர்கள் எல்லாம் மறுபடி பார்க்கத் துவங்கி விட்டனர், பேசத் துவங்கிவிட்டனர். வடிவேலு பாணியில் சொல்லப்போனால், வந்துட்டாங்கய்யா, வந்துட்டாங்கய்யா… என்று சொல்லலாம்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.