9 வேட்பாளர்களை அறிவித்தார் விஜய்காந்த்-தேமுதிக தனித்துப் போட்டி?

சென்னை: மக்களவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

நிறைந்த அமாவாசை தினமான இன்று ஜோதிடர்களின் ஆலோசனைப்படி இன்று தனது கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டார்.

இந்தப் பட்டியலில் 9 பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 2 பேர் பெண்கள் ஆவர். அந்த வேட்பாளர்கள் விவரம்:

திண்டுக்கல்-ப. முத்து வேல்ராஜ்

கன்னியாகுமரி- எஸ். ஆஸ்டின்

நெல்லை- எஸ். மைக்கேல் ராயப்பன்

விருதுநகர்- க. பாண்டியராஜன்

சேலம்- அழகபுரம் மோகன்ராஜ்

திருச்சி- ஏ.எம்.ஜி. விஜயகுமார்

மதுரை- ஆர்.எம். முத்துலட்சுமி

தேனி- எம்.சி. சந்தனம்

நாமக்கல்-என். மகேஷ்வரன்

பட்டியலை வெளியிட்ட பின் விஜயகாந்த் விமானம் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டார். அங்கிருந்து கன்னியாகுமரிக்கு காரில் சென்று இன்று முதல் தனது தேர்தல் பிரசாரத்தை முறைப்படி தொடங்கினார்.

ஏற்கனவே காஞ்சிபுரத்தில் அவர் பொதுக் கூட்டத்தில் பேசியிருந்தாலும் நிறைந்த அமாவாசை தினமான இன்று தான் கன்னியாகுமரியில் அவரது பிரச்சாரப் பயணம் முறைப்படி தொடங்கியது.

இதுவரை கூட்டணியா, இல்லையா என்பது குறித்து அவருக்கு மட்டுமே விளங்கும் வகையில் பேசி வந்தார் விஜய்காந்த். இந் நிலையில் தனது முதல் வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார்.

கடந்த 3 நாட்களாக அவர் வேட்பாளர் நேர்காணலை அவர் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸுடன் ரகசிய உடன்பாடு…

இதற்கிடையே திமுக கூட்டணிக்கு வராவிட்டாலும் குறைந்தபட்சம் தனக்கு மட்டுமாவது விஜயகாந்த் ஆதரவு தர வேண்டும் என காங்கிரஸ் கட்சி முயன்று வருகிறது.

திமுக அணியில் காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில், மட்டும் போட்டியிடாமல் பார்த்துக் கொள்ளுமாறு விஜயகாந்த்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால்தான் நான் அடையாளம் காட்டும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று பூடகமாக பேசி வைத்துள்ளார் விஜயகாந்த்.

தேமுதிக நிற்காத தொகுதிகளில் அவர் காங்கிரஸ் வேட்பாளர்களை அடையாளம் காட்டக் கூடும் எனத் தெரிகிறது.

இன்று களியக்காவிளை அருகே பிரசாரத்தை தொடங்கிய விஜய்காந்த் குமரி தேமுதிக வேட்பாளர் ஆஸ்டினுக்கு ஆதரவு திரட்டினார்.

தொகுதியின் பல்வேறு பகுதிகளில் ஆதரவு திரட்டும் விஜய்காந்த் நாளை நாகர்கோவில் புத்தேரியில் விஜயகாந்த் பிரசாரத்தை தொடங்குகிறார். இறச்சக்குளம், துவரங்காடு பகுதிகளில் ஆதரவு திரட்டும் அவர் ஆரல்வாய்மொழி வழியாக நெல்லை நாடாளுமன்றத் தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்கிறார்.

மற்ற கட்சிகள் இன்னும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் விஜயகாந்த் தான் முதல் ஆளாக தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.