நிதி சுமை-நானோ மூலம் தப்பிக்கும் டாடா

மும்பை: நானோ கார் மூலம் கிடைக்கும் தொகையை பயன்படுத்தி கடந்த ஆண்டு டாடா நிறுவனம் வாங்கிய ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனஙகளுக்கான பணத்தை செலுத்தும் என்று தெரிகிறது. இதன்மூலம் டாடா தனது நிதி பிரச்சினைகளை சமாளிக்கவுள்ளது.

டாடா நிறுவனம் கடந்தாண்டு பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னதாக இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார் தயாரிப்பு நிறுவனங்களை ரூ. 9,200 கோடிக்கு கையகப்படுத்தியது. வரும் ஜூன் மாதம் இந்நிறுவனங்களை வாங்கியதற்கான ஒப்பந்தத்த தொகையின் ஒரு பகுதியை டாடா கொடுக்க வேண்டியுள்ளது.

ஆனால், 2008ம் ஆண்டு கணக்கின்படி டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தில் கைவசம் ரொக்கமாக ரூ. 500 கோடி மட்டுமே இருந்தது. இதை நானோ விற்பனையின் மூலம் சரிகட்ட டாடா முயற்சி மேற்கொண்டுள்ளது.

நானே கார் வாங்க விரும்புபவர்களுக்கு ரூ. 300 என்ற விலையில் விண்ணப்பங்களை வினியோகித்து வருகிறது டாடா மோட்டர்ஸ் நிறுவனம். மக்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பால் லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் குவியும் என்று தெரிகிறது.

இவர்களில் குலுக்கல் முறையில் முதலில் ஒரு லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முதலில் கார் வழங்கப்பட இருக்கிறது. கார் வாங்க விரும்புபவர்களை ஏப்ரல் 9ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் ரூ. 95,000 வைப்பு தொகையை செலுத்த வேண்டும்.

இவர்களுக்கு கார்கள் வரும் ஜூலை மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா இந்தாண்டு 50,000 முதல் 60,000 நானோ கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. எப்படியும் 5 லட்சம் பேராவது விண்ணப்பிப்பார்கள் என இந்நிறுவனம் எதிர்பார்ப்பதால் அடுத்த ஆண்டு கார் உற்பத்தியை 2.5 லட்சமாக உயர்த்த முடிவு செய்துள்ளது.

5 லட்சம் கார்கள் விற்பனை செய்வதென்றால் டாடாவுக்கு முன்கூட்டியே வைப்பு தொகையாக ரூ. 5,000 கோடி கிடைக்கும். இதை வைத்து டாடா தனது நிதி பிரச்சினைகளை எளிதாக சமாளித்துவிடும் என தெரிகிறது.

இது குறித்து அமெரிக்காவின் மெரிலிஞ்ச் வங்கியை சேர்ந்த நிபுணர்கள் அருண் மற்றும் குணால் தயாள் கூறுகையில், டாடா நிறுவனத்துக்கு விண்ணப்ப கட்டணமே பெரிய லாபமாக இருக்கும். அவர்கள் கார் கொடுக்க தாமதமானால் 1 ஆண்டு வைப்பு தொகைக்கு 8.5 சதவீதமும், 2 ஆண்டு வைப்பு தொகைக்கு 8.75 சதவீதமும் வட்டி தருவதாக கூறியுள்ளார்கள். இதனால் பணத்தை போட்டவர்கள் திரும்பப் பெற எண்ண மாட்டார்கள். இதனால் அவர்களிடம் பணபுழக்கம் தாராளமாக இருக்கும் என்கிறார்.

Source & Thanks : /thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.