உதயன்” அலுவலகம் மீதான தாக்குதல்; விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணை: பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம் தெரிவிப்பு

உதயன்” அலுவலகம் மீது நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட “கிரனேட்” தாக்குதல் தொடர்பாக விசேட பொலிஸ் குழு ஒன்று நேற்றுக் காலை சம்பவ இடத்தில் துருவித் துருவி விசாரணைகளை மேற்கொண்டது.

குண்டு வீழ்ந்து வெடித்த பகுதியில் பரிசோதனைகளை நடத்திய பொலிஸ் குழு, குண்டு சிதறல்கள் சிலவற்றை மீட்டது. நேற்றுக் காலை சம்பவ இடத்துக்கு விஜயம் மேற்கொண்ட யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லலித் பிரேமரத்தின தலைமையிலான குழு ஒன்றும் விசாரணைகளை மேற்கொண்டது.

சம்பவ இடத்தை அக்குழுவினர் படம் எடுத்துச் சென்றனர்.

யாழ். சிவில் நிர்வாக அதிகாரி மேஜர் நிசங்க தலைமையிலான இராணுவத்தினர் குழுவும் சம்பவ இடத்தில் நேற்று விசாரணை மேற்கொண்டது.

கண்டனம்

இந்தத் தாக்குதலை பிரான்ஸை தலைமையகமாக் கொண்ட எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.

“உதயன்” ஆசிரியர் என். வித்தியாதரன் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் முடிவதற்கு முன்னர் பத்திரிகை விநியோகத்தை நிறுத்துவதற்கான மற்றொரு முயற்சியாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது.

“உதயன்”, “சுடர் ஒளி” ஊழியர்களுக்கு எதிரான வன்செயல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் மேலும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடத்திய சம்பவத்துக்கு பொறுப்பானவர்களை கைது செய்யும் நோக்குடன் விசாரணைகளை முன்னெடுத்து சம்பந்தப்பட்டவர்களை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தைக் கோருகிறோம் என்று எல்லையற்ற செய்தியாளர் அமைப்பின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks ; tamilwin

Leave a Reply

Your email address will not be published.